இதுதான் வேலை வாய்ப்பின் இலட்சணமா? 15,000 பேரைப் பணி நீக்கம் செய்யப் போகும் ‘காக்னிசன்ட்’ நிறுவனம்

சென்னை, மே 8 Cognizant Layoffs : உலகின் முன்னணி அய்டி நிறுவனங்களுள் ஒன்றான காக்னிசன்ட் (Cognizant) மிகப்பெரிய அளவில் பணிநீக்க நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இந்த பணி நீக்க நடவடிக்கையின் மூலம் சுமார் 12,000 இந்தியர்கள் பாதிக்கப்படுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு

இந்தியாவில் பல லட்சக்கணக்கானவர்கள் அய்டி துறையில் வேலை பார்த்து வருகின்றனர். அதையே தங்களது எதிர்காலமாக கருதி அய்.டி துறை சார்ந்த படிப்புகளில் பல லட்சக்கணக்கான மாணவர்கள் கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இதற்கிடையே தொழில்நுட்ப வளர்ச்சியை நீட்சியாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (Atficial Intelligence – AI) அசுரவேகத்தில் வளர்ந்து வருகிறது. அதே நேரத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், பல்வேறு துறைகளை ஆக்கிரமித்து உள்ள நிலையில், இதனை காரணம் காட்டி முன்னணி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை அதிக அளவில் பணி நீக்கம் (IT Layoffs 2026) செய்து வருகின்றன. கடந்த ஓரிரு ஆண்டுகளில் மட்டும் முன்னணி ஐடி நிறுவனங்கள் கொத்துக் கொத்தாக தங்களது நிறுவனங்களில் வேலை பார்த்த ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் போக்கை பார்க்க முடிகிறது.

அந்த வகையில் உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான காக்னிசன்ட் (Cognizant) அதிக அளவிலான ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த அதிகப்படியான பணி நீக்கமானது இந்தியாவில்தான் அதிகம் இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. காக்னிசன்ட் நிறுவனம் இதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்ற போதிலும் இந்த நிறுவனத்தின் உள் வட்டார தகவல்களை பார்க்கும் போது, இந்தியாவில் அதிகப்படியான பணி நீக்கம் இருக்கும் என தெரியவந்துள்ளது.

1994ஆம் ஆண்டு சென்னையை தலைமை இடமாகக் கொண்டு 50 பேருடன் தொடங்கப்பட்ட காக்னிசன்ட் நிறுவனத்தில் தற்போது உலக அளவில் 3.57 லட்சம் பேர் வேலை பார்த்து வருகின்றனர். இதில் 2.5 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இந்தியாவில் பணியாற்றுகின்றனர். இந்த நிலையில் தற்போது உலக அளவில் சுமார் 15,000 ஊழியர்கள் வரை பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என காக்னிசன்ட் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் அதிகபட்சமாக 12 ஆயிரம் பேர் வரை இந்தியாவில் பணி நீக்கம் செய்யப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பணி நீக்கம்

காக்னிசன்ட் நிறுவனத்திற்கு இந்தியாவில் ஏராளமான கிளைகள் உள்ளன. இவற்றில் சென்னை மற்றும் அய்தராபாத் நகரங்களில் தலா 50,000 ஊழியர்கள் வேலை பார்ப்பதாக கூறப்படுகிறது. இதற்கு அடுத்ததாக பெங்களூருவில் 40,000 பேர் பணியாற்றுவதாகவும் தெரிய வருகிறது. எனவே காக்னிசன்ட் நிறுவனம் இந்தியாவில் பணிநீக்கம் நடவடிக்கை மேற்கொண்டால் சென்னை, பெங்களூர், அய்தராபாத் போன்ற நகரங்களில் பணியாற்றுவோர் பெரும் அளவில் பாதிக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. காக்னிசன்ட் நிறுவனம் இதுபோல பணி நீக்க நடவடிக்கையில் ஈடுபடுவது இது முதல் முறை கிடையாது. ஏற்கனவே கடந்த 2023- 2024 நிதியாண்டில் சுமார் 3,500 ஊழியர்களை அந்நிறுவனம் பணி நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.

காக்னிசன்ட் நிறுவனத்தின் இந்த பணி நீக்க நடவடிக்கைக்கு ‘ப்ராஜெக்ட் லீப்’ (Project Leap) என பெயரிடப்பட்டுள்ளது. இது அந்நிறுவனத்தின் மறு சீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும். இதன் மூலம் பெருமளவில் பணம் மிச்சப்படுத்தப்படும் என கூறுகின்றனர். இந்திய ஐடி சேவை துறையின் ஏற்பட்டுள்ள இது போன்ற மாற்றங்களால் புதியவர்களுக்கு வேலை வாய்ப்பு குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *