பா.ஜ.க.வின் ‘பஞ்சாங்க’அறிக்கை!

4 Min Read

ஒவ்வொரு கட்சியும் தேர்தலுக்கு முன் தேர்தல் அறிக்கை வெளியிடுவது வழக்கம். அது ஒரு வகை சம்பிரதாயமாகவே இருந்து வந்திருக்கிறது.

தி.மு.க. தேர்தல் அறிக்கை என்ற ஒன்றுதான் மக்கள் மத்தியில் பேசு பொருளாக இருந்து வந்திருக்கிறது. தேர்தல் கதாநாயகன் என்று சொல்லும் அளவுக்குச் சொல்லும், பொருளும், செயலும் பூத்துக் குலுங்கும் – மக்களின் அன்றாட வாழ்வை மய்யப்படுத்தியும், தொலைநோக்குக் கண்ணோட்டத்தைக் கணக்கில் கொண்டும் தயாரிக்கப்பட்டு வந்திருக்கிறது– அதுதான் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையாகும்.

தமிழ்நாட்டில் நடைபெறும் ‘திராவிட மாடல்’ அரசு –மக்களுக்கு ஊக்கம் தரும் வகையிலும், குறிப்பாக பல நூற்றாண்டுக் காலமாகப் பிறவி அடிமைகளாக ஆக்கப்பட்ட பெண்கள் கல்வியில் சிறந்து, கவினுறு வாழ்க்கை வளம் ஈட்டுவதற்காகவும், அடித்தட்டில் கிடந்து உழலும் மக்களைக் கை தூக்கி விடும் வகையிலும், பள்ளிகளில் இடை நிற்றலை அறவே நீக்கும் வகையிலும் நிதி உதவியை ‘திராவிட மாடல்’ அரசு வழங்கினால் அவற்றைத் திறந்த மனத்தோடு அணுகாமல் பிரதமராக இருக்கக் கூடிய ஒருவரே – அதாவது நரேந்திர தாமோதர தாஸ் மோடியே ‘இலவசங்கள்’ என்று கூறிக் கொச்சைப்படுத்துவது அவரின் வாடிக்கையாகும்.

இது ஒரு ரேவடி கலாச்சாரம் (வட இந்தியாவில் இனிப்பு வழங்குவது போன்று) என்று அவருக்கே உரித்தான முறையில் கேலி செய்தார்.

ஓட்டுகளைப் பெறுவதற்காக இலவசங்களைத் தருவது நாட்டின் வளர்ச்சிக்கும், வரி செலுத்துவோரின் பணத்திற்கும் எதிரானது என்பது பிரதமர் மோடியின் கருத்தாக, வாதமாக இருந்து வந்திருக்கிறது.

இலவசங்களை வழங்குவதால் மாநிலங்களின் கடன் சுமை அதிகரிப்பதாக பிரதமர் மோடி குற்றஞ்சாட்டி வந்திருக்கிறார். இலவசங்களால் எதிர்காலத் தலைமுறையினரின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன என்றும் குறை சொல்லி வந்திருக்கிறார்.

திருச்சி, மதுரை போன்ற இடங்களில் அண்மையில் பிரச்சாரத்திற்கு வந்தபோதுகூட (மார்ச்சு 1 மற்றும் மார்ச்சு 17) ‘ஒன்றிய அரசு வழங்கும் நிதி(?) மற்றும் திட்டங்கள் நேரிடையாக மக்களைச் சென்றடைகின்றன. ஆனால் சில கட்சிகள் ஊழலை மறைக்க இலவசங்களை ஆயுதமாகப் பயன்படுத்துகின்றன’ என்று மனமறிந்து உண்மைக்கு மாறாக வார்த்தைகளைக் கொட்டினார்.

அப்படியெல்லாம் ‘வக்கணையாக’ப் பேசிய பிரதமர் மோடி சார்ந்த பா.ஜ.க.வின் தமிழ்நாட்டுத் தேர்தல் அறிக்கையில் மோடியின் மொழியில் இலவசங்கள் இலவசமாக வாரி விடப்பட்டுள்ளன என்பதுதான் வேடிக்கை!

பக்கத்துக்குப் பக்கம் பல வண்ணங்களில் பல கோயில்கள், கோபுரங்கள் – மதத் தொடர்பான சங்கதிகள்!

எடுத்துக்காட்டாக ‘‘தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைகள் மற்றும் கோயில் மரபுகளைப் பாதுகாக்கும் வகையில் திருக்கோயில் நித்ய பூஜை தொகுப்புத் திட்டம், தமிழ்நாட்டின் கடல், மலைகள், காடுகள், கோயில்கள் மற்றும் பண்பாடு சுற்றுலா மூலம் ஆண்டு முழுவதும் சுற்றுவாவை மேம்படுத்துவோம், அத்துடன் நாட்டுப்புற மரபுகள் மற்றும் உள்ளூர் தெய்வங்களின் சிறப்புகளைப் பறைசாற்றும் வகையில் நாடு தழுவிய தமிழ்நாடு கிராம தெய்வங்கள் சங்கமம் நிகழ்ச்சியை நடத்துவோம்.

