திருவனந்தபுரம், மே 29- பெரியாரின் கொள்கைகளை, கேரளா மாநிலத்தில் முன்னெடுத்து வரும், பெரியார் பகுத்தறிவு மன்றம், கேரளாவில் இதற்காகவே ஒரு நாள் மாநாட்டை நடத்தியது. இதில் பல்வேறு ஆளுமைகள் கலந்துகொண்டு ஆய்வுரைகளை வழங்கினர்.
கேரளாவில் உள்ள பெரியார் பகுத்தறிவு மன்றம் என்பது தந்தை பெரியாரின் சமூகநீதி மற்றும் ஜாதிய எதிர்ப்புக் கொள்கைகளை பரப்புரை செய்கிற ஒரு இயக்கமாகும். இது திருவனந்தபுரம் மற்றும் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கிளைகளைக் கொண்டது. இது சமத்துவ சமூகம் எனும் இலக்கை எட்டுவதற்காக, தந்தை பெரியாரின் சமூக நீதி, ஜாதி எதிர்ப்பு, பகுத்தறிவு சிந்தனை, அறிவியல் மனப்பான்மை வளர்ப்பு போன்ற கொள்கைகளை பரப்புரை செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, “நாத்திகம் – 2026” எனும் தலைப்பில், திருவனந்தபுரம் புளிமூடு பகுதியில் உள்ள பி.டி.அரங்கத்தில் 21.05.2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஒரு நாள் தொடர் சொற்பொழிவுகளை ஏற்பாடு செய்து நடத்தியது.
இதில் கேரள மாநிலத்தில் புகழ் பெற்ற நிகழ்த்துக் கலைஞரும், பகுத்தறிவாளருமான செம்பார்வதி, “பெரியாரின் பகுத்தறிவு” எனும் தலைப்பிலும், வரலாற்று ஆய்வாளர் வல்லநாடு இராமச் சந்திரன் “காவிமயமாகும் வரலாறு” எனும் தலைப்பிலும், கைரளி தொலைக்காட்சி புகழ் கே.இராசேந்திரன் “மூடநம்பிக்கை – சாமியார்களும், ஊடகங்களும்” எனும் தலைப்பிலும், வரலாற்றுத் திறனாய்வாளர் தோழர் ரெகு, “ஜாதி ஒழிப்பில் அம்பேத்கர்” எனும் தலைப்பிலும், நரம்பியல் அறுவை சிகிச்சை வல்லுநர் வல்லநாடு மருத்துவர் மனோஜ், “நரம்பியலில் மூடநம்பிக்கை” எனும் தலைப்பிலும், பகுத்தறிவாளர் தோழர் பிரதீஷ், “இசுலாமிய வெறுப்பும் – உண்மை களும்” எனும் தலைப்பிலும், துஞ்சத்து எழுத்தச்சன் மலையாளப் பல்கலைக் கழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் சிறீநாதன், “நாராயண குருவும் சுதந்திர சிந்தனையும்” எனும் தலைப்பிலும் உரையாற்றினர்.
நிகழ்வில் சிறப்பு விருந்தினர் களாகக் கலந்துகொண்ட ஏழு ஆய்வாளர்களும், பெரியார் கொள் கைகளை பல்வேறு கோணங்களில் ஆய்ந்து உரைகளை வழங்கினர்.
கலந்துகொண்ட ஏராளமான பகுத்தறிவாளர்கள் அவ்வாய் வுரைகளை கேட்டுப் பயன்பெற்றனர். நிகழ்வை நடத்திய பெரியார் பகுத்தறிவு மன்றம் என்பது, ‘தர்க்கம் – சுதந்திரம் – சமத்துவம் – சகோதரத்துவம்’ எனும் கொள்கைகளை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
