ராஜகுருவுக்கு அரசு பதவி ஏன்? சட்டமன்றத்தில் முதலமைச்சரை நோக்கி கேள்வி!

சென்னை, மே 13- தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழக வெற்றிக் கழக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்புத் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில், தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு முதலமைச்சர் விஜய்யை நோக்கி பல்வேறு அதிரடி கேள்விகளை எழுப்பினார்.

“முகமூடி அணிந்து எங்கேயும் செல்ல மாட்டோம், வெளிப்படையான ஆட்சி வழங்குவோம் என முதலமைச்சர் விஜய் அன்று உறுதி அளித்தார். ஆனால், அதற்கு மாறாக முதலமைச்சர்  விஜய்யின் பட்டினப்பாக்கம் வீட்டிற்கு முகத்தை மூடிக்கொண்டு சென்றவர் யார்? என்பதை இந்த பேரவையில் அவர் வெளிப்படையாக விளக்க வேண்டும். குதிரை பேரம் நடந்ததாகப் பரவலாகப் பேசப்படும் நிலையில், தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத இந்த மோசமான நிகழ்வு மிகுந்த வேதனையைத் தருகிறது.”

ராஜகுருவுக்கு அரசுப் பதவியா?

விஜய்யின் ஆலோசகர் நியமனம் குறித்து கடுமையாக விமர்சித்த பிரேமலதா: “அரச குடும்பத்தில் இருந்து வந்தவன் இல்லை என விஜய் சொன்னபோது அனைவரும் வரவேற்றோம். ஆனால் அவருடைய ராஜகுருவாக இருக்கும் ரத்தன் பண்டிட்டை அரசுப் பதவியில் அமர்த்தியதற்கு ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்கள் சார்பாக வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

தொடர்ந்து பேசிய அவர், “அவர் உங்கள் ராஜகுருவாக இருந்தால் தனிப்பட்ட முறையில்  வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு எதற்கு அரசுப் பதவி? இதன் மூலம் உங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கும், இளைஞர்களுக்கும் நீங்கள் சொல்ல வரும் செய்தி என்ன? இதற்கு முதலமைச்சர்  நிச்சயம் விளக்கம் கொடுத்தே ஆக வேண்டும். இந்த ஆட்சி ஒரு நேர்மையான மற்றும் அறிவியல் பூர்வமான ஆட்சியாக இருக்க வேண்டும்,” என வலியுறுத்தினார்.

பிஎம்சிறீ திட்டத்தைத் தமிழ்நாட்டில் அனுமதிக்கக் கூடாது

ஜவாஹிருல்லா, தமிழகத்தின் கல்விச் சூழல் மற்றும் மாநில உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், பிஎம்சிறீ திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்த அனுமதிப்பதில்லை என்ற உறுதியான கொள்கை முடிவை மாநில அரசு எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மாநில உரிமை: கல்வி என்பது மாநிலப் பட்டியலில் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், ஒன்றிய அரசின் இத்திட்டம் மாநில உரிமைகளில் தலையிடுவதாக அமையும் என்ற கவலை எழுப்பப் பட்டது.

அரசின் நிலைப்பாடு: தேசிய கல்விக் கொள்கையைத் தமிழ்நாடு ஏற்காத நிலையில், அதன் ஒரு பகுதியாகப் பார்க்கப்படும் இத்திட்டத்தைத் தவிர்க்க வேண்டும் என அவர் பேசினார்.

சிறப்பு அதிகாரி நியமனம் குறித்து மறுபரிசீலனை – முதலமைச்சர் தகவல்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அனைத்துக் கட்சித் தலைவர்களின் உரையைத் தொடர்ந்து, இறுதியாக முதலமைச்சர் விஜய் பதிலுரை ஆற்றினார். அவரது உரையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

த.வெ.க. அரசு ஒருபோதும் தனது பாதையிலிருந்து விலகாது என்றும், நிச்சயமாக இது ஒரு மதச்சார்பற்ற அரசாகவே செயல்படும் என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சி இன்றி, முந்தைய அரசுகள் கொண்டு வந்த நல்ல மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் இந்த அரசிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் உறுதி அளித்தார்.

சட்டமன்றக் கூட்டத்தின் போது, தே.முதி.க. எம்.எல்.ஏ. பிரேமலதா ஒரு முக்கிய கேள்வியை எழுப்பினார். முதலமைச்சரின் சிறப்பு அதிகாரியாக ரிக்கி ரத்தன் பண்டிட் என்பவர் நியமிக்கப்பட்டது குறித்து விளக்கம் கோரினார். அதற்குப் பதிலளித்த முதலமைச்சர் விஜய், அந்த நியமனம் குறித்து தாம் மறுபரிசீலனை செய்வதாக மன்றத்தில் உறுதியளித்தார்.

த.வெ.க. அரசுக்கு
வி.சி.க. ஆதரவு!

வன்னி அரசு: த.வெ.க. அரசு ஜோதிடம், பில்லி சூனியம் போன்ற மூடநம்பிக்கைகளுக்குத் துளியும் இடம் தராமல், அறிவியல்பூர்வமான சிந்தனைகளுக்கு முன்னுரிமை அளித்து ஆட்சி நடத்த வேண்டும்.

புதிய சட்டங்களுக்குக் கோரிக்கை: கருநாடகா மற்றும் மகாராட்டிரா மாநிலங்களைப் பின்பற்றி, தமிழ்நாட்டிலும் மூடநம்பிக்கை எதிர்ப்புச் சட்டத்தை உடனடியாகக் கொண்டு வர வேண்டும். ஆணவப் படுகொலை தடுப்பு: சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் ஆணவப் படுகொலைகளைத் தடுக்கத் தமிழ்நாடு அரசு தனிச் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என விசிக சார்பில் வலியுறுத்தப்பட்டது.

ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல், முதலமைச்சரின் அரசியல் பிரிவு சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டதற்குப் பல்வேறு அரசியல் கட்சிகள் ஏற்கனவே கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், சட்டமன்றத்தில் வன்னி அரசு ‘மூடநம்பிக்கை எதிர்ப்பு’ குறித்துப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *