மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில், அந்த வெற்றிக்குப் பின்னால் தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்சமான செயல்பாடுகளும், மதவெறி அரசியலும் இருப்பதாக ஜம்மு–காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள தொகுதிகளில் பா.ஜ.க. 207 இடங்களைக் கைப்பற்றி முதல்முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. கடந்த முறை ஆட்சியில் இருந்த திரிணாமுல் காங்கிரஸ் 80 இடங்களுடன் தோல்வியைத் தழுவியது. மற்ற கட்சிகளான காங்கிரஸ் – 2, ஏஜெயுபி – 2, மார்க்சிஸ்ட் – 1 மற்றும் ஏஅய்எஸ்எஃப் – 1 இடங்களைப் பெற்றுள்ளன.
பா.ஜ.க.வின் இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜம்மு – காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, தேர்தல் முடிவுகள் நேர்மையான முறையில் அமையவில்லை என்பதைக் குறிப்பிடும் வகையில் பின்வரும் காரணங்களை அடுக்கியுள்ளார்:
வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் (SIR) போது, தேர்தல் ஆணையம் தனது நடுநிலைத் தன்மையை இழந்து செயல்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தகுதி வாய்ந்த வாக்காளர்களைப் பட்டியலிலிருந்து நீக்கியதன் மூலம் பா.ஜ.க.வின் வெற்றிக்கு தேர்தல் ஆணையம் வழிவகுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹிந்துத்துவ அமைப்புகள் மூலம் மத உணர்வுகளைத் தூண்டி, குறிப்பிட்ட சமூகத்தினர் மீது வெறுப்பைப் பரப்பியதன் வாயிலாக பா.ஜ.க. வாக்குகளைப் பெற்றுள்ளது.
சிறுபான்மையினரின் வாக்குகள் திட்டமிட்டு பிளவுபடுத்தப்பட்டதும் பா.ஜ.க.வின் வெற்றிக்கு முக்கிய காரணியாக அமைந்தது என அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தத் தோல்வியின் பின்னணியில் எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா’ (INDIA) கூட்டணியின் வியூகம் குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
“எதிர்க்கட்சிகளின் கூட்டணி என்பது நாடாளுமன்றத் தேர்தலுக்கு மட்டுமானதா அல்லது மாநிலத் தேர்தல்களிலும் அது தொடருமா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டியது அவசியம். தேர்தல் அரசியலில் இந்தக் கூட்டணியின் உண்மையான பங்கு என்ன என்பதைத் தலைவர்கள் விளக்க வேண்டும்” என உமர் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார்.
பா.ஜ.க.வின் வெற்றி ஒருபுறம் கொண்டாடப்பட்டாலும், எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து எழுப்பப்படும் இத்தகைய புகார்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தல் பற்றியும், அந்தத் தேர்தலில் பிஜேபி ஒன்றிய அரசின் துணையோடு நடத்திய அத்துமீறல்கள் குறித்து விலாவாரியாக ஜம்மு–காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா காட்டமாக விமர்சித்துள்ளது ஒரு பக்கம்.
மற்றொரு பகுதியில் அவர் எழுப்பிய கேள்வி மிக முக்கியமானது. ‘இண்டியா’ கூட்டணி பற்றிய கேள்வி அது!
‘‘இண்டியா கூட்டணி என்பது நாடாளுமன்றத் தேர்தலுக்கு மட்டும்தானா? மாநிலத் தேர்தல்களிலும் அது தொடருமா?’’ என்பதை தெளிவுபடுத்த வேண்டியது அவசியம் என்று கேட்டுள்ளார்.
இது மிக மிக முக்கியமான கருத்து என்பதில் அய்யமில்ைல. ‘இண்டியா கூட்டணி’ இந்திய அளவில் கம்பீரமாக உயர்ந்து நின்றதில், தி.மு.க. தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் பங்கு எத்தகையது என்பதை நாடறியும்.
‘இண்டியா கூட்டணி’க்கு மு.க. ஸ்டாலின்தான் தலைமை தாங்க வேண்டும் என்கிற அளவுக்கு மிகவும் அழுத்தமான கருத்து உருவான நிலையிலும்கூட, ‘‘என் உயரம் எனக்குத் தெரியும்!’’ என்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் சொன்னதுபோல, தளபதி ஸ்டாலின் அவர்களும் தன்னடக்கத்துடன் கருத்துக் கூறியதோடு, ‘‘இண்டியா கூட்டணி வெற்றி பெற்றால், ‘பிரதமர்’ ராகுல்காந்திதான்’’ என்று முதன் முதலில் இந்திய அளவில் சொன்னவரே அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்தான்.
அவற்றை எல்லாம் மறந்து விட்டு, அண்மைக் காலமாக ராகுல் நடந்துகொள்ளும் முறையை வைத்துதான் ஜம்மு–காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
‘விநாசகாலே விபரீத புத்தி!’ என்ற பழமொழிதான் நினைவிற்கு வருகிறது.
