நாம்காம், ஜூன் 1- இந்தியா அருகே அமைந்துள்ள நாடு மியான்மா. இந்நாட்டில் ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் உள்நாட்டுப்போர் நீடித்து வருகிறது.
இந்நிலையில், அந்நாட்டின் ஷஹன் மாகாணம் நாம்காம் நகரில் கங்ட்அப் என்ற கிராமம் அமைந்துள்ளது. சீன எல்லையில் அமைந்துள்ள இந்த பகுதி உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஒரு கட்டடத்தில் சுரங்கப் பணிகளுக்காக வெடி பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. அந்த வெடிபொருட்கள் நேற்று திடீரென வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் வெடிபொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கட்டடம், அதன் அருகே இருந்த குடியிருப்புகள் இடிந்து விழுந்தன. இந்த வெடி விபத்தில் குழந்தைகள் உள்பட 45 பேர் உயிரிழந்தனர். மேலும், 70 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாய மடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனை அனுமதித்தனர். இந்த வெடி விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எபோலா பாதிப்பிலிருந்து 5 பேர் மீண்டனர்
உலக சுகாதார நிறுவனம் பாராட்டு
நைரோபி, ஜூன் 1- காங்கோ நாட்டில் எபோலா வைரஸ் பாதிப்பில் இருந்து 5 பேர் குணமாகியுள்ளனர். இதை உலக சுகாதார நிறுவனம் பாராட்டியுள்ளது.
காங்கோ நாட்டில் எபோலா வைரஸின் புதிய வகையான பன்டிபக்யோ வைரஸால் பாதிக்கப்பட்டு அவர்கள் 5 பேரும் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் 5 பேரும் குணமாகியுள்ளனர். காங்கோவின் இடுரி மாகாணத்தில் எபோலா புதிய சிகிச்சை மய்யத்தை திறந்து வைத்து உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் இதுகுறித்து கூறுகையில், ‘எபோலா பாதிப்பிலிருந்து மீண்டு 4 பேர் ஞாயிற்றுக் கிழமை (மே 31) வீடு திரும்பினர். மேலும் ஒருவர் இரு நாள்களுக்கு முன்பு குணமாகி வீடு திரும்பியுள்ளார்’ என்றார். மேலும் அவர் கூறுகையில், ‘தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சை முறைகளைக் கண்டுபிடிக்கும் பணி தொடர்ந்து நடக்கிறது. அதற்காக எபோலா பாதிப்பில் இருந்து மக்களால் குணமாக முடியாது என்று அர்த்தம் கிடையாது’ என்றார்.
பல்வேறு நாடுகளிலும் எபோலாவால் மொத்தம் 906 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், 223 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. காங்கோவின் அண்டை நாடான உகாண்டாவில் 9 பேர் எபோலாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று அந்த நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஈரான் ஒப்பந்தம் குறித்து
இன்னும் இறுதி செய்யப்படவில்லை
இன்னும் இறுதி செய்யப்படவில்லை
வெள்ளை மாளிகை தகவல்
வாசிங்டன், ஜூன் 1- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று முன்தினம் (29.5.2026) தனது ஆலோசகர்களுடன் கலந்துரையாடினார். தேசிய பாதுகாப்பு உதவியாளர் களுடன் சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டம் எந்த முடிவும் எடுக்கப்படாமல் முடிவடைந்த தாக வெள்ளை மாளிகை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க மற்றும் ஈரானிய பேச்சு வார்த்தையாளர்கள் ஒரு தற்காலிக உடன்பாட்டிற்கு வந்துவிட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அதிபர் டிரம்ப் இந்த உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை உறுதிப்படுத்தினார்.
ஈரானின் சர்ச்சைக்குரிய அணுசக்தித் திட்டம் குறித்து புதிய பேச்சுவார்த்தைகள் நடைபெறும் நிலையில் இந்த ஒப்பந்தம் நிலையற்ற போர் நிறுத்தத்தை மேலும் 60 நாட்களுக்கு நீட்டிக்கும். தங்களிடம் ஒருபோதும் அணு ஆயுதமோ அல்லது அணுகுண்டோ இருக்காது என்பதை ஈரான் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.
மேலும் பன்னாட்டு கப்பல் போக்குவரத்துக்காக ஹார்மூஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்றும் அனைத்து கடல் கண்ணிவெடிகளும் அழிக்கப் பட வேண்டும் என்றும் அதிபர் தெரிவித்துள்ளார். ஈரானின் முக்கிய பேச்சுவார்த்தையாளர் கூறுகையில், ‘‘உத்தரவாதங்கள் அல்லது வார்த்தைகள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. செயல்கள் மீது மட்டுமே நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
