ஊத்துக்கோட்டை, மே 28 ஆந்திராவின் கண்டலேறு அணையில் திறந்துவிடப்பட்ட கிருஷ்ணா நதி நீர் தமிழ்நாடு எல்லையான ஊத்துக்கோட்டை வந்தடைந்தது. சென்னை குடிநீர் தேவைக்காக தெலுங்கு-கங்கை திட்ட ஒப்பந்தப்படி தமிழ்நாட்டுக்கு கிருஷ்ணா நதி நீர் திறக்கப்பட்டுள்ளது. தெலுங்கு-கங்கை திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கு ஆண்டுதோறும் ஆந்திர அரசு 12 டிஎம்சி நீர் வழங்கி வருகிறது. கண்டலேறு அணையில் திறக்கப்பட்ட நீர் 152 கிலோ மீட்டர் பயணித்து ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட்டுக்கு வந்தது.
தமிழ்நாடு எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட்டுக்கு வினாடிக்கு 43 கனஅடி நீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது. பூண்டி ஏரியில் கிருஷ்ணா நதி நீர் தேக்கி வைக்கப்பட்டு சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது. 2 நாட்களுக்கு முன்பே தமிழ்நாடு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தாமதமாக வந்தடைந்தது. தமிழ்நாடு எல்லையை வந்தடைந்த கிருஷ்ணா நதிநீர் இன்று இரவு பூண்டி ஏரியை சென்றடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திடக்கழிவுகள் மேலாண்மை விதிகள்படி
பெருமளவு கழிவு உற்பத்தியாளர்கள் இணையதளத்தில் கட்டாயம் பதிய வேண்டும்
மாநகராட்சி உத்தரவு
சென்னை, மே 28 திடக்கழிவுகள் மேலாண்மை விதிகள் படி, பெருமளவு கழிவு உற்பத்தியாளர்கள் இணையதளத்தில் பதிவு செய்வது கட்டாயம் என்று சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி நேற்று (27.5.2026) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்திய அரசு கடந்த ஜனவரி 28ஆம் தேதி திடக்கழிவு மேலாண்மை விதிகள்-2026 குறித்த அரசிதழ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேற்கண்ட விதிகள் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரப்பெற்றுள்ளது. திடக்கழிவுகள் மேலாண்மை விதிகள்-2026ன்படி, கீழ்காணும் அளவு கோள்களில் ஏதேனும் ஒன்றைப் பூர்த்தி செய்யும் நிறுவனங்கள் அல்லது நிலையங்கள் “பெருமளவு கழிவு உற்பத்தியாளர்கள்” ஆக வகைப்படுத்தப்படுகின்றன.
இணையதளத்தில் பதிவு
அதாவது, 20,000 சதுர மீட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட மொத்த தள பரப்பளவு கொண்ட கட்டடம் அல்லது அன்றாடம் 40,000 லிட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட நீர் பயன்பாடு, மேலும் அன்றாடம் 100 கிலோ அல்லது அதற்கு மேற்பட்ட திடக்கழிவு உற்பத்தி செய்பவர்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த வரையறை, நிறுவன பயனாளர்கள், வணிக நிறுவனங்கள், குடியிருப்பு சங்கங்கள், சொசைட்டிகள், உணவகங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், அய்.டி.பூங்காக்கள், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், சந்தைகள், தொழிற்சாலைகள் மற்றும் பிற பெரிய நிறுவனங்களையும் உள்ளடக்கும். திடக்கழிவுகள் மேலாண்மை-2026 விதிமுறைகளின் படி, சென்னை மாநகராட்சி வரம்பிற்குள் உள்ள அனைத்து பெருமளவு கழிவு உற்பத்தியாளர்களுக்கும் சில விதிமுறைகள் அறிவிக்கப்படுகின்றன.
அதன்படி, பெருமளவு கழிவு உற்பத்தியாளர்கள், சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் பதிவு செய்வது கட்டாயமாகும். அனைத்து தகுதியுடைய பெருமளவு கழிவு உற்பத்தியாளர்களும், சமபந்தப்பட்ட மண்டல அலுவலர்களிடமிருந்து கடிதம் பெற்ற நாளிலிருந்து 15 நாட்களுக்குள் சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் (ஆன்லைனில்) பதிவு செய்வது கட்டாயமாகும். குறிப்பிட்ட காலத்திற்குள் பதிவு செய்யாதவர்களுக்கு திடக்கழிவுகள் மேலாண்மை விதிகள்-2026இன் படி நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், பெருமளவு கழிவு உற்பத்தியாளர்கள் தேவையான குப்பைத் தொட்டிகளை கொள்முதல் செய்து, கழிவுகளை தரம் பிரித்து, சென்னை மாநகராட்சி அல்லது சென்னை மாநகராட்சியால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
பெருமளவு கழிவு உற்பத்தியாளர்கள் தாங்கள் உண்டாக்கும் உயிரியல் கழிவுகளை தங்கள் வளாகத்திலேயே உரமாக்கல், உயிரி எரிவாயு ஆக்குதல் போன்ற முறைகளில் செயல்படுத்த வேண்டும்.பதிவிற்காக தனிப்பட்ட இணைப்பு, சென்னை மாநகராட்சியின் https://gccservices.in/bulkwaste/register என்ற இணையதளத்தில் உள்ளது. மண்டல அலுவலர்கள் (மண்டலம் 1 முதல் 15 வரை) நியமிக்கப்பட்ட பணியாளர்கள், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் பெருமளவு கழிவு உற்பத்தியாளர்களுக்கு இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்குத் தேவையான உதவிகளை வழங்குவார்கள்.
எனவே, அனைத்து நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பு சங்கங்களும் மேற்கண்ட அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு, சென்னை மாநகராட்சியின் www.chennaicorporation.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிட்டுத் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
