மேற்கு வங்கத்தில் பா.ஜ.க.வின் பாசிச வெறியாட்டம்!

2 Min Read

மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா  போன்ற வேடமிட்ட ஒருவரை  மேற்குவங்க மாநிலம் சியால்டா மாவட்டத்திற்கு உட்பட்ட ஒரு பகுதியில் கயிற்றால் கட்டி வீதியில் இழுத்துச் சென்றும், அவரை காலால் உதைப்பது போன்றும், அவரை பாலியல் ரீதியாக சீண்டுவது போலவும் பா.ஜ.க. தொண்டர்கள்  செய்துவரும் காணொலி சமூக வலைதளங்களில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

‘ஜெய் சிறீராம்’ என்ற முழக்கங்களை எழுப்பியபடி அவர்கள் இந்தச் செயலில் ஈடுபட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பா.ஜ.க. மற்றும் ஹிந்துத்துவா அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்தக் கேவலமான வேலையில் ஈடுபட்டுள்ளனர். ஒரு பெண்ணை அவமதிப்பது போன்ற இக்காட்சிகள், பெண்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன.

“பெண் சக்தி” (Nari Shakti) பற்றிப் பேசும் மோடி மற்றும் பா.ஜ.க.வினர், ஒரு பெண் முதலமைச்சரின் உருவத்தை இவ்வளவு கீழ்த்தரமாக நடத்துவது அவர்களின் இரட்டை நிலைப்பாட்டை நன்றாகவே எடுத்துக்காட்டுகிறது

கயிற்றால் கட்டி பெண்களை வீதியில் இழுத்துச் செல்வது – பயங்கரவாத அமைப்புகளின் செயல்!  பெண்களை அடிமைகளாக நிர்வாணப்படுத்தி ஊர்வலமாகக் கூட்டிச் செல்லும் கொடூரம் பிஜேபி ஆளும் மணிப்பூரில் நடைபெற்றதை நாடு கண்டது.

பாஜக மற்றும் ஹிந்துத்துவ அமைப்புகள் மேற்குவங்கத்தில்  இப்போது வேறு வடிவத்தில் – மாற்றுக் கருத்து கொண்ட தலைவர்களை அரசியல் ரீதியாக எதிர்கொள்ளாமல், தனிப்பட்ட முறையில் இது போன்ற வன்முறையான மற்றும் ஆபாசமான செயல்களில் ஈடுபடுவது ஜனநாயகத்திற்கு எப்போதுமே மிகவும் ஆபத்தானது ஆகும்.

“பெண்களைத் தெய்வமாகப் போற்றுவதாகக் கூறும் சங்பரிவார் அமைப்பினரின் – பா.ஜ.க.வின் உண்மையான முகம் இதுதான்” எனப் பல சமூக ஆர்வலர்கள் இச்சம்பவத்தைக் கண்டித்து வருகின்றனர்.

இந்தச் செயல் ஒரு மாநிலத்தின் 15 ஆண்டுகாலம் முதலமைச்சராக இருந்த பெண்  ஒருவருக்கு விடப்பட்ட சவால் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தப் பெண்களின் கண்ணியத்தைச் சீர்குலைக்கும் செயலாகவே பார்க்கப்படுகிறது.

மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டு, பிஜேபி ஆட்சி அதிகாரம் பெற்ற நிலையில் பிஜேபி. சங்பரிவார்க் கூட்டத்தால் வரைமுறையற்ற வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை நடைபெற்றபோதே தான் தாக்கப்பட்டதாக மம்தா கூறியுள்ளார். இப்பொழுது பிஜேபி வெற்றி பெற்ற நிலையில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்படுகின்றன. லெனின் சிலை உடைக்கப்பட்டுள்ளது. முன்பு திரிபுராவிலும் இதைத்தான் செய்தனர்.

‘பிஜேபியின் ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு கெட்டுப் போய்விட்டது’ என்ற குற்றச்சாட்டு எழுமே என்பது பற்றிக்கூடக் கவலைப்படாமல், பிஜேபியும், சங்பரிவார்களும் வன்முறை வெறியாட்டம், போடுகிறது என்றால், இதற்குப் பெயர் தான் ‘பாசிசம்’ என்பது!

வடநாட்டில் ஒவ்வொரு மாநிலமாக பிஜேபி திமிங்கலம் விழுங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில்,  மதச் சார்பற்ற சக்திகள் முழு பலத்துடன் இருக்க வேண்டிய ஒரு கால கட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறை கவலையளிப்பதாக உள்ளது. மதச் சார்பின்மை என்ற கொள்கைக்கு மய்யப்புள்ளியாக இருக்கக் கூடிய தி.மு.க.விடமிருந்து காங்கிரஸ் துண்டித்துக் கொண்டது மாபெரும் வரலாற்றுப் பிழை! இப்பொழுது தெரியாவிட்டால் விரைவில் இதை உணரக் கூடிய நிலை ஏற்படும் – இது கல்லின்மேல் எழுத்தே!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *