நூல் விலை அதிரடி உயர்வு திருப்பூரில் பின்னலாடை உற்பத்தியாளர்கள் கடும் அதிர்ச்சி!

2 Min Read

திருப்பூர், மே 17 திருப்பூரில் நூல் விலை ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.25 வரை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திடீர் விலை உயர்வு ஆயத்த ஆடை மற்றும் பின்னலாடை தொழில்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

தமிழ்நாட்டின் மேற்கு மண்டல மாவட்டங்களான கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் ஆகியவற்றில் ஜவுளி, ஆயத்த ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஆகியவை பிரதான தொழில்களாக விளங்கி வருகின்றன. குறிப்பாக, திருப்பூரில் மட்டும் ஆயிரக்கணக்கான ஆயத்த ஆடை உற்பத்தி மற்றும் அதன் சார்பு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்தியாவின் மொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதியில் சுமார் 68 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை திருப்பூர் மட்டுமே வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயத்த ஆடை உற்பத்தியில் மிக முக்கிய அங்கமாக விளங்குவது நூல் ஆகும். வழக்கமாக, பருத்தியின் வரத்து மற்றும் விலையைப் பொறுத்தே நூல் விலையும் நிர்ணயம் செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டு பருத்தி தட்டுப்பாடு நிலவிய போது, ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கான 11 சதவீத வரிக்கு ஒன்றிய அரசு விலக்கு அளித்திருந்தது. இதனால் பருத்தி மற்றும் நூல் விலை கட்டுக்குள் இருந்தது.

கடந்த டிசம்பர் மாதத்துடன் இந்த வரி விலக்கு நிறைவடைந்ததை அடுத்து, மீண்டும் 11 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் காரணமாக வெளிநாட்டு பருத்தி மட்டுமின்றி, உள்நாட்டு பருத்தியின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக, கடந்த பிப்ரவரி முதல் மே மாதம் வரை மாதத்திற்கு இரண்டு முறை நூல் விலை ரூ.7 முதல் ரூ.10 வரை உயர்ந்து வந்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து கடந்த 1-ஆம் தேதி வரை மட்டுமே கிலோவுக்கு ரூ.41 வரை நூல் விலை உயர்ந்திருந்தது.

இந்நிலையில், நேற்று (16.5.2026) நூற்பாலைகள் அனைத்து ரக நூல்களின் விலையையும் ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.25 வரை அதிரடியாக உயர்த்தியுள்ளன. இதன் மூலம், கடந்த 5 மாதங்களில் மட்டும் பருத்தி நூலின் விலை கிலோவுக்கு ரூ.61 முதல் ரூ.66 வரை உயர்ந்துள்ளது தொழில்துறையினரை நிலைகுலையச் செய்துள்ளது.

நூல் வியாபாரி  கருத்து

“தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நூல் விலை உயர்வின் தாக்கம் மிகக் கடுமையானதாக இருக்கும். இது ஆடை உற்பத்தி துறையை மட்டுமின்றி, அதை நம்பியுள்ள நூற்றுக்கணக்கான துணைத் தொழில்களையும் பெருமளவில் பாதிப்படையச் செய்யும்.”

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் கோரிக்கை

“திருப்பூரின் பிரதான தொழில் துறையைப் பாதுகாக்கும் நோக்கில், நூற் பாலைகள் தன்னிச்சையாகச் செயல் படாமல் தொழில் துறையினரோடு கலந்து பேச வேண்டும். இந்த நூல் விலை உயர்வை உடனடியாகக் குறைப் பதற்கான உரிய நடவடிக்கைகளை அவர்கள் எடுக்க வேண்டும்.”

நூல் விலையின் இந்த அசுர வேக உயர்வு காரணமாக, புதிய ஒப்பந்தங்களைப் பெறுவதிலும், ஏற்ெகனவே ஒப்புக்கொண்ட விலையில் ஆடைகளை தயாரித்து வழங்குவதிலும் ஏற்றுமதியாளர் களுக்குப் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு ஒன்றிய, மாநில அரசுகள் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்பதே சிறு மற்றும் குறு உற்பத்தியாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *