பாலினப் பிரதிநிதித்துவம் என்றாலும் அதில் சமூகநீதி அவசியம்!
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி இடங்களை
சமூகநீதி அடிப்படையில் உடனடியாக நியமனம் செய்க!
மக்கள் மன்றத்தைப் போராட்டத்துக்குத் தள்ளக் கூடாது!
பாலினப் பிரதிநிதித்துவம் என்றாலும் அதில் சமூகநீதி அவசியம்! சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி இடங்களை சமூகநீதி அடிப்படையில் உடனடியாக நியமனம் செய்க! மக்கள் மன்றத்தைப் போராட்டத்துக்குத் தள்ளக் கூடாது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
தொடக்கக் காலம் முதலே சென்னை உயர்நீதிமன்றம், இந்தியாவின் முக்கியத்துவம் வாய்ந்த மூன்று உயர்நீதிமன்றங்களில் ஒன்று (Charted High Courts).
அதன் நீதிபதிகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்த்தப்பட்டு இன்று மொத்தம் அங்கீகரிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 75 ஆக (தலைமை நீதிபதி உள்பட) இருக்கிறது.
ஆனால், தற்போது 75 இல் 23 நீதிபதி பதவிகள் (விரைவில் ஒருவர் ஓய்வு உள்பட 24 ஆகக்கூடும்) நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளன.
‘‘தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதி!’’
தேங்கியுள்ள வழக்குகளும், அன்றாடம் போடப்படும் வழக்குகளும் கூடுதலாகவே பெருகும் நிலையில், ‘‘தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதி’’ என்பதை அனைவரும் நன்கு அறிவர்.
சென்னை மட்டுமல்லாது, இது போன்ற பல உயர்நீதிமன்றங்களில் ஏராளமான நீதிபதி பதவிகள் நிரப்பப்படாமலேயே உள்ளன!
நமது இடைவிடாத வெகு நீண்ட கால போராட்டங்கள் காரணமாக, உச்சநீதிமன்றத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு, சமூகநீதிக் கொள்கையை அதிகாரப்பூர்வமாக ‘கொலிஜியம்’ ஏற்று, அதன்படி காலியான உச்சநீதிமன்ற நீதிபதி பதவியில், சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்று, நியமிக்கப்பட்டு சிறப்பாகப் பணி புரிந்து வருகிறார்!
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தொடர்பு உள்ளதா? என்று பார்த்துதான்…
பற்பல நேரங்களில், ‘கொலிஜியம்’ என்ற பதவி நியமனப் பரிந்துரைக் குழு அனுப்பிய பட்டியலைக் கூட – உடனடியாக ஒன்றிய அரசின் சட்டத் துறை மூலம் நியமிக்காது, தங்களது காவிக் கண்ணோட்டப்படி, குறிப்பிட்ட கட்சியின் ஆதரவாளரா அல்லது அதன் கார்டு ஹோல்டரா? அல்லது முன்பு அவருக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தொடர்பு உள்ளதா? என்று பார்த்து, அதன் பிறகே நியமன ஒப்புதல் தருகிறார்கள் என்பது, பரவலாகப் பேசப்படும் செய்தியாகும்.
‘சீனியர்’ என்ற போர்வையில் பெரிதும் உயர்நீதிமன்றப் பார்ப்பனர்கள்!
சென்னை உயர்நீதிமன்றத்தில் ‘கொலிஜியம்’ என்ற நியமனக் குழுவில் ‘சீனியர்’ என்ற போர்வையில் பெரிதும் உயர்நீதிமன்றப் பார்ப்பன நீதிபதிகள் இடம்பெற்று, உச்சநீதிமன்றத்திற்குப் பரிந்துரை செய்கின்றனர். (மூன்று பெயர்களைக் கொண்ட கொலிஜியம்)
‘சீனியாரிட்டிபடி’ உயர்நீதிமன்ற கொலிஜியத்தில் இடம்பெறுபவர் பார்ப்பனரல்லாதவராக வர வாய்ப்பிருந்தாலோ அல்லது தங்கள் கண்ணோட்டத்தில் உகந்தவராக இல்லை என்று கண்டறிந்தாலோ, அவர்களை வேறு மாநிலங்களுக்குப் ‘பதவி உயர்வு’ மூலம் (Kicking up) தள்ளிவிட்டு விட்டு, தங்களது பார்வையில் விரும்பத்தக்கவர்களையே நியமிக்கும் ஒரு நடைமுறை ஏற்படுகிறது.
இதற்குப் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. அதை விலாவாரியாக விளக்க நாம் விரும்பவில்லை.
