பரமக்குடி, ஏப்.14- ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு தேர்தல் பிரசாரத்துக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், தொழில் மற்றும் வர்த்தக சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள், ஜமாத் தலைவர்கள் என
50-க்கும் மேற்பட்ட சங்கங்களின் நிர்வாகிகள் சந்தித்தனர்.
அப்போது அவர்கள், ராமநாதபுரம் மாவட்டத்துக்கு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தியதற்கும், தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டதற்காகவும் நன்றி தெரிவித்தனர். சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து கோரிக்கை மனுக்களையும் வழங்கினார்கள்.
அதேபோன்று ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு மீனவர் சங்கங்களின் நிர்வாகிகளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்கள்.
அப்போது அவர்கள், மீன்பிடி படகுகளை பாதுகாப்பாக நிறுத்துவதற்கும், மீன்பிடி இடத்தில் இருந்து அதன் நுகர்வு வரை சுகாதாரமான முறையில் கையாளப்படுவதை உறுதி செய்வதற்கும் மீன்பிடி துறைமுகங்கள், மீன் இறங்குதளங்கள், கரையோர வசதிகள், மீன் சந்தைகள் போன்ற நவீன உள்கட்டமைப்பு வசதிகளை அமைத்து தந்ததற்காகவும், மீன்பிடி தடைகாலங்களில் மீனவர்களுக்கு நிதியுதவி, மீன்பிடி படகுகளுக்கு வரிவிலக்களிக்கப்பட்ட டீசல் எரியெண்ணெய், பாரம்பரிய மீன்பிடி கலன்களுக்கு மானிய விலையில் மண்எண்ணெய், புதிய சூரை மீன்பிடி தூண்டில் மற்றும் செவுள் வலை விசைப்படகுகளை வாங்கிட மீனவர்களுக்கு 50 சதவீத மானியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியதற்காக தி.மு.க. அரசுக்கு நன்றி தெரிவித்து, சட்டமன்ற பொதுத்தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

