திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஒரு கணினியைப் போன்றவர். எல்லோரும் பலமுறை எழுதியது தான், மீண்டும் ஒருமுறை நினைவு செய்வோம்!
ஆசிரியர் ஒரு நிகழ்ச்சிக்குப் போகிறார். வழியில் கழகத் தோழர்கள் 100 பேர் நிற்கிறார்கள். அனைவருக்கும் வணக்கம் சொல்வது, ஒவ்வொருவரிடமும் தனிப்பட்ட முறையில் நலன் விசாரிப்பது, குடும்பத்தில் ஏதாவது திருமணமோ, இழப்போ, கல்வி சார்ந்த விசயமோ, உடல்நலக் குறைவோ… இப்படி எதுவாக இருந்தாலும், தனித்தனியாக, நினைவோடு விசாரிப்பது என்பது, தட்டியவுடன் தகவல் தரும் கணினி போல, பார்த்தவுடன் நினைவு கூரும் ஆசிரியரின் திறன்!
அதேபோல பொறுப்பாளர்களைப் பார்த்தால் அவர்களிடம் என்ன கேட்க வேண்டுமோ, என்ன சொல்ல வேண்டுமோ அது அந்தந்த இடத்தில் நிகழும். கல்வி நிறுவனங்களுக்குச் சென்றால் பதிவாளர், முதல்வர், தலைமையாசிரியர், பேராசிரியர்கள் உள்ளிட்டு சிறு பணியாளர்கள் வரை தகவல்கள் பரிமாறப்படும். நாளொன்றுக்கு எத்தனை மனிதர்களைச் சந்தித்தாலும் அவரவர்களுக்கு ஏற்ற செய்திகளை அழகழகாய் நினைவு கூர்வார்.
இவையெல்லாம் அவ்வளவு எளிதாக யாரிடமும் பார்த்திட முடியாது. அதிலும் முழுக்க, முழுக்கச் சமூக அர்ப்பணிப்பு இயக்கத்தில் இது ஓர் பிரமாண்டம். ஒரு கணினிக்குள் ஆயிரக்கணக்கான கோப்புகள் (Files) இருக்கும்.

அதைப் போலத்தான் ஆசிரியரும்… ஏராளமான கோப்புகளைத் தன்னகத்தே கொண்டு இயங்குபவர். இன்னொரு செய்தி தெரியுமா தோழர்களே… ஆசிரியர் பிறந்த தினமான டிசம்பர் 2 ஆம் தேதிதான் இந்தியாவின் கணினி எழுத்தறிவு தினமாகக் கொண்டாடப்படுகிறது. எவ்வளவு தேதிப் பொருத்தம் பாருங்கள்!
தமிழ்நாட்டில், இந்தியாவில், உலக நாடுகளில் நிகழ்ச்சிகளைத் திட்டமிடுவது ஆகட்டும், பொறுப்பாளர்களைப் புதிதாக நியமனம் செய்வதாகட்டும், எழுதுவதற்குத் தோழர்களைத் தூண்டுவது ஆகட்டும், பேச்சாளர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பதாகட்டும்… எந்த ஒன்றையும் ஆசிரியர் விடுவதில்லை. 365 நாளும் சமூகநலன் சார்ந்து ஒருவர் சுறுசுறுப்பாய் இயங்க முடியும் என்றால், அதற்கு ஆகச் சிறந்த உதாரணம் ஆசிரியர் தான்!
அப்படியான ஆசிரியரின் தொண்டர்கள் தமிழ்நாடு கடந்தும் சமூகப்பணி ஆற்றி வருவதை நாம் அறிவோம். அந்த வகையில் கடந்த இரண்டு வாரங்களாகப் பெங்களூரு வீ.மு.வேலு (106), முல்லைக்கோ (79) ஆகியோர் குறித்த நினைவலைகளைப் பார்த்தோம். இந்த வாரம் பி.ஆர்.கஜபதி (91) அவர்களை, சம்பங்கி ராமநகர் எனும் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தோம்.
அய்யா வணக்கம்! தங்களைக் குறித்து அறிமுகம் செய்து கொள்ளுங்கள், இயக்க அறிமுகம் எப்படிக் கிடைத்தது என்றும் கூறுங்கள்?
என் பெயர் பி.ஆர்.கஜபதி. 1935இல் பிறந்தேன். இப்போது 91 வயதாகிறது. சொந்த ஊர் காஞ்சிபுரம். பெற்றோர் பி.ஜி.ரங்கையா – பெருந்தேவி. அப்பா தறி நெய்யும் தொழில் செய்தவர். பட்டுச் சேலைகள் விற்பனை செய்வார். அக்காலத்தில் நீதிக்கட்சியில் இருந்தவர். குறிப்பாக அறிஞர் அண்ணாவுடன் பழகும் வாய்ப்பைப் பெற்றவர். அந்நேரத்தில் எம்.எல்.சி. தலைவராக இருந்த ஏ.கே.தங்கவேல் என்பவர் எங்கள் வீட்டிற்கு அருகில் இருந்தார். அவரது வீட்டிற்கு அண்ணா அடிக்கடி வருவார். எனது தந்தையோடு சேர்ந்து, அண்ணாவுடன் நானும் படம் எடுத்துக் கொண்டுள்ளேன்.
பெரிய காஞ்சிபுரத்தில் உள்ள கங்கைகொண்டான் மண்டபத்திலும், சின்னக் காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் அருகிலும் ஆண்டிற்கு இரண்டு கூட்டங்கள் நடைபெறும். தந்தை பெரியாரும் அடிக்கடி வருவார். பெரியாரையும் நான் சந்தித்துள்ளேன்.
பெங்களூருவில் இயக்கப் பணிகள்
எப்படிப் போகிறது?
முதுகலை பொது நிர்வாகம் (Public Administrative) தொடர்பான படிப்பை ஒடிசா சென்று படித்தேன். பின்னர் கூட்டுறவுத் துறையில் காஞ்சிபுரத்தில் வேலை கிடைத்தது. பிறகு நான்கைந்து மாவட்டங்களில் பணிபுரிந்து ஓசூர் சென்றேன். பின்னர் விருப்ப ஓய்வு பெற்று பெங்களூருவிலேயே தங்கிவிட்டேன். எங்களுக்கு அய்ந்து பிள்ளைகள். அதில் ஒரு மகளுக்கு, நல்லி குப்புசாமி அவர்களின் மகனைத் திருமணம் செய்து வைத்தோம்
தற்போது கருநாடகத் திராவிடர் கழகத்தில் துணைத் தலைவராக இருக்கிறேன். பெரியார் பொன்மொழிகளைத் தமிழில் இருந்து கன்னடத்திற்கு மொழிப்பெயர்ப்பு செய்துள்ளேன். பெரியார் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளும் மடாதிபதி வீரபத்திர சென்னமல்ல சுவாமிகள் (தமிழ்நாட்டின் குன்றக்குடி அடிகளார் போல) கன்னட மொழியில் எழுதிய பகுத்தறிவுப் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளேன். அதைச் சொந்த முயற்சியில் நானே வெளியிட்டும் இருக்கிறேன்.
வீடு முழுக்கப் பல மொழிகளில்
பொன்மொழிகள் ஒட்டப்பட்டுள்ளதே?
ஆமாம்! எனக்குத் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகள் தெரியும். பலரும் நம் இல்லத்திற்கு வருவர். அவரவர் மொழியில் பகுத்தறிவுக் கருத்துகளைத் தெரிந்து கொள்ளட்டுமே என்கிற எண்ணத்தில் இப்படி ஒட்டியுள்ளேன்.
வீட்டிற்கு வெளியே “உதயமாகும் பெரியார் உலகம்” என ஒரு பலகை வைத்துள்ளேன். தவிர கன்னடம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் பகுத்தறிவுக் கருத்துகளை எழுதிப் பிரச்சாரம் செய்து வருகிறேன்.
பெரியார் கொள்கையில் இருந்ததால், பணியில் இருந்தபோது பார்ப்பனர்கள் எவ்வளவோ இடையூறு செய்தார்கள். பதவி உயர்வு கிடைக்காமலும் பார்த்துக் கொண்டார்கள்.
எனினும் நமக்குப் பதவி, பணம் என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்தான். பகுத்தறிவுச் சிந்தனையும், சுயமரியாதை உணர்வுமே முதலிடம்! அதனால் தான் முக்கியமான சம்பங்கி ராமநகர் பிரதான சாலையில் பெரியார் கருத்துகளை எழுதி, என்னை அடையாளப்படுத்திக் கொள்கிறேன்”, என 91 வயது இளைஞர் கஜபதி தெரிவித்தார்.

