புதுடில்லி, மே 30- நாடு முழுவதும் இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த 3ஆம் தேதி நடைபெற்றது. வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, கடந்த 12ஆம் தேதி இந்தத் தேர்வை ரத்து செய்வதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து, மாணவர்களுக்கான மறுதேர்வு ஜூன் 21ஆம் தேதி நடைபெறும் என்றும், ரத்து செய்யப்பட்ட தேர்விற்கு மாணவர்கள் செலுத்திய நுழைவுத் கட்டணம் முழுமையாகத் திரும்ப வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஜூன் 22 வரை நீட்டிப்பு
தேர்வு கட்டணத்தை திரும்பப் பெறுவதற்காக விண்ணப்பிக்கும் காலஅவகாசம் முன்னதாக 27ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதுவரை சுமார் 13 லட்சம் மாணவர்கள் இதற்காக விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், விடுபட்ட மாணவர்களின் நலன் கருதி, கட்டணத்தை திரும்பப் பெற விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளை ஜூன் மாதம் 22ஆம் தேதி வரை நீட்டித்து தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டுள்ளது.
ஜூன் 1 முதல்
விடைத்தாள் சரிபார்ப்பு இணையதளம்
சிபிஎஸ்இ அறிவிப்பு
புதுடில்லி, மே 30- ஒன்றிய இடைநிலைக் கல்வி வாரியம் தனது எக்ஸ் தளத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்: “தேர்வு முடிவுகளுக்குப் பிந்தைய நடவடிக்கைகளான விடைத்தாள் சரிபார்ப்பு மற்றும் மறுமதிப்பீடு உள்ளிட்ட பணிகளுக்கான சிறந்த இணையதளம் ஜூன் 1ஆம் தேதி முதல் செயல்பாட்டிற்கு வரும். மாணவர்களின் விடைத்தாள்களைச் சரிபார்ப்பது மற்றும் மறுமதிப்பீடு செய்யும் பணிகள் மிகவும் வெளிப்படையாகவும், பிழையின்றியும் நடப்பதை உறுதி செய்யவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று சிபிஎஸ்இ குறிப்பிட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு
சென்னையில் ஜூன் 1ஆம் தேதி முதல்
இலவச பயிற்சி வகுப்பு
சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல்!

சென்னை, மே 30- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தவிருக்கும் குரூப்-1 முதல்நிலைத் தேர்விற்கு சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மய்யத்தில் உள்ள தன்னார்வ பயிலும் வட்டத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன.
இலவச பயிற்சி வகுப்பு
இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் விக்கப்பட்டிருப்பதாவது:
குரூப்-1 முதல்நிலைத் தேர்வு
இலவச பயிற்சி வகுப்புகள் வரும் 1-ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. வாரத்தின் வேலை நாட்களான திங்கள் கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை இந்த வகுப்புகள் நடத்தப்படும். சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதிவாய்ந்த தேர்வர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திப் பயன் பெறலாம்.
இப்பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் தேர்வர்கள், பின்வரும் ஆவணங்களுடன் நேரடியாகச் சென்று விண்ணப்பிக்க வேண்டும்: அடையாள அட்டையின் நகல் (ஆதார் அட்டை நகல்) பாஸ்போர்ட் அளவுள்ள ஒளிப்படம் (1)
அணுக வேண்டிய முகவரி
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மய்யம், கிண்டி, சென்னை – 600032. (அலுவலக வேலை நாட்களில் நேரில் அணுகவும்).
கூடுதல் விவரங்களுக்கு…
தேர்வர்கள் இதுகுறித்த கூடுதல் விவரங்களைப் பெற [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளலாம் என்று ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
அரசின் திட்டங்களை நிறைவேற்ற
ஒத்துழைப்பு அளிக்கத் தயார்!
– மாநகராட்சி துணைமேயர்
சென்னை, மே 30– அரசின் திட்டங்களை சென்னை மாநகராட்சியில் நிறைவேற்ற தவெக அரசுக்கு முழு ஒத்துழைப்பை அளிக்கத் தயாராக உள்ளோம். நிர்வாகச் செயல்பாடுகளை அதிகாரிகள் பார்த்துக் கொள்வார்கள். மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு திமுக தடையாக இருக்காது என சென்னை மாநகராட்சி துணை மேயர் மு.மகேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
