திருவனந்தபுரம், ஏப்.16– சபரிமலை அய்யப்பன் கோயிலில் பதிக்கப்பட்டிருந்த தங்கம் திருடப்பட்ட விவகாரத்தில், போதிய காலக்கெடுவுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால் கைதான 12 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த திருட்டு சம்பவம் குறித்து, கேரள உயர்நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் ஏடிஜிபி வெங்கடேஷ் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வந்தது. இந்த வழக்கில் கீழ்க்கண்ட முக்கிய நபர்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்: கண்டரர் ராஜீவரர் (சபரிமலை மூத்த தந்திரி)பத்மகுமார் & வாசு (திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் தலைவர்கள்)சங்கரதாஸ் & விஜயகுமார் (முன்னாள் உறுப்பினர்கள்)பங்கஜ் பண்டாரி (சென்னை அம்பத்தூர் தனியார் நிறுவன சி.இ.ஓ)கோவர்தன் (பெல்லாரி நகைக்கடை அதிபர்) சட்டப்படி ஒரு வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்கள் மீது 90 நாட்களுக்குள் காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்.
ஆனால், இந்த வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழு உரிய நேரத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யத் தவறியது. இதன் காரணமாக, கைதானவர்கள் ஒவ்வொருவராக பிணையில் வெளிவரத் தொடங்கினர். இறுதியாக, கடந்த ஜனவரி 14ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த தேவசம் போர்டு முன்னாள் உறுப்பினர் சங்கரதாசுக்கும், 90 நாட்கள் முடிந்த நிலையில் 13.4.2026 அன்று கொல்லம் விஜிலன்ஸ் நீதிமன்றம் பிணை வழங்கியது. சங்கரதாசுக்கு பிணை கிடைத்ததைத் தொடர்ந்து, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 12 பேரும் தற்போது சிறையிலிருந்து வெளியே வந்துள்ளனர். புலனாய்வுக் குழுவின் இந்த காலதாமதம் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது

