‘புத்தகர்’ விருது பெற்ற தமிழறிஞர், திராவிட இயக்கச் சிந்தனையாளர், ஆசியாவிலேயே மிகப்பெரிய தமிழ் நூல் காப்பகத்தை விருத்தாசலத்தில் நிறுவிய பெருமைக்குரிய தோழர் பல்லடம் சாமி.மாணிக்கம் அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து பெருந்துயரம் அடைந்தோம்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டம் பெற்று, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பாராட்டுகளைப் பெற்ற ‘ஆயிரம் பூ’ கவிதைத் தொகுதியின் ஆசிரியரான அவர், வாழ்நாள் முழுவதும் தமிழ் மொழிக்கும், இன உணர்விற்கும், சுயமரியாதை கருத்துகளுக்கும் பெரும் தொண்டாற்றியவர். ‘வள்ளுவம்’ இதழை நடத்தியும், திருக்குறள் பண்பாட்டு ஆய்வு மய்யத்தை நிறுவியும், ‘நிறங்கள்’ இலக்கிய அமைப்பின் வழியாக எழுத்தாளர்களை ஒருங்கிணைத்தும் அவர் ஆற்றிய பணிகள் போற்றத்தக்கவை.
திராவிட இயக்கத்தின் மீது மிகுந்த பற்றும், ஆழ்ந்த ஈடுபாடும் கொண்டு இறுதிவரை கொள்கை வீரராக வாழ்ந்த அவரது மறைவு தமிழ் அறிவுலகத்திற்கும், திராவிட இயக்கத்திற்கும் பேரிழப்பாகும்.
அன்னாரை இழந்து வாடும் அவரது இணையர் திலகவதி, மகள்கள் முத்துச்செல்வி, கவிதா மற்றும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது தமிழ்த் தொண்டும், இயக்கப் பணிகளும் என்றும் நினைவு கூரப்படும்.
(கி. வீரமணி)
தலைவர், திராவிடர் கழகம்.
