வேலூர், மே 23– அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் த.வெ.க. மாவட்ட செயலாளர் ஆய்வு செய்வதாக கும்பலாக புகுந்து அலப்பறை செய்ததோடு, அமைச்சர் ஆனந்த் உத்தரவால் இந்த ஆய்வு நடத்தப்பட்டதாக மிரட்டி உள்ளார். மேலும் இன்ஸ்டாகிராமில் பிஜிஎம் மியூசிக்குடன் ரீல்ஸ் போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தவெக தலைவர் ஜோசப் விஜய் தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்ற நிமிடம் முதலே அக்கட்சி நிர்வாகிகள் ரீல்ஸ் டீமுடன் அரசு அலுவலகங்களில் நுழைந்து செய்யும் அட்டகாசம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் சங்கரன்கோவில் அரசு மருத்துவ மனையில் அவதூறு வழக்கில் கைதான தென்காசி மாவட்ட தவெக மருத்துவ அணி அமைப்பாளர் வாசுதேவி, ஆய்வு செய்வதாக ரீல்ஸ் டீமுடன் நுழைந்து செய்த அட்டகாசம் தமிழ்நாடு முழுவதும் பேசு பொருளானது. இதேபோல், அம்மா உணவகத்தில் ஆய்வு செய்வதாக உணவு சாப்பிட்டு அங்கிருந்தவர்களை மிரட்டும் தொனியில் எச்சரிக்கை விடுப்பதை காட்சிப் பதிவாக எடுத்து பிஜிஎம் போட்டு தவெக மாவட்ட செய லாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ரிலீஸ் போட்டு வருகின்றனர்.
அந்த வரிசையில், தவெக வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன், திருப்பதி சென்று மொட்டை போட்டு வந்தவுடன், ரீல்ஸ் டீமுடன் கும்பலாக வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா அரசு மருத்துவமனையில் ஆய்வு என்ற பெயரில் நேற்று முன்தினம் (21.5.2026) நுழைந்தார். அதிகாரிகளிடம் ‘நான் தவெக மாவட்ட செயலாளர். அமைச்சர் அதிகாரத்துக்கு உரியவன். அண்ணன் புஸ்ஸி ஆனந்த் உத்தரவின்படி எங்கு வேண்டுமானாலும் ஆய்வு செய்வேன்’ என்று மிரட்டல் தொனியில் கூறி பதிவேடுகளை வாங்கி, பெண் ஊழியரிடம் கேள்விமேல் கேள்வி கேட்டு துளைத்தெடுத்துள்ளார். தொடர்ந்து அனைத்து வார்டுகளிலும் சென்று நோயாளிகளிடம் விசாரணை செய்துள்ளார்.
இதை அவருடன் வந்த டீம் காட்சிப் பதிவாக படம் பிடித்தனர். மருந்தகம், கழிப்பறைகள் உள்ளிட்ட எல்லா இடத்துக்கும் சென்று பார்த்து காட்சிப் பதிவை எடுத்துள்ளனர். இதையறிந்த மருத்துவ அதிகாரிகள், உடனடியாக உயர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் அணைக்கட்டு அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த வீடியோவை ரீல்ஸாக எடிட் செய்து பிஜிஎம் மியூசிக்குடன் சமூக வலை தளங்களில் மாவட்ட செயலாளர் வேல்முருகன் பரவ செய்துள்ளார். இதை பார்த்த சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் இவர்களை ஆரம்பத்திலேயே களை யெடுக்க வேண்டும் என்று கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி மருத்துவத்துறை அதி காரிகள், ‘எங்களது 25 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பணிக் காலத்தில் இது போன்ற அனுபவம் எங்களுக்கு இப்போதுதான் ஏற்பட்டுள்ளது’ என்று வேதனை தெரிவித்தனர். இதுபற்றி வேலூர் மாவட்ட மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் (பொறுப்பு), பியூலா, ‘மக்கள் பிரதிநிதிகளாக இல்லாதவர்கள் இதுபோன்று அரசு மருத்துவமனைக்குள் ஆய்வு என்று நுழைவது தவறு. இதுதொடர்பாக எங்கள் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படும்’ என்றார்.
அரசு அலுவலகத்தில் விதி மீறி தவெகவினர் ஆலோசனை கூட்டம் தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே ஒக்கரைப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், அதன் முன்பாக நாடக மேடையும் அமைந்துள்ளது. தவெக உள்ளூர் நிர்வாகி கள், இந்த நாடக மேடை யில் நேற்று முன்தினம் (21.5.2026) திடீரென ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர். இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களைத் திரட்டி, கிராமத்தில் உள்ள குறைகளைக் கேட்டறியும் ஆலோசனைக் கூட்டம் என்ற பெயரில் இக்கூட்டம் நடைபெற்றது.
இதற்காக, அருகில் இருந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குள் புகுந்த அக்கட்சியின் நிர்வாகிகள், அங்கிருந்த அரசுக்குச் சொந்தமான அதிகாரப்பூர்வ மேஜைகள் மற்றும் நாற்காலிகளை எடுத்துவந்து பயன்படுத்தியுள்ளனர். இதில் ஊராட்சி செயலர் கவிதா அதி காரத்தைப் பயன்படுத்தி, 100 நாள் வேலை திட்டத்தில் வேலை பார்க்கும் பெண் பணியாளர்களைக் கட்டாயப்படுத்தி அழைத்து வந்து அமர வைத்ததாக கூறப்படுகிறது. அரசு சொத்துக்களைத் தவறாக பயன்ப டுத்தியும், அரசு பணியாளர்களைத் திசைதிருப்பியும் நடத்தப்பட்ட இந்த விதிமுறை மீறல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
