சென்னை, ஏப். 27- தமிழ்நாட்டில் நிலவி வரும் கடும் வெயிலுக்கு மத்தியில், வளிமண்டல சுழற்சி காரணமாக மழை பெய்வதற்கான சாதகமான சூழல் உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ள தாவது:-
கோடை மழை
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஏப்ரல் 28ஆம் தேதி வரை ஆங்காங்கே மழை பெய்யும். மே 1ஆம் தேதி முதல் நீலகிரி, கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.
மே 4ஆம் தேதி தொடங்கும் கோடை வெப்பத்தின் தாக்கம் தெரியாத அளவுக்கு பலத்த மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடலோர மாவட்டங்கள்
மே 5ஆம் தேதிக்கு பிறகு டெல்டா மற்றும் தென்கடலோரப் பகுதிகளிலும், மே 6, 7, 8 தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வங்கக்கடல் மற்றும் அரபிக் கடலில் நிலவும் வெப்பம் மற்றும் நீரோட்டம் காரணமாக, இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
மழை பெய்யும் வரை பெரும்பாலான மாவட்டங்களில் இயல்பை விட 2°C முதல் 3°C வரை வெப்பம் அதிகமாகவே இருக்கும். கரூர், மதுரை போன்ற பகுதிகளில் ஏற்கனவே 106°F வரை வெயில் பதிவாகியுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், வெயில் 100°F ஒட்டியே இருக்கும் என்பதால் ஈரப்பதம் காரணமாக வசதி குறைவான சூழல் நிலவக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள நீர் தேக்கங்கள் நிரம்பும் வகையில் பலத்த மழை பெய்யக்கூடும் என்பது விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