போதிய அனுபவம், பல திறமைகள் இருந்தாலும், அவர்களுக்கு வாய்ப்புக் கதவு அடைபட்டே இருக்கிறது!
அதுபோக, ஒவ்வொரு முறை பட்டியலை அனுப்பும்போதும், ஒவ்வொரு உயர்ஜாதி – பார்ப்பன ஆண் அல்லது பெண் வழக்குரைஞர்களது பெயர்களைச் சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக (அலுப்பு இன்றி) தமிழ்நாட்டில் வெறும் 3, 4 சதவிகிதமே உள்ள ஒரு வகுப்பிலிருந்து, 10, 12 சதவிகிதம் பிரதிநிதித்துவமும், 80, 90 சதவிகிதம் உள்ள எஸ்.சி., எஸ்.டி., எம்.பி.சி., பி.சி., மைனாரிட்டி வகுப்புகளில் போதிய அனுபவம், வருமான வரி கட்டுவோராகவும், பல திறமைகள் இருந்தாலும், அவர்களுக்கு வாய்ப்புக் கதவு அடைபட்டே இருப்பதுதான் யதார்த்த நிலையாகும்!
வேதனையான நிலையே வழமையாக உள்ளது!
அப்படி ஏதாவது ஒரு பார்ப்பனரல்லாதோரைப் பரிந்துரை செய்தால்கூட, அதிகம் வயதானவராகவும், விரைவில் அப்பதவியில் இருந்து ஓய்வு பெறத் தக்கவராகவும் பரிந்துரைக்கிறார்கள்! அதேநேரத்தில், உயர்ஜாதியிலிருந்து பரிந்துரை மூலம் நியமனம் பெறுபவர்கள் குறைந்த வயதுடையவர்களாகவும், உச்சநீதிமன்றத்திற்குச் சென்று அங்கும் உயர்நிலை பெறும் வகையிலான வாய்ப்பை உறுதி செய்யும் நோக்கத்துடனும் பரிந்துரைகளும், நியமனங்களும் ‘தொலைநோக்கோடு’ நடத்தப்படும் வேதனையான நிலையே வழமையாக உள்ளது!
வழக்குரைஞர் சங்கத்தவர்கள் கையெழுத்திட்ட மனு ஒன்றைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடிவெடுத்துள்ளனர். அதனைக் காலதாமதமின்றி அனுப்பவேண்டும்!
வாய்ப்பற்ற பல வகுப்பினருக்கு நியமன வாய்ப்பை வழங்கவேண்டும்!
காலியாக உள்ள 23, 24 நீதிபதி பதவிகளில் நியமனம் செய்யும்போது, நமது இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சமூகநீதிக்கான போதுமான பிரதிநிதித்துவம் (Adequate Representation) என்ற நியதிக்கேற்ப, வாய்ப்பற்ற பல வகுப்பினருக்கு நியமன வாய்ப்பை வழங்கவேண்டும்.
தமிழ்நாடு, சமூகநீதி மனப்பாங்குள்ள (Psychology Soil) – அதில் முன்னோடியாக நின்று போராடும் ஒரு மாநிலம் என்பதை பரிந்துரைப்போரும், நியமனம் செய்வோரும் கருத்தில் கொள்ளத் தவறக்கூடாது.
பாலின பிரதிநிதித்துவும் (Gender Justice) என்ற சாக்கில், உயர்ஜாதிப் பெண்களையே நியமனம் செய்யும் தந்திரத்தையும் மாற்றிக் கொள்ளவேண்டும்!
இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி எடுத்த உறுதிமொழியிலிருந்து நழுவாமல் கடமையாற்றுக!
புதிய தலைமை நீதிபதியும், கொலிஜியமும், அதன் மேல் உள்ள உச்சநீதிமன்றக் கொலிஜியமும், அதற்கு மேல் இறுதியாக நியமனம் செய்யும் ஒன்றிய அரசின் சட்டத்துறை, குடியரசுத் தலைவர் உள்பட அனைவரும் இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி எடுத்த உறுதிமொழியிலிருந்து நழுவாமல் கடமையாற்றுவது அவசரம், அவசியம்!
நமது முக்கிய விழைவு –வேண்டுகோள்!
மக்கள் மன்றத்தை நீதித் துறைக்கு எதிராகப் போராடும் நிலைக்கு அவர்கள் தள்ளிவிடக் கூடாது என்பதே நமது முக்கிய விழைவு – வேண்டுகோள் ஆகும்!
இதனை அலட்சியப்படுத்தினால் தொடர் மக்கள் கிளர்ச்சி தமிழ்நாட்டில் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
28.4.2026

