சென்னை, மே 18- தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவின் அண்மைய பேச்சுக்கு, முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
பத்தரை லட்சம் கோடி
அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா, “முன்னாள் அரசு பத்தரை லட்சம் கோடி ரூபாயை எடுத்துக்கிட்டு கழுவி விட்டு போய்ட்டாங்க” என்று விமர்சித்திருந்தார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டிருப்ப தாவது:
உண்மைக்குப் புறம்பானது
“முற்றிலும் உண்மைக்குப் புறம்பாகவும், மாநிலத்தின் நிதி நிர்வாகம் குறித்தான சாதாரண அடிப்படைப் புரிதல் இல்லாமலும், ‘பத்தரை லட்சம் கோடி எடுத்துட்டு கழுவிட்டுப் போய்ட்டாங்க’ என்று போகிற போக்கில் புழுதி வாரித் தூற்றி, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தொழில்துறை அமைச்சர் அவதூறு பரப்புவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
உள் நோக்கோடு தி.மு.கழகத்திற்கு எதிராக ஆதாரமில்லாமல் மக்களிடையே ஒரு மாய பிம்பத்தை சமூக வலைதள ஜோடனைகள் மூலம் கட்டமைக்க அவர்கள் முயற்சிப்பது விஷமத்தனமானது.”
மேலும், அரசு நிர்வாகத்தில் போதிய அனுபவம் இல்லாததால் மக்களை ஏமாற்றிக் குழப்பும் வகையில் தமிழ்நாட்டின் நிதி நிர்வாகம் குறித்து இட்டுக்கட்டிக் கூறுவது அமைச்சரின் முதிர்ச்சி யின்மையைக் காட்டுகிறது என்றும் அவர் சாடியுள்ளார்.
நிர்வாக நடைமுறைகளைச் சுட்டிக்காட்டிய தங்கம் தென்னரசு, “அரசு நிர்வாகத்திலும், அமைச்சரவையிலும் பல ஆண்டுகள் அனுபவமிக்கவரான நிதி அமைச்சர் செங்கோட்டையனும், நிதித்துறை செயலாளரும் இடித்துரைத்து, தொழில் துறை அமைச்சரின் கற்பனைக் குதிரைக்குக் கடிவாளம் போட்டு நிறுத்த முன்வருவார்களா? அல்லது இத்தகைய மலிவான பிரச்சாரங்களுக்குத் துணை போகப் போகிறார்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சராக கடந்த மே 10ஆம் தேதி ஜோசப் விஜய் பதவியேற்றார். அவர் தனது முதல் உரையிலேயே தமிழ்நாடு அரசின் கஜானா முழுவதும் துடைக்கப்பட்டு இருப்பதாகக் குறை கூறியிருந்தார். இதற்கு அப்போதே திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின், “அனுமதிக்கப்பட்ட வரம்புக்கு உட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது. பிப்ரவரி பட்ஜெட்டிலேயே இது தெளிவுபடுத்தப்பட்டுவிட்டது” என்று பதிலடி கொடுத்திருந்தார்.
இந்த நிலையில், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவும் அதே பாணியில் பேசியிருப்பது தமிழ்நாடு அரசியலில் தற்போதைய புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
