சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு– மக்கள் அவதி! த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்களை முற்றுகையிட்டு போராட்டம்!

4 Min Read

சென்னை, மே 23– சென்னை மற்றும் புறநகர் பகுதி களில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அவதியுற்ற நிலையில் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு மற்றும் நள்ளிரவு நேர மின்தடைகளால் பொதுமக்கள் நரக வேதனையை அனுபவித்து வருகின்றனர்.

மின்சார வாரியத்தின் முறையற்ற திட்டமிடல் மற்றும் த.வெ.க. ஆட்சியின் அலட்சிய போக்கே இந்த நிலைக்கு காரணம் என பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் கடந்த சில வாரங்களாகவே வெயிலின் தாக்கம் உச்சத்தில் உள்ளது. பகல் நேரத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியிருக்கும் நிலையில், பல மணி நேரம் மின்தடை ஏற்படுத்தப்படுகிறது.

தமிழ்நாடு

“பராமரிப்புப் பணிகள்” என்ற பெயரில் பகல் முழுதும் மின்சாரத்தை நிறுத்தும் வாரியம், இரவு நேரங்களிலும் திடீர் திடீரென 4 முதல் 5 மணி நேரம் மின்விநியோகத்தை துண்டித்து வருகிறது. இதனால், பகல் முழுவதும் உழைத்துவிட்டு இரவில் நிம்மதி யாக தூங்கலாம் என்று நினைக்கும் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள், நள்ளிரவில் மின்சாரமின்றி, புழுக்கத் தில் தூக்கத்தைத் தொலைத்து தவித்து வருகின்றனர்.

குறிப்பாக, குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் முதியவர்கள் இந்த அவசர கால சூழலில் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, ராயபுரம், எண்ணூர், வேளச்சேரி, மதுரவாயல், போரூர், அய்யப்பன்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டன. மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டால் பேச மறுப்பதாக மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இதில் திருவொற்றியூர் பகுதியில் பொதுமக்கள் நேரடி யாக மின்வாரிய நிலையத்திற்குச் சென்று முற்றுகை யிட்டு போராட்டம் நடத்தினர்.

இதையறிந்த திருவொற்றியூர் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார் நேரில் வந்தும் ஒரு பயனும் இல்லை. அவர் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு முயற்சித்தும், மின்வாரிய உயர் அதிகாரிகள் யாரும் அழைப்பை எடுக்காமல் இருக்க கொதித்தெழுந்த மக்கள் அவரை வார்த்தைகளால் ஷாக் அடைய வைத்தனர். இது ஒருபுறம் நடக்க ராயபுரத்தில் சாலையில் போராட்டத்தில் இறங்கிய மக்களை சமாதானப்படுத்த வந்த சட்டமன்ற உறுப்பினர்  தாமுவிடம், ‘‘இதற்குத் தான் த.வெ.க.விற்கு ஓட்டு கேட்டீங்களா? ஆட்சிக்கு வந்த 10 நாட்கள் கூட ஆகவிலலை, 5 நாள் கரண்ட் கட் பண்ணீட்டாங்க’’ என கேள்வி கணைகள் அவர் மீது மக்கள் தொடுத்தனர். பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலத்தில் மின்சார தேவை அதிகரிக்கும் என்பது அரசுக்கும் மின்சார வாரியத்திற்கும் அப்பட்டமாக தெரிந்த விஷயமே. தற்போது ஏசி மற்றும் மின்விசிறிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் மின்சுமை தாங்காமல் மின்மாற்றிகள் வெடிப்பதும், கேபிள்கள் பழுதடைவதும் தொடர்கதையாகி உள்ளது. இது அரசின் கவனக்குறைவு எனவும், மின் தேவையை கணிப்பதில் அரசு தவறி விட்டதாகவும் விமர்சனம் எழுந்துள்ளன.

இந்த தொடர் மின்வெட்டு காரணமாக சிறு, குறு தொழில்கள், கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மின்சாரத்தை மட்டுமே நம்பியிருக்கும் தையல் கடைகள், மாவு மில்கள், கணினி மய்யங்கள் போன்றவற்றின் அன்றாட வருமானம் முடங்கியுள்ளது. வணிகர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். தலைநகரிலேயே இந்த அவல நிலை என்றால், மற்ற மாவட்டங்களின் நிலைமையைச் சொல்லவே வேண்டி யதில்லை.

ஆட்சிக்கு வந்தவுடன் 200 யூனிட் இலவசம் என அறிவித்த விஜய். முதலில் மின்சாரத்தை பயன்ப டுத்தினால் தானே சலுகை கூட பெறமுடியும் அந்த மின்சாரத்தை நுகர்வோருக்கு கொடுக்கமல் இருப்பது எந்த வகையில் நியாயம் என சமூகவலைதளத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. ரீல்ஸ் மோகத்தில் மூழ்கி கிடக்கும் இந்த ஆட்சி அதில் கொடுக்கும் முக்கியத்துவத்தை, மக்களின் அடிப்படை தேவை யான தடையில்லா மின்சாரம் வழங்குவதில் அரசு காட்ட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த சென்னை மக்களின் கோரிக்கையாகவும், கண்டனமாகவும் உள்ளது.

மின்வெட்டை கண்டித்து
மக்கள் முற்றுகை

வண்ணை காளிங்கராயன் தெருவில் நேற்று முன்தினம் (21.5.2026) பகல் முழுவதும் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாயினர். இரவு நேரம் மின்சாரம் வந்துவிடும் என்று எதிர்பார்த்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிமெட்ரி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த வண்ணை காவல் நிலைய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் சமரசம் பேசினர். சம்பவ இடத்திற்கு வந்த ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் தாமுவை பொதுமக்கள் சூழ்ந்து கொண்டு உடனடியாக மின்சாரம் வழங்க வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேடவாக்கத்தில் 16 மணி நேரம் மின்சாரம் துண்டிப்பு!

மேடவாக்கம் ஊராட்சிக்குட்பட்ட, பெல் நகரில் அய்ந்து தெருக்கள் உள்ளன. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த இரண்டு நாட்களாக மின் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் காற்றோட்டம் இல்லாமல் தூங்க முடியாமல் அவதிக்குள்ளாகி இருப்பதாக கூறுகின்றனர்.

இது குறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது:

மின்வாரிய அலுவலகத்திற்கு போன் செய்தால் அவர்கள் போன் எடுத்து பதில் சொல்வதில்லை. கடந்த 16 மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம். கோடை காலம் என்பதால் தற்போது மின்சாரம் இல்லாமல் இருப்பது மிகவும் சிரமமாக உள்ளது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதிய வர்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டனர். இது மாதிரி அலட்சிய போக்கை கைவிட்டு பொதுமக்கள் நலன் கருதி மின்வாரிய ஊழியர்கள் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *