பகுத்தறிவாளர் கழகக் கலைத்துறை மாநிலத் தலைவர் கலைமாமணி மு. கலைவாணன் மறைவு

2 Min Read

காட்டாங்குளத்தூர், மே 23– புகழ்பெற்ற திரைப்படப் பாடலாசிரியர் ந.மா.முத்துக்கூத்தன் அவர்களின் மகனும், மிகச் சிறந்த பொம்மலாட்டக் கலைஞருமான கலைமாமணி மு. கலைவாணன் 22. 05. 2026 இரவு 11 மணியளவில் சென்னையில் காலமானார்.

சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருந்துகளை உட் கொண்டு வந்தவர். எனினும் தாம் கற்ற பொம்மலாட்டக் கலையை மக்களிடம் கொண்டுசேர்க்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் பொம்மலாட்டப் பயிலரங்கம் நடத்திக்கொண்டிருந்தபோது மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டு மறைவுற்றார்.

கலைவாணர்

மு.கலைவாணன், கலைமாமணி ந. மா. முத்துக்கூத்தன்- மு.மரகதம் இணையரின் அருமைப் புதல்வராக 20.11.1957இல் பிறந்தவர். “கலைவாணர்” என்.எசு.கிருட்டினன் (என்.எஸ்.கே.) மேல்கொண்ட மதிப்பின் காரணமாகத்  தம் மகனுக்குக் கலைவாணன் என்று பெயர்சூட்டி மகிழ்ந்தார் தந்தையார் முத்துக்கூத்தனார்.

மு.கலைவாணன் கோபாலபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி இறுதி வகுப்பு வரை பயின்றவர். இளமை முதல் தந்தையாரின் அரவணைப்பில் வளர்ந்தவர். மு.கலைவாணன் – தமயந்தி திருமணம் 10.10.1982 இல் நடைபெற்றது. இவர்களுக்கு முத்தரசன், பகலவன் என்ற இரண்டு மக்கள் செல்வங்கள் வாய்த்தனர்.

பொம்மலாட்டக் கலை நிகழ்வு

மு.கலைவாணன் இதுவரை ஆறாயிரத்திற்கும் (6000) மேற்பட்ட இடங்களில் பொம்மலாட்டக் கலை நிகழ்வுகளை நிகழ்த்தியுள்ளார். அத்தனை நிகழ்வுகளிலும் பகுத்தறிவுக் கருத்துகளும், சுற்றுச்சூழல் சிந்தனைகளும், தமிழ் மரபு போற்றும் கருத்துகளும் இடம்பெற்றிருக்கும். பொம்மலாட்டத்தில் வழக்கமாக இடம்பெறும் புராணக் கருத்துகளை இவர் பின்பற்றாமல் மக்களும் மாணவர்களும் அறிவுத்தெளிவு பெற வேண்டும் என்ற நோக்கில் தம் பொம்மலாட்ட நிகழ்வை நடத்துவது சிறப்பிற்குரிய ஒன்றாகும்.

கலை மாமா

சென்னை பொதிகை தொலைக் காட்சிக்காக இதுவரை இருநூறுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளையும், “கலை மாமா” என்ற தலைப்பில் மக்கள் தொலைக்காட்சியில் தொண்ணூறுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளையும், வசந்த் தொலைக்காட்சியில் நாற்பதுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளையும் வழங்கி யுள்ளார்.

ஆசிரியர்களுக்கு இதுவரை இருநூறுக்கும் மேற்பட்ட பயிற்சி வகுப்பு களையும், குழந்தைகளுக்கு இதுவரை அறுநூற்றுக்கும் மேற்பட்ட பயிற்சி வகுப்புகளையும், பெற்றோருக்கான பயிற்சி வகுப்புகள் 54யும் நிகழ்த்தியுள்ளார். மூன்று திரைப்படங்களிலும், இரண்டு தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.

கலைப்பணி

மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, ஜப்பான் முதலிய நாடுகளிலும் தம் கலைப்பணியைச் செய்தவர்.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், தமிழர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் மீது பேரன்பு கொண்டவர். கொள்கை வழுவாதவர்.

திராவிட இயக்க மேடைகளில் ஏராளமான கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியவர்.

தொடர்புக்கு: பகலவன் – 8072089041

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *