தமிழ்நாட்டு மண்ணின்மீது பா.ஜ.க. வன்முறையைத் திணிப்பதை தடுக்கும்
உங்கள் படை வீரனாக நான் டில்லியில் இருப்பேன்
மோடிக்கு தொடர் தோல்வி பரிசளிக்கப்படும்
நாங்குநேரி, ஏப்.21 தமிழ்நாட்டு மண்ணின்மீது பா.ஜ.க. வன்முறையை திணிப்பதை தடுக்கும் உங்கள் படை வீரனாக நான் டில்லியில் இருப்பேன். மோடிக்கு தொடர் தோல்வி பரிசளிக் கப்படும் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கூறினார்.
ராகுல் காந்தி
திருநெல்வேலி மாவட்டம் நாங்கு நேரியில் நேற்று (20.4.2026) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் திருநெல்வேலி, தென்காசி மாவட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் ரூபி மனோ கரன் வி.பி. துரை, சங்கை கணசேன், திமுக வேட்பாளர்கள் மு.அப்துல் வகாப், சுப்பிரமணியன், மு.அப்பாவு, மனோஜ் பாண்டியன் ஆகியோரை ஆதரித்து ராகுல் காந்தி பேசியதாவது:
ஒவ்வொரு மாநிலமும் தங்களை தாங்களே ஆண்டு கொள்ள வேண்டும். அதற்கான உரிமை இருக்க வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம். ஆனால், அவர்கள் அனைத்து மாநிலமும் ஆர்எஸ்எஸ் சிந்தாந்தத்தின் கீழ் அடிபணிந்து நிற்க வேண்டுமென நினைக்கிறார்கள். இந்த தேர்தலின் மூலம் எப்படியாவது தமிழ்நாட்டில் ஊடுருவ வேண்டும் என்று பாஜக நினைக்கிறது.
பாஜக-வால் தமிழ் மொழியையும், இனத்தையும், வரலாற்றையும், பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் நேரடியாக தாக்க முடியாது என்பதால், அதிமுக என்ற முகமூடியை இங்கு பயன்படுத்துகிறார்கள். இந்தத் தேர்தல் என்பது பாஜக-வின் சித்தாந்தத்திற்கு எதிரான போராட்டம். ஒரு பக்கம் காங்கிரஸ் பேரியக்கமும், திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் கொண்ட ‘இண்டியா’ கூட்டணியும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் உள்ளோம். நாங்கள் தமிழ்நாட்டின் பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றைப் போற்றிப் பாதுகாக்க முயற்சி எடுத்து வருகிறோம். ஆனால், எதிர்புறம் அதிமுக-வும் அவர்களது முகமூடி அணிந்துள்ள பாஜக-வும் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை அழிக்க நினைக்கின்றன.
தொடர் தோல்வி
கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய அரசியலமைப்பு சாசனத் தின் மீது தாக்குதலை நடத்த முயற்சித்தார்கள். ‘மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதாவை’ நிறைவேற்றப் போவதாகச் சொல்லிவிட்டு தொகுதி மறுவரையறை செய்து தேர்தல் வரைபடத்தை மாற்ற சதித் திட்டத்தை செய்தார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் சட்டப் பேரவை, நாடாளுமன்ற தொகுதிகளை மாற்றி அமைக்க முயற்சி மேற்கொண்டார்கள். தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள், வடகிழக்கு மாநிலங்களில் அரசின் பிரதிநிதித்துவத்தை குறைக்க பாஜக முயற்சி மேற்கொண்டது.
தொகுதி மறுவரையறை மூலம் மாநிலங்களின் தனித்துவத்தை சிதைக்க பாஜக முயற்சி மேற்கொண்டது. அதனால்தான் எதிர்க்கட்சிகள் நாங்கள் ஒன்றிணைந்து மகத்தான தோல்வியை மோடிக்கு பரிசளித்தோம். அரசியல் சாசனத்தை சிதைப்பதற்கான எந்த முயற்சியையும் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட ‘இண்டியா’ கூட்டணிக் கட்சிகள் முறியடிப்போம். மோடிக்கு தொடர் தோல்வி பரிசளிக்கப்படும்.
மகளிருக்கான இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற வேண்டும் என பாஜக முயற்சித்ததால், ஏற்கெனவே 2023-இல் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. 3-இல் 1 பங்கு இடத்தை மகளிருக்கு நாடாளுமன்றத்தில் தருவதாக அதில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. அந்த சட்டத்தின்படி தொகுதி மறுவரையறை செய்ய வேண்டிய தேவை கிடையாது. இந்தியாவின் தேர்தல் வரைபடத்தை மாற்றி அமைக்க வேண்டிய அவசியம் கிடையாது. அந்த மசோதா நிறைவேற்றும் போது மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா இன்னும் 10 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும் என பாஜக-வினர் சொன்னார்கள். நாங்கள் உடனடியாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினோம்.
பாஜக மூன்றில் ஒரு பங்கு மகளிருக்கான மசோதாவை நிறைவேற்ற விரும்பினால் நாங்கள் அந்த மசோதாவை ஆதரிக்கிறோம். எதிர்க்கட்சிகள் அதற்கு உறுதுணையாக இருக்கும் என்ற உத்தரவாதம் அளிக்கிறேன். தமிழ்நாட்டிற்கென சிறப்பான சமூக நீதி கொள்கைகள் உள்ளன. தமிழ்நாடு மகத்தான வளர்ச்சி திட்டத்தை நிறைவேற்றிக் காட்டியுள்ளது. தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டம் என்பது அனைத்து சமூகத்தை சேர்ந்தவருக்கும் மிக பெரிய ஆதரவாக இருக்கிறது. தமிழ்நாட்டில் வளர்ச்சிக்கான மிகப்பெரிய அடித்தளம் காமராஜரால் அமைக்கப்பட்டது. காமராஜரை மட்டுமல்ல காமராஜர் கொண்டு வந்த தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான ஆதரவு திட்டங்களையும் பாஜக வெறுக்கிறது.
பாஜக தமிழ்நாட்டின் சமூக நீதி திட்டங்கள், சமூக நீதி வரலாறுகள் வெளி மாநிலங்களுக்குச் சென்றுவிடக்கூடாது என நினைக்கிறது. திமுக சமூகநீதியை உயர்த்திப் பிடிப்பதில் மகத்தான பங்களிப்பை செய்து வருகிறது. தமிழ்நாட்டில் மகளிருக்கு ரூ.1,000 என்ற சிறப்பான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காமராஜருக்கு அடுத்தபடியாக பள்ளிகளில் காலை உணவு சிறப்பான முறையில் வழங்கப்பட்டு வருகிறது. இதுபோல் சமூகநீதியையும் வளர்ச்சி யையும் ஆழப்படுத்தி அதிகமான இடங்களுக்கு கொண்டு செல்ல முயற்சிக்கிறோம்.
மீண்டும் ஆட்சி வந்தால் மகளி ருக்கு ரூ.ஆயிரத்திலிருந்து ரூ.2 ஆயிரமாக உரிமைத் தொகை உயர்த்தி வழங்கப்படும். மூத்த குடிமக்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும். தமிழ்நாட்டில் உயர் கல்வி மாணவர்களுக்கு ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் ஆட்சிக்கு வந்து 300 நாட்களுக்குள் அனைத்து விதமான அரசின் காலிப் பணியிடங்களும் நிரப்பப்படும்.
ஆர்எஸ்எஸ், பாஜக-வை தமிழ்நாட்டிற்குள் வரவிடாமல் தடுப்பது தான் இந்த தேர்தலில் முக்கிய நோக்கம். ஒற்றுமை, அன்பு, சமத்துவம் கொண்ட நாட்டை நாங்கள் விரும்புகிறோம். வன்முறை, வெறுப்பு, கோபம் உள்ளிட்டவற்றை இந்த மண்ணின் மீது (தமிழ்நாடு) பாஜக திணிக்க விடாமல் தடுத்து வருகிறோம். நான் உங்கள் சகோதரனாக உங்கள் படைவீரனாக எப்போதும் டில்லியில் இருப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.