தென் தமிழகத் திருத்தலப் பயண அனுபவங்களை மேம்படுத்தும் வகையில், ‘தென் தமிழகத் திருத்தல யாத்திரை’ திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிக பக்தர்கள் வருகை தரும் முக்கிய கோவில்களில், நாளொன்றுக்கு இரண்டு மணி நேரம் உள்ளூர் மக்களுக்கான பிரத்யேக தரிசன நேரம் ஒதுக்கப்படும்.

தமிழறிவு, வீரம் மற்றும் பண்பாட்டின் கலங்கரை விளக்கமாகத் திகழும் தமிழ்க் கடவுள் முருகப் பெருமானின் புகழைப் போற்றும் வகையில், அவரது ஆன்மிக மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தை அங்கீகரித்து, தைப்பூசத் திருநாளை மாநில விழாவாக அறிவித்துக் கொண்டாடுவோம்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூணில் தீபம் ஏற்றும் கார்த்திகைத் தீபத் திருவிழாவின் புனிதமான மரபுகள் தடையின்றித் தொடர்வதை உறுதி செய்து தமிழ் மக்களின் புனிதமான பாரம்பரியத்தைப் பாதுகாப்போம். இந்தப் பழக்கத்தை வரும் தலைமுறையினருக்கும் கொண்டு செல்லத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்.

தமிழகம் ஆலயங்களின் பூமி. காலத்தால் அழியாத இத்திருக்கோயில்கள் இம்மண்ணின் மாண்பினை வரவடிமைத்துள்ளதுடன், மாநிலத்தில் வலிமையான, தொடர்ச்சியான நாட்டுப் புறக்கலைகள் மற்றும் பாரம்பரிய மரபுகளை வெளிப்படுத்துகின்றன. இதே வளமான நாட்டுப்புறக் கலைகள் மற்றும் கோயில்  மரபுகளைப் பாதுகாக்கவும், அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லவும் பின்வருவனவற்றை மேற்கொள்வோம்.

(a) திருக்கோயில் நித்யபூஜை தொகுப்புத் திட்டத்தின்மூலம் கற்பூரம், நெய், எண்ணெய், 60 கிலோ அரிசி, குங்குமம், மஞ்சள் மற்றும் விபூதி ஆகியவை அடங்கிய மாதாந்திர நித்ய பூஜை தொகுப்பு வழங்கப்படும்.

(b) கோவில் மணி, தாம்பூலம், ஆரத்திப் பொருட்கள் மற்றும் பூசாரிகளுக்கு வேட்டித் தொகுப்பு போன்ற அத்யாவசிய பொருட்கள் வழங்கப்படும்.

(c) சிறு மற்றும் நடுத்தர கோவில்களின் தினசரி கோவில் செயல்பாடுகளுக்கும் பராமரிப்புகளுக்கு ஆண்டுக்கு ரூ.25,000 வழங்கப்படும்.

(d) தமிழகத்தின் செழுமையான மரபுகள், சிறு தெய்வங்கள் மற்றும் நாட்டுப்புறக் கலை வடிவங்களை வெளிப்படுத்தும் வகையில் இந்தியாவின் முக்கிய நகரங்களில் ‘தமிழக கிராம  தெய்வங்கள் சங்கமம்’  மூலமாக நிகழ்ச்சிகள் நடத்தப்படும். பிரத்யேக ஆன்மிகச் சுற்றுலா கோவில் சுற்றுலாக்களை அடிப்படையாகக் கொண்ட பாரம்பரிய சுற்றுலாக்கள்.’’

இந்தியாதி.. இத்தியாதி அம்சங்களைக் கொண்ட பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை என்பதைவிட பஞ்சாங்க அறிக்கை என்று சொல்லுவதே பொருத்தமானதாகும். இவைகூட குறிப்பிட்ட இந்துமதம் சார்ந்த கோயில்களை மய்யப்படுத்தும் – அவர்களின் இந்துத்துவா அஜண்டாவே!

இதில் ஓர் உள்ளீடவைக் கவனிக்கத் தவறக் கூடாது, நாட்டுப்புறக்கடவுள், தமிழ்நாட்டுத் தெய்வங்கள், தமிழ்நாட்டுப் பாரம்பரியம், தமிழ்நாட்டு மரபுகள் என்று எல்லா வைதிக சமாச்சாரங்களையும்  இழுப்பது – தமிழ் மக்களின் கண்களில் பக்தி மிளகாய்ப் பொடியைத் தூவும் தந்திரம் தான்.

தேர்தல் அறிக்கை என்ற பெயரால் பெரும்பாலும் கோயில்  தலப்புராண சங்கதிகளின் தொகுப்பாக இருப்பதை உணர முடியும். இதுதான் பார்ப்பனீய, பாரத ஜனதாவின் ஹிந்துத்துவ சிந்தனைகள், செயல்பாடுகள் என்பதற்கான அடையாளம்.

1971ஆம் ஆண்டையே சந்தித்த தமிழ்நாட்டு மக்கள் இவர்களின் சிருங்கார ஜோடனைகளின் உள்நோக்கத்தைப் புரிந்து கொள்வார்கள் – இது உறுதி! உறுதி!!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *