திருச்சி, ஜூன் 1 திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் 30.05.2026 அன்று நடைபெற்ற பெரியா ரியல் பயிற்சிப் பட்டறையின் ஒர் அங்கமாக மூலிகை மருந்தியல் துறை சார்பில் மூலிகைப் பொருட்கள் மற்றும் மருத்துவத் தாவரங்கள் கண்காட்சி நடைபெற்றது.
இக்கண்காட்சியில் 50 வகையான மருத்துவ மூலிகைத் தாவரங்கள் அவற்றின் மருத்துவப் பயன்பாடுகள் மற்றும் சிகிச்சைக்கான முக்கியத்துவங் களுடன் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும், தோல் நோய்கள், சருமப் பொலிவு மற்றும் ஆரோக்கியமான சருமப் பராமரிப்பிற்காக தயாரிக்கப்பட்ட 10 வகையான மூலிகை சோப்புகள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தன. கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களைக் குறைத்து சருமப் பொலிவை மேம்படுத்த உதவும் பீட்ரூட் ஜெல் மற்றும் கற்றாழை ஜெல், சளி மற்றும் மூக்கடைப்பிற்கு நிவாரணம் அளிக்கும் மூலிகை விக்ஸ், தலைவலிக்கான ரோல்-ஆன், பீட்ரூட், பப்பாளி மற்றும் ஆரஞ்சு முகப்பூச்சுப் பொடிகள், பாரம்பரிய நலுங்குமாவு, இருமல் மற்றும் சளி நிவாரணத்திற்கான ஆடாதோடை மணப்பாகு உள்ளிட்ட பல்வேறு மூலிகை தயாரிப்புகளும் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும், ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு பாரம்பரிய அரிசி ரகங்கள் மற்றும் சிறுதானிய வகைகள் காட்சிப்படுத்தப்பட்டு அவற்றின் ஊட்டச்சத்து மற்றும் மருத்துவப் பயன்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
இக்கண்காட்சி மூலமாக மூலிகை மருத்துவத்தின் முக்கியத்துவம், இயற்கை சார்ந்த மருத்துவப் பொருட்கள், சுகாதாரப் பராமரிப்பு முறைகள் மற்றும் பாரம்பரிய உணவுகளின் நன்மைகள் குறித்து ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கண்காட்சியைப் பார்வையிட்டவர்கள் மூலிகைத் தயாரிப்புகள் மற்றும் மருத்துவத் தாவரங்கள் குறித்த தகவல்களை ஆர்வமுடன் அறிந்து கொண்டனர்.
மூலிகை மருந்தியல் துறையின் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வு அனைவராலும் பாராட்டப்பட்டது.
