அமெரிக்க கல்வியாளர், புகழ்பெற்ற வானியல் ஆசிரியர் மேரி எம்மா பிர்ட். மிச்சிகனில் உள்ள லீ ராயில் 1849இல் பிறந்தார். 19ஆம் நூற்றாண்டில் பெண் கல்வி கற்பது மிகவும் கடினமாக இருந்தது. மேரி பிர்ட் கல்வி கற்கும் போதே ஆசிரியராகவும் பணிபுரிய நேர்ந்தது. இவர் லீவன்வர்த் உயர்நிலைப் பள்ளியில் படித்தார்.
இவர் 1871 முதல் 1874 வரை ஓபெர்லின் கல்லூரியில் சேர்ந்து படித்தார். பின்னர், முதல் பெண் ஆய்வக உதவியாளராக 1883ஆம்ஆண்டு கார்லேடன் கல்லூரியில் உள்ள காட்செல் ஆய்வகத்தில் பணியைத் தொடங்கினார். 1887இல் ஸ்மித் கல்லூரி ஆய்வகத்தின் இயக்குநராகவும், வானியல் பேராசிரியராகவும் நியமிக்கப்பட்டார்.
அமெரிக்க வானியல் கழகம், பசிபிக் வானியல் கழகம், பிரித்தானிய வானியல் கழகங்களில் உறுப்பினர் பதவி வகித்தார். 1904இல் கார்லெட்டான் கல்லூரியில் முனைவர் பட்டம் பெற்றார். மக்கள் வானியல் இதழில் பல வானியல் கட்டுரைகளை எழுதி வெளியிட்ட இவர் 1934 ஜூலை 13இல் மறைவுற்றார்.
-
• • • •

அய்.நா. பொதுச்சபையின்
முதல் பெண் தலைவர்
முதல் பெண் தலைவர்
அய்க்கிய நாடுகள் சபையின் முதல் பெண் தலைவர், இந்தியத் தூதராக பணியாற்றியவர், ஜவகர்லால் நேருவின் தங்கை விஜயலக்ஷ்மி பண்டிட். இவர் 1900 ஆகஸ்ட் 18ஆம்தேதி அலகாபாத்தில் பிறந்தார். 1937 முதல் 1939 வரை உள்ளாட்சி மற்றும் பொது சுகாதார துறையின் அமைச்சராக இருந்தார்.
இரண்டாம் உலகப் போரில் ஆங்கில அரசுக்கு ஆதரவாக இந்தியா போரில் கலந்துகொள்ள வேண்டும் என்று அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தனது அமைச்சர் பதவியை விட்டு விலகினார். 1953இல் அய்.நா. பொதுச்சபையின் 8ஆவது தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் அந்த பொறுப்பை ஏற்ற முதல் இந்தியப் பெண் ஆனார்.
1958இல் ‘தி எவல்யூஷன் ஆஃப் இந்தியா’ என்ற புத்தகத்தை எழுதினார். மகாராட்டிராவின் ஆளுநராக 1962 முதல் 1964 வரை இருந்தார். 1967- 1971 வரை மக்களவை உறுப்பினராக இருந்தார். 20ஆம் நூற்றாண்டில் பொது வாழ்வில் ஈடுபட்ட முக்கியப் பெண்ணான இவர் தனது எழுத்து மூலம் மக்களிடம் பிரபலமானார்.
