ஹிந்துராஜ்ஜியத்தை உருவாக்கும் சூழ்ச்சி!! உரிமைப் போரின் பெரு முழக்கமாக நாடெங்கும் கருப்புக் கொடிகள் உயரட்டும்!

2 Min Read

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஒழித்துக்கட்டி மனுஸ்மிருதியைச் சட்டமாக்கும் பேராபத்துக்கான அடித்தளமே தொகுதி மறுசீரமைப்பு சட்டத் திருத்தம்!

‘‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஒழித்துக்கட்டி  மனுஸ்மிருதியைச் சட்டமாக்கும் பேராபத்துக்கான அடித்தளமே தொகுதி மறுசீரமைப்பு சட்டத் திருத்தம்! உரிமைப் போரின் பெரு முழக்கமாக நாடெங்கும் கருப்புக் கொடிகள் உயரட்டும்’’ என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை யைத் தகர்த்துத் தூக்கியெறிந்து மனுஸ்மிருதியை அரசியலமைப்புச் சட்டமாக்கும் ஆர்.எஸ்.எஸ்.சின் நெடுங்கால அஜெண்டாவின் செயலுருவே, நாளை (16.4.2026) கூட்டப்படவிருக்கும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் கொண்டுவரப்படவிருக்கும் 131 ஆம் அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் ஆகும்!

மிகப் பெரிய சூழ்ச்சி

அதன் நோக்கம் மகளிருக்கான இடஒதுக்கீடு அல்ல; நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்தி, தென்னாட்டின் அரசியல் வலிமையைக் குறைப்பது மட்டுமல்ல; ஒட்டுமொத்தமாகவே நாட்டை ‘இந்துராஷ்டிரம்’ ஆக்கி, இந்தியாவைப் பார்ப்பனிய பாசிசப் பிடியில் நிரந்தரமாகச் சிக்க வைப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் மிகப் பெரிய சூழ்ச்சியாகும்.

இந்தப் படுகுழியின் ஆழத்தை உணர்ந்து தான்,

கடந்த ஆண்டு முதலே இதற்கெதிராகத் தமிழ்நாடு போர்க்குரல் எழுப்பி வருகிறது. தென்னாட்டு முதலமைச்சர்களை அழைத்து மாநாடு கூட்டி, இப் பிரச்சினையைக் குறித்து விவாதிக்க வகை செய்தார் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! நேற்று (14.4.2026) தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி எழுதியுள்ள கடிதத்திலும், அனைவரும் இணைந்து போராட வேண்டிருப்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார். கேரளம், கருநாடக அரசுகளும் இப் பிரச்சினையில் மிகுந்த அக்கறை காட்டுகின்றன.

தேர்தல் தீவிரத்தில் இருக்கும் தமிழ்நாடு, மேற்கு வங்க மாநிலங்களின் கவனத்தைத் திருப்பவும், இதில் போதிய கவனம் செலுத்துவதைத் தடுக்கவும் செய்யப்படும் சூழ்ச்சிதான் அவசர நாடாளுமன்றக் கூட்டம்!

முதலமைச்சர் மு..ஸ்டாலின் அழைப்பு!

எத்தனைத் தாக்குதல்கள் நம் மீது நடத்தப்பட்டாலும், எத் திசையிலிருந்து தொடுக்கப்பட்டாலும் அனைத்தையும் எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கிறோம் என்பதைக் காட்டத்தான் நாளை (16.4.2026) தமிழ்நாடு முழுவதும் அனைத்து வீடுகளிலும் கருப்புக் கொடி ஏற்றப்பட வேண்டும் என்ற திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் அழைப்பாகும்.

உரிமைப் போரில்
ஒருபோதும்  தமிழ்நாடு தலை தாழாது!

தமிழ்நாட்டின் எதிர்காலத்தை, நமது உரிமைகளின் அடித்தளத்தையே பெயர்த்து அதலபாதாளத்தில் தள்ளும் ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. அரசின் இந்தச் சூழ்ச்சியை முறியடிக்க நாம் அனைவரும் களம் கண்டே ஆக வேண்டும். அறவழிப்பட்ட பெரும் உரிமைப் போரைக் கொடியசைத்துத் தொடங்கி வைக்கும் நிகழ்வே நாளைய கருப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டமாகும். பட்டிதொட்டிகள் தொடங்கி, பெரு நகரங்கள் வரை எங்கெங்கும் கருப்புக் கொடிகள் பறக்கட்டும். உரிமைப் போரில் ஒருபோதும்  தமிழ்நாடு தலை தாழாது என்பதை பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கக் கும்பலுக்கு எடுத்துரைப்போம். திராவிட இயக்கத்தின் வீச்சு என்ன… தமிழ்நாட்டின் உணர்வு என்ன என்பதை பார்ப்பன பாசிசக் கூட்டம் உணரட்டும்!

உயரட்டும் உயரட்டும் கருப்புக் கொடி! – தமிழ்

நாடெங்கும் வீடெங்கும் உரிமைக் கொடி!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

 

 சென்னை    

15.4.2026  

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *