அரியலூர், மே 31–- விவசாய கடன் தள்ளுபடி தொடர்பான த.வெ.க. அரசின் தேர்தல் வாக் குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தலைமையில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
அப்போது, த.வெ.க. அரசு தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதியை நிறைவேற்றாமல் மோசடியாக கூட்டுறவு கடன் தள்ளுபடி அறிவிப்பு அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு விவசாயிகள் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.
பின்னர் அனைத்து விவ சாயிகளும் கூட்டத்தில் பங்கேற் காமல் புறக்கணிப்பு செய்து, த.வெ.க.அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
திருவாரூர்
இதேபோல் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மோகனச்சந்திரன் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பயிர்க் கடன்கள் அனைத்தையும் முற்றிலுமாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், உர விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தும், விவசாயிகள் நாமம் இட்டு வாயில் கருப்பு துணியை கட்டி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் குறைதீர் கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்து ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒரு விவசாயி தரையில் படுத்து உருண்டு தனது எதிர்ப்பை தெரிவித்தார்.
வேலூர்
வேலூரில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் சிவசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டம் துவங்கியவுடன் அனைத்து விவசாயிகள் சங்கமும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள விவசாயிகளின் பயிர் கடன் தள்ளுபடி பெருத்த ஏமாற்றம் அளிப்பதாக கூறி வெளிநடப்பு செய்தனர். பின்னர், ஆட்சியர் அலுவலகம் முன்பாக விவசாயிகள் தரையில் புரண்டு மார்பில் அடித்து கொண்டு விவசாயத்தை காப்பாற்றக் கோரி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் எச்சரிக்கை
தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளின் நம்பிக்கையை இழந்து விட்டார் என்றும், தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி பயிர் கடன் தள்ளுபடி செய்யாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடஉள்ளதாக தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்றசங்கத்தின் மாநில தலைவர் தங்கராஜ், 12 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு உள்ள பயிர் கடனில் வெறும் 2000 கோடி ரூபாய் மட்டுமே தள்ளுபடி செய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், ஜூன் 12ஆம் தேதி தமிழ்நாடு டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாத சூழ்நிலை உள்ளது. கருநாடக அரசிடம் பேசி தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய தண்ணீரை கேட்டு பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
