அகமதாபாத், மே 23 ஒரே நாடு, ஒரே தேர்தல்’ முறையை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நாட்டுக்கு ரூ.7 லட்சம் கோடி வரை மிச்சமாகும் என்று நாடாளுமன்ற கூட்டுக்குழுத் தலைவர் பி.பி.சவுதரி தெரிவித்துள்ளார்.
ஒரே நேரத்தில் தேர்தல்
நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமை யிலான குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், ஒன்றிய அரசு 2 சட்டத் திருத்த மசோதாக்களை நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்த மசோதாக்களை ஆய்வு செய்து வரும் பி.பி. சவுதரி தலைமையிலான 41 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு, பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று கருத்துகளைக் கேட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, குஜராத் மாநிலத்திற்கு 3 நாள் பயணம் மேற்கொண்டுள்ள இக்குழுவினர், அங்குள்ள உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது, இத்திட்டம் குறித்து அனைத்துத் துறைகளிடமும் கருத்துகளைக் கேட்டு விரைவில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு குஜராத் மாநில தலைமைச் செயலாளருக்கு உத்தரவிடப்பட்டது.
ரூ.7 லட்சம் கோடி மிச்சம்
இதனைத் தொடர்ந்து செய்தியாளர் களிடம் பேசிய கூட்டுக்குழுத் தலைவர் பி.பி. சவுதரி கூறியதாவது: “நாடாளுமன்றத்திற்கும், மாநில சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டால், நாட்டின் ஒட்டு மொத் தப் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதம் அதிகரிக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.மேலும், இதனால் அரசுக்கு சுமார் ரூ.7 லட்சம் கோடி வரை நிதி மிச்சமாகும்.
இவ்வாறு சேமிக்கப்படும் பணத்தை நாட்டின் உட்கட்டமைப்பு பணிகள், ஏழைகளின் நலன், கல்வி, சுகாதாரம் மற்றும் பிற பொது நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்த முடியும். “கூட்டாட்சித் தத்துவத்திற்கு பாதிப்பில்லை தேர்தல் சீர்திருத்தங்கள் மூலம் நாட்டிற்கு நன்மை கிடைக்க வேண்டும் என்ற பிரதமரின் நோக்கத்தினாலேயே ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இத்திட்டத்தால் நாட்டின் கூட்டாட்சித் தத்துவம், அடிப்படைக் கட்டமைப்பு அல்லது அடிப்படை உரிமைகளுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது என்று 6 முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர். ஒன்றிய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த் குழுவின் 18,000 பக்கங்கள் கொண்ட அறிக்கையில், மக்களவை மற்றும் பேரவைத் தேர்தல்கள் நடத்தப்பட்ட 100 நாட்களுக்குள் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து தேர்தல்கள் நடப்பது குறைக்கப்படுவதால், ஒன்றிய அரசு வளர்ச்சித் திட்டங்கள், சிறந்த நிர்வாகம், வறுமை ஒழிப்பு, கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற முக்கியப் பணிகளில் முழு கவனத்தையும் செலுத்த வழிவகை ஏற்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
மாநிலங்களின் அதிகாரத்தை நசுக்கும் தொகுதி மறுசீரமைப்பு மசோதா தோற்கடிக்கப்பட்டதுபோல் ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையையும் எதிர்க்கட்சிகள் இணைந்து தோற்கடித்து இந்திய அரசமைப்புச் சட்டத்தையும், ஒற்றுமையையும் காப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
