சென்னை, மே 28 மாநிலப் பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநருக்குப் பதிலாக முதலமைச்சரே இருக்க வேண்டும் என கடந்த திமுக ஆட்சியில் சட்டம் கொண்டு வரப்பட்டது.
தற்போதைய தவெக அரசின் உயர்கல்வித் துறை அமைச்சர் பெ.விஸ்வ நாதன் (காங்கிரஸ்), “முந்தைய திமுக அரசின் நிலைப்பாட்டை அப்படியே பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை” என்று கூறியதாக செய்தி வெளியானது.
இதற்கு திமுக, விசிக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் தங்களது பலத்த கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.
தனது கருத்து தவறாக சித்தரிக்கப் பட்டுள்ளதாகவும், முதலமைச்சர் விஜய் இதுகுறித்து உரிய நேரத்தில் கொள்கை முடிவு எடுப்பார் என்று மட்டுமே தான் கூறியதாகவும் அமைச்சர் விஸ்வநாதன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
அரசியல் தலைவர்களின்
கண்டனக் கணைகள்
கண்டனக் கணைகள்
க.பொன்முடி (தி.மு.க. துணை பொதுச் செயலாளர்): “மாநில உரிமை களுக்காகப் போராடிப் பெற்ற சட்டமிது. பாஜவுக்கு ஒத்து ஊதும் வகையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் விஸ்வநாதன் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. பதவி சுகத்துக்காக காங்கிரஸ் தனது கொள்கையை மாற்றிக்கொண்டு விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.”
ரவிக்குமார் (வி.சி.க. பொதுச் செயலாளர்): “அமைச்சரின் இந்த கூற்று மாநில உரிமைகளைக் கைவிடுவது மட்டுமல்லாமல், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் அவமதிப்பதாகும். இதை அவர் முதலமைச்சரின் ஒப்புதலோடுதான் சொல்கிறாரா?”
மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): “அமைச்சரின் இக்கருத்து ஒன்றிய பாஜக அரசின் மாநில உரிமைப் பறிப்பிற்கு வலுசேர்க்கிறது. எனவே, அவர் தனது தவறான கருத்தியல் நிலைபாட்டை கைவிட வேண்டும்.”
அமைச்சர் விஸ்வநாதன் மறுப்பு
சர்ச்சை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து உயர்கல்வித்துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன் நேற்று (27.5.2026) விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சர் பொறுப்பேற்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உரிய நேரத்தில் கொள்கை முடிவு எடுப்பார்” என்றுதான் பதிலளித்தேன். தற்போதைய நிலை குறித்து தான் எந்தக் கருத்தும் கூறாதபோது, அதற்கு மாறாகச் செய்திகள் வெளியிடப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
மாநில உரிமைகளைப் பறிக்கும் வகையில் தான் பேசியதாகக் கூறுவது உண்மைக்கு புறம்பானது மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
