நெல்லை, மே 25 மென்பொருள் இயக்கம் தடைப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ேம மாத ஊதியத்தை வழங்குவதில் சிக்கல் நீடிக்கிறது. எனவே மே மாத ஊதியம் குறித்த காலத்தில் கிடைக்குமா? என்கிற அச்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 9 லட்சத்து 20 ஆயிரம் பேர் அரசு ஊழியர் களாகவும், ஆசிரியர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். இதுதவிர சுமார் 7 லட்சம் பேர் ஓய்வூதியதார்களாகவும், குடும்ப ஓய்வூதியதாரர்களாகவும் அரசின் ஓய்வூதிய பணபலன்களை மாதம் தோறும் பெற்று வருகின்றனர். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாதம்தோறும் கடைசிநாளில் அதாவது 30 அல்லது 31ஆம் தேதி வங்கி கணக்கில் ஊதியம் ஏறுவது வழக்கமாக உள்ளது. இதற்காக ஒவ்வொரு மாத சம்பள பட்டியல் ஒருங்கிணைந்த நிதி மனிதவள மேலாண்மை (அய்எப்எச்ஆர்எம்எஸ்) அமைப்பின் இணையத்தளம் மூலம் சமர்பிக்கப் படும். இப்பட்டியல் மாதம்தோறும் 15ம் தேதியே வெளியாகிவிடும்.
அந்தந்த கல்வி நிறுவனங்களின் ஊதியப் பட்டியலை அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் நிர்வாக பிரிவு ஊழியர்கள் எடுத்துக் கொண்டு போய் கருவூலத்தில் 25ஆம் தேதிக்குள் சமர்ப்பிப்பர். பிறகு மாத இறுதியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஊதிய வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். ஆனால் நடப்பு மே மாதத்திற்கான ஊதிய பட்டியல் விவரங்கள் குறிப்பிட்ட மென்பொருள் பதிவேற்றம் செய்ய முடியவில்லை. 15ஆம் தேதியே ஏற்ற வேண்டிய பட்டியல் 22ஆம் தேதி வரை ஏற்ற முடியாத காரணத்தால், ஊதிய விபரங்களை கருவூலத்திற்கு அனுப்பி வைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. மென்பொருள் நிறுவனத்தின் சாப்ட்வேர் இன்னமும் திறக்கப்படவில்லை என அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் திண்டாட்டத்தில் உள்ளனர்.
அடுத்த வாரம் பக்ரீத் விழா வரவுள்ள நிலையில், ஊதியம் குறித்த நேரத்தில் கிடைக்குமா? என்ற சந்தேகம் அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் ஆட்டிப் படைக்கிறது. த.வெ.க அரசு ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வினை அறிவித்தது. கடந்த ஆட்சியின் போது முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இனி வரும் காலங்களில் அகவிலைப்படி காலதாமதமாக அறிவித்தாலும் அகவிலைப்படி அறிவித்த மாத ஊதியத்தோடு, அகவிலைப்படி உயர்வு மற்றும் நிலுவைத் தொகை ஆகியவற்றை இணைத்து வழங்கப்படும் என உறுதி அளித் தார். அந்த வாக்குறுதியை முந்தைய அரசு கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து நிறை வேற்றி வந்தது. இந்நிலையில் தற்போது தமிழ்நாட்டில் புதிதாக பதவியேற்றுள்ள அரசு அக விலைப்படி உயர்வினை அறிவித்தும், அதனை வழங்க இயலாத நிலை இன்று வரை காணப்படுகிறது.
அகவிலைப்படி உயர்வை மட்டுமல்லாது மாத ஊதியத்தையும் பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஊதியப் பட்டியல் மற்றும் 4 மாதத்திற்கான அகவிலைப்படி இணைந்து வழங்கிட, மென்பொருள் நிறுவனமே கணக்குகளை சரி செய்து விரைந்து வெளியிட வேண்டும். ஆனால் அரசுடன் ஏற்படுத்திய ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டது எனக்கூறி கொண்டு, மென்பொருள் நிறுவனம் இந்த பிரச்சினையை தீர்க்க மறுப்பதாக கூறப்படுகிறது. புதிதாக பதவியேற்றுள்ள அரசு உடனடியாக தலையிட்டு இப்பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் உள்ளனர். கருவூலத்திற்கு ஊதியப் பட்டியல் இதுநாள் வரை செல்லாத நிலையில், வரும் 31ஆம் தேதி அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஊதிய வழங்கப்படுமா என்ற கவலையும் வாட்டி வதைக்கிறது.
