ஒன்றிய பா.ஜ.க. அரசின் தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்!

2 Min Read

சென்னை, ஏப்.15 தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டில் நாளை (ஏப்.16) கருப்புக் கொடிப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நாளை (ஏப்.16) தொடங்கவுள்ளது. இந்தக் கூட்டத்தில் மகளிர் இட ஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை திருத்த மசோதாக்களை நிறைவேற்றி, அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள ஒன்றிய பா.ஜ.க. அரசு திட்டமிட்டுள்ளது.

மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை எழுப்பி வருகின்றன.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட காட்சிப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

‘‘தொகுதி மறுவரையறை என்ற பெயரில் பா.ஜ.க. அரசு தனது எல்லையைத் தாண்டி, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கிறது. வட மாநிலங்களுக்கு அரசியல் வலிமையை மேலும் வாரி வழங்கும் வகையில் தென் மாநிலங்கள் அரசியல் வலிமையை இழக்கும் வகையில் நடப்பதைப் பார்த்துக் கொண்டு தமிழ்நாடு சும்மா இருக்காது.

ஒவ்வொரு குடும்பமும் தெருவுக்கு வந்து போராடும் எனத் தெரிவித்திருந்தேன். யார் நல்லது சொன்னாலும் கேட்காத ஒன்றிய பா.ஜ.க. அரசு இதையும் கேட்கவில்லை. சட்டத்திருத்தம் கொண்டு வந்து தமிழ்நாட்டின் குரலை ஒடுக்கப் பார்க்கிறார்கள். நாளை கொண்டு வரப்போகும் சட்டத் திருத்தத்தால் வட மாநிலங்கள் மற்றும் தென் மாநிலங்களின் தொகுதிகள் வேறுபடும்.

தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களின் தொகுதிகள் அதிகரிக்கப்படும் எனக் கூறிவிட்டு, அவர்களுக்குச் சாதகமான வட மாநிலங்களுக்கு மிக மிகக் கூடுதலாக தொகுதிகள் அதிகரிக்கப்பட்டு, தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவமே தேவையில்லை என்ற நிலையைக் கொண்டு வரப் போகிறார்கள். இதைத்தான் தமிழ்நாட்டுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி எனக் கூறுகிறோம்.

மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்காக தென் மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை இது. தேச வளர்ச்சிக்காக நாங்கள் துணை நின்றால் எங்களின் அரசியல் உரிமையைப் பறிப்பீர்களா?

தமிழர்களையும், தென் மாநில மக்களையும் இரண்டாம் தரக் குடிமக்களாகப் பார்க்கிறீர்கள். டில்லி பா.ஜ.க.வுக்கு தமிழர்கள் யார் எனக் காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. பா.ஜ.க.வுக்கு எதிராக தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பமும் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

நாடாளுமன்றத்தில் நாளை அவர்கள் கொண்டுவரத் திட்டமிட்டிருக்கும் கருப்புச் சட்டத்துக்கு எதிராக அனைத்து வீடுகளிலும் கருப்புக் கொடி ஏற்றுங்கள். இந்தியாவை இருண்ட காலத்துக்கு அழைத்துச் செல்லும் எதேச்சதிகார பா.ஜ.க. அரசுக்கு எதிராகக் கருப்புக் கொடியேற்றுவோம். இது தமிழ்நாட்டுக்கும் – டில்லிக்கும் எதிரான போராட்டம் என்பதை பா.ஜ.க. தொடர்ந்து நிரூபிக்கிறது. அவர்களுக்குத் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கக் கூடாது என்பதற்காக சதித் திட்டத்தை சட்டமாகவே கொண்டு வருகிறார்கள். சதியை எப்படி சட்டமாக இயற்ற முடியும்? ஒவ்வொரு வீட்டிலும், பொது இடங்களிலும் கருப்புக் கொடியேற்றுவோம்.

மீண்டும் எச்சரிக்கை விடுக்கிறேன். மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யக் கூடாது. இந்த கருப்புச் சட்டத்தை நிறைவேற்றக் கூடாது. 8 கோடி தமிழர்களின் ஒற்றைக் கோரிக்கை இது. அரசியல் எல்லைக் கடந்து, தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்க தமிழ்நாடே ஓங்கி ஒலிக்கட்டும். தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!” என அந்தக் காட்சிப் பதிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *