மின்னணு பணப் பரிவர்த்தனைகளுக்கு வரியா?

4 Min Read

அன்றாடச் செலவுகளுக்குப் பணம் செலுத்துவதற்குக் கூட இனி கூடுதலாக வரி செலுத்த வேண்டிய அவசியம் ஏற்படலாம் என்ற நிலையை உருவாக்கியுள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு! நாடாளுமன்ற மக்களவையில் நேற்று  (6.8.2026) தாக்கல் செய்யப்பட்டு,  அமளி காரணமாக விவாதங்களின்றி நிறைவேற்றப்பட்டுள்ள ‘வரி மற்றும் பிற சட்டங்கள் திருத்த மசோதா 2026′-இன் ஒரு பகுதியாகத் தான் மக்கள் மீது இந்தச் சுமையையும் ஏற்றியுள்ளது ஒன்றிய அரசு.

பணத் தாளைப் பயன்படுத்தாமல், செல்பேசிச் செயலிகள் வழியாகப் பயன்படுத்தப்படும் ‘யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ்’ (UPI) சேவையைப் பயன்படுத்துவதற்குச் சாமானிய மக்கள் கடந்த 10 ஆண்டுகளில் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். 2016ஆம் ஆண்டு பண மதிப்பிழப்பு என்ற பெயரால் அப்போது புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய்த் தாள்களைத் திரும்பப் பெற்றது ஒன்றிய அரசு. இதன் மூலம் கருப்புப் பணம் ஒழிக்கப்படும் என்றும், கள்ளப் பணம் கண்டுபிடிக்கப்படும் என்றும் கூறியது.  பண மதிப்பிழப்பு (Demonetisation) நடவடிக்கையால் மக்கள் அவதியுற்றார்கள், சிறு, குறு தொழில்கள் நசிந்தன. இந்தியப் பொருளாதாரம் பாதிக்கப்பட அதுவும் ஒரு முக்கியக் காரணமாயிற்று. ஆனால், கருப்புப் பணமும் ஒழியவில்லை;  கள்ளப் பணமும் குறையவில்லை. அதிக மதிப்புள்ள பணத் தாள்களைத் திரும்பப் பெறுகிறோம் என்று சொன்னவர்கள், அதற்குப் பதில் 2000 ரூபாய் பணத் தாள்களை வெளியிட்டார்கள். பின்னர் அதனையும் 2023-இல் திரும்பப் பெற்றனர்.

இவற்றுக்கு இடையில், மின்னணுப் பணப் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்போம் என்று ஒன்றிய அரசு சொன்னது. இப்போது மிக எளிய நடைபாதை வியாபாரம் முதல், பெரு வணிகம் வரை எல்லாமே யு.பி.அய். எனப்படும் பரிவர்த்தனைகளைப்  பயன்படுத்துகின்றார்.

இதுவரை, மின்னணு பணப் பரிவர்த்தனைகள் மீது வங்கிகள் சேவைக் கட்டணம் வசூலிக்க, ‘பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு நடைமுறைகள் சட்டம் 2007’-இன்
பிரிவு 10 தடை செய்திருந்தது. இதில் திருத்தம் மேற்கொண்டு, வங்கிகளுக்கும், பிற சேவை நிறுவனங்களுக்கும் நிலையான வருவாய் கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில், யுபிஅய் உள்ளிட்ட மின்னணு பணப் பரிவர்த்தனைகள் மீது சிறிய அளவில் கட்டணம் விதிக்க அனுமதிக்கும் வகையில் ஒன்றிய அரசுக்கு இந்த மசோதா அதிகாரமளித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று மாலையே அதனை மறுத்துள்ளார்.

“மின்னணு பணப் பரிவர்த்தனைகளுக்கான ‘வணிகர் தள்ளுபடி கட்டணம்’ (MDR) என்பது வாடிக்கையாளர்கள் மீதல்ல, மாறாக வணிகர்கள் மீதே விதிக்கப்படும்” என்று அவர் கூறியுள்ளார். இதுதான் தெளிவுபடுத்துவதாம்! இது யாரை ஏமாற்ற நினைக்கும் வேலை என்றுதான் கேட்க வேண்டியிருக்கிறது. வணிகர்களுக்குக் கட்டணம் விதித்தால், அதனை அவர்கள் யார் தலையில் கட்டுவார்கள்? இது ஒன்றும் புதிதல்லவே! ஜி.எஸ்.டிக்கு முன்பு இருந்த வரிச் சட்டத்தின் படி,  எந்தப் பொருளின் மீதும் அதிகபட்ச சில்லறை விலை (MRP) என்று குறிக்கப்பட்டிருக்கும். அதிலேயே எல்லா வரிகளும் சேர்க்கப்பட்டிருக்கும். அதுவும் அதில் குறிக்கப்பட்டிருக்கும். ஆனால், ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்பட்டவுடன், ஏற்கெனவே வரிகள் சேர்க்கப்பட்டிருந்த அந்த அதிகபட்ச விலையின் மீது மேலும் வரிக்கான தொகையைச் சேர்த்து வணிகர்கள் வாங்கினார்கள் என்பது தான் அனுபவம்.

மேலும், மின்னணு பணப் பரிவர்த்தனைகள் தொடங்கிய காலத்தில், வங்கிகள் வாங்கிய சேவைக் கட்டணத்திற்காக, ஒவ்வொரு பரிவர்த்தனையின் மீதும், குறிப்பிட்ட சதவிகிதம் அதிகக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. பின்னர் அது அவசியமில்லை என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுதான் நிறுத்தப்பட்டது. இப்போது, அப்படி வங்கிகள் கட்டணம் வசூலிக்க அனுமதி அளித்தால், மீண்டும் அதனை வாடிக்கையாளர்களான நுகர்வோர் தலையில்தான் வணிக நிறுவனங்கள் கட்டும். “வணிகர் தள்ளுபடி கட்டணம் என்பது வணிகர்களுக்கு மட்டுமே பொருந்தும், இறுதிப் பயனர்கள் அல்லது வாடிக்கையாளர்களுக்கு அல்ல. இது வங்கிகள் மற்றும் நிதித் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்கட்டமைப்பு, புத்தாக்கம் மற்றும் பாதுகாப்பில் அதிக முதலீடு செய்ய உதவும். யு.பி.அய்.யைப் பயன்படுத்தும் அனைவரும் இந்த முதலீட்டின் பலன்களைப் பெறுவார்கள்” என்று நிதியமைச்சர் அளிக்கும் விளக்கம் எல்லாம் வெறும் ‘டுவிட்டர் சுரைக்காய்’ மட்டுமே! அதனால், எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை.

வெகு சாதாரணமாக ஓர் எடுத்துக்காட்டைச் சொல்லலாம். இந்திய அரசு தான் பத்து ரூபாய் நாணயத்தை வெளியிட்டது; புழக்கத்துக்குக் கொண்டு வந்தது. ஆனால், அதன் மீது ஏற்பட்ட நம்பிக்கைக் குறைவு, இன்றைக்கும் கிராமங்களில் பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மாட்டோம் என்றே சொல்லவைத்துள்ளது. இதுதான் அரசின் அறிவிப்புகளுக்கும், நாட்டின் நடப்புகளுக்கும் உள்ள வேறுபாடு.

ஒவ்வொரு பயன்பாட்டின் மீதும் ஒரு வரியை வணிகர்கள் மீது திணித்தால், உண்மையில் அதைச் செலுத்தப் போவது மக்கள் தான்!  ஒரு புறம், பணத்தைப் பயன்படுத்துவதைக் கட்டாயமாகக் குறைக்கும் ஏற்பாடுகளைச் செய்து, அனைவர் மீதும் மின்னணு பரிவர்த்தனையைத் திணித்துவிட்டது ஒன்றிய அரசு. கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், இணைய விற்பனைக் கூடங்கள் அனைத்திலும் மின்னணு பணப் பரிவர்த்தனைகள் கட்டாயமாக்கப்பட்டுவிட்ட சூழலில், இனி செலவுக்கு மேல் வரி என்ற நிலையைத் தான் இந்தச் சட்டம் உருவாக்கியுள்ளது.

ஒவ்வொருவர் வருமானத்தின் மீது வரி, கல்வி உள்பட்ட அடிப்படைப் பயன்பாடுகளுக்கும் ஜி.எஸ்.டி. வரி, அரசுக்குச் செலுத்தும் கட்டணங்கள் பலவற்றுக்கும் கூடுதல் ஜி.எஸ்.டி. வரி, வாங்கும் பொருளின் மீது வரி, இவற்றையெல்லாம் கடந்து, இப்படி செலுத்தப்படும் கட்டணங்களுக்கும், செலவுக்கும், அதைச் செலுத்தும் மின்னணு வழிகளுக்கும் கட்டணம் என்பது முற்றிலும் அறமற்றது; நியாயமற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *