சென்னை, மே 30–- தமிழ்நாட்டில் புதிய கல்வியாண்டு தொடங்கவுள்ளதை முன்னிட்டு, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றிப் பயணிக்கலாம் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
ஜூன் 4ஆம் தேதி பள்ளிகள் திறப்பு
வரும் ஜூன் 4ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அதனைத் தொடர்ந்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் (ITI) ஆகியவை திறக்கப்படவுள்ளன.
பள்ளி மாணவர்கள்: 2026-2027 கல்வியாண்டிற்கான புதிய கட்டணமில்லா பேருந்து பயண அட்டை வழங்கும் பணிகள் பள்ளிகளிலேயே நடைபெற்று வருகின்றன. இந்த அட்டைகள் மாணவர்களுக்குக் கிடைக்கும் வரை, காலதாமதத்தைத் தவிர்க்கும் பொருட்டு, பள்ளிச் சீருடை அணிந்திருக்கும் மாணவர்கள் தங்களின் இருப்பிடத்திலிருந்து பள்ளி வரை கட்டணமில்லாமல் பேருந்துகளில் பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
அரசு கலை, அறிவியல், பாலிடெக்னிக் மற்றும் அய்டிஅய் மாணவர்கள் தங்களின் கல்வி நிறுவனங்கள் வழங்கிய அடையாள அட்டையை நடத்துநரிடம் காண்பித்து கட்டணமின்றிப் பயணிக்கலாம்.
சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் அமைப்பு
மாணவர்களின் வசதிக்காகப் போக்குவரத்துத் துறை பல்வேறு கூடுதல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.
நேர மேலாண்மை: பள்ளிகள் தொடங்கும் மற்றும் முடியும் நேரங்களில் பேருந்துகள் சரியாக இயக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கப் போக்குவரத்துக்கழக அலுவலர்கள் அடங்கிய தனிக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அறிவுறுத்தல்: பேருந்து நிறுத்தங்களில் பேருந்துகளைச் சரியாக நிறுத்தி, மாணவ, மாணவியர்களைப் பாதுகாப்பாக ஏற்றி, இறக்கிச் செல்ல வேண்டும் என அனைத்து அரசுப் போக்குவரத்துக்கழக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்குக் கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்கள் எவ்வித சிரமமுமின்றி கல்வி நிறுவனங்களுக்குச் சென்று வர இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
