புதுடில்லி / புனே, மே 16- நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய 2026-ஆம் ஆண்டு இளநிலை நீட் (NEET-UG) மருத்துவ நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில், இந்த முறைகேட்டின் முக்கிய சூத்திரதாரியும், வினாத்தாள் தயாரிப்புக் குழுவில் இடம்பெற்றிருந்தவருமான வேதியியல் பேராசிரியர் பி.வி. குல்கர்னியை மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஅய்) புனேவில் வைத்து அதிரடியாகக் கைது செய்துள்ளது.
சிபிஅய் விசாரணை
லாத்தூரைச் சேர்ந்தவரான பேராசிரியர் பி.வி.குல்கர்னி, கடந்த பல ஆண்டுகளாகத் தேசிய தேர்வு முகமை (NTA) சார்பில் நீட் தேர்வுக்கான வினாத்தாள்களைத் தயாரிக்கும் நிபுணர் குழுக்களில் பணியாற்றி வந்துள்ளார். இதன் காரணமாக ரகசிய வினாத்தாள்களை அணுகும் சிறப்பு அதிகாரம் அவருக்கு இருந்துள்ளது.
இந்த அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திய பேராசிரியர் குல்கர்னி, கடந்த ஏப்ரல் மாதக் கடைசி வாரத்தில் புனேவில் உள்ள தனது இல்லத்தில் வைத்து சில மாணவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி வகுப்புகளை நடத்தியுள்ளார்.
சொல்லித் தரப்பட்ட
அசல் வினாக்கள்
அசல் வினாக்கள்
மே 3 அன்று நடைபெற்ற நீட் தேர்வில் கேட்கப்படவிருந்த கேள்விகள், அதற்கான விடைகள் மற்றும் ஆப்ஷன்களை (Options) பேராசிரியர் குல்கர்னி இந்தச் சிறப்பு வகுப்பில் மாணவர்களுக்கு அப்படியே சொல்லிக் கொடுத்துள்ளார். மாணவர்கள் தங்களது நோட்டுப் புத்தகங்களில் கைப்பட எழுதிய அந்தக் கேள்விகளும், உண்மையான நீட் தேர்வு வினாத்தாளும் 100 சதவீதம் அச்சு அசல் ஒரே மாதிரியாக ஒத்துப்போயிருந்ததை சிபிஅய் அதிகாரிகள் ஆதாரங்களுடன் கண்டுபிடித்துள்ளனர்.
அம்பலம்
இந்தச் சிறப்புப் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்வதற்காக மாணவர் களிடமிருந்து இடைத்தரகர்கள் மூலம் பல லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கு முன்னதாக, கடந்த மே 14 அன்று குல்கர்னிக்கு மாணவர்களைத் திரட்டிக் கொடுத்த மனிஷா வாக்மார் என்ற பெண் கூட்டாளியையும் சிபிஅய் கைது செய்திருந்தது.
நாடு தழுவிய சோதனையும், பறிமுதலும்!
பேராசிரியர் குல்கர்னி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சிபிஅய் அதிரடிச் சோதனை நடத்தியுள்ளது. இதில் முறைகேட்டை உறுதிப்படுத்தும் பல முக்கிய ஆவணங்கள், லேப்டாப்கள் மற்றும் கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் இதுவரை ஜெய்ப்பூர், குருகிராம், நாசிக் மற்றும் புனே ஆகிய இடங்களிலிருந்து பேராசிரியர் உட்பட மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வினாத்தாள் கசிவு காரணமாக கடந்த மே 12 அன்று நீட் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், வரும் ஜூன் 21-ஆம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என்றும், அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு ஆன்லைன் முறையில் நடத்தப்படும் என்றும் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
