தஞ்சாவூரில் பிற்கால கல்வெட்டு கண்டெடுப்பு வரலாற்று ஆய்வாளர்கள் தகவல்

2 Min Read

தஞ்சாவூர், ஏப்.12– தஞ்சை மாநகர ராஜகோபாலசாமி தெருவில் உள்ள கிட்டப்பா வட்டாரத்தில் பிற்கால கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. கல்வெட்டை தஞ்சை சரசுவதி மகால் நூலக தமிழ்ப்பண்டிதரும், வரலாற்று ஆய்வாளருமான மணிமாறன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் தில்லை கோவிந்தராஜன், பட்டதாரி ஆசிரியர் ஜெயலட்சுமி, ஏடகம் சுவடியியல் மாணவர் சரவணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது:-

பொதுவாக தமிழ்நாட்டில் அறச்சாலைகளாக சத்திரங்களும், மடங்களும் ஊர்கள் தோறும் அமைக்கப்பட்டிருந்தன. அன்றைய நாட்களில் வழிப்போக்கர்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் வேளையில் அச்சத்திரங்களில் தங்கியிருந்து உணவருந்தி செல்வது வழக்கமாக இருந்தது.

அவ்வாறு செல்பவர்களுக்கு ஏதேனும் நோய் ஏற்பட்டால் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் வசதியும் அங்கேயே இருந்தது. இவை தருமக்கட்டளை என்ற பெயரில் பல இடங்களில் நடைபெற்று வந்தது. யாரோ ஒருவராலோ அல்லது ஒரு சிலரோ சேர்ந்து இத்தகைய தருமகாரியத்துக்கு நிலமும், பொருளும் நிரந்தரமாக கிடைக்குமாறு வழங்கியிருந்தனர்.

இந்த சத்திரங்களின் நிர்வாகம் பற்றி கி.பி.1855ஆம் ஆண்டு ஆவணம் ஒன்று சத்திரத்திற்கு வருகின்ற வருவாயில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை கண்டிப்பாக சேமித்து வைக்க வேண்டும். இது எதிர்கால நெருக்கடிகளை சமாளிக்க உதவும். வழிப்போக்கர், வயோதிகர், குழந்தைகள் முதலியவர்களுக்கே உணவு வழங்க வேண்டும். உழைக்காமல் வரக்கூடிய சோம்பேறிகளுக்கு இங்கே தங்கவும், உணவளிக்கவும் கூடாது என்றும் கூறுகிறது.

இதேபோன்று ஒரு அறக்கட்டளைதான் கிட்டப்பா வட்டாரத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுச் செய்தியாகும். சுமார் 14 அடி அகலமும், 2½ அடி உயரமும் கொண்ட இந்த கல்வெட்டில் 30 வரிகள் காணப்படுகின்றது. கி.பி.1889ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 தமிழ் சர்வதாரி ஆண்டு தை மாதம் 6 என குறிப்பிடப்பட்டுள்ள இந்த கல்வெட்டில் கி.பி. 1887ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி தஞ்சை கோட்டைக்குள் ராஜகோபாலசாமி கோயில் வீதி அண்ணு பாட்டகர் சொல்படி நாகோ பாட்டகர் செய்த தருமச்செயலை அவருடைய தமையன் வெங்கோ பாட்டகர் எழுதி வைத்த உயில் என்று குறிப்பிடுகிறது.

துவாதசி கட்டளை தருமத்திற்காக அவருடைய வீட்டின் மேல்புறமும் அதற்காக வைக்கப்பட்டுள்ள நிரந்தர வைப்பு நிதி ரூ.400இல் இருந்து கிடைக்கக்கூடிய வட்டித்தொகையை கொண்டு 10 பிராமணருக்கு அவரும், அவருடைய தமக்கை காமாட்சி அம்மாளும் அன்னம் வழங்கி தருமம் நடத்தி வருவதை குறிப்பிடுவதோடு, இவர்களுக்கு பிறகு மேற்படி தருமத்தை தமக்கை மகள் கங்காபாய் அம்மாள் நடத்தி வர வேண்டும் என்பதனையும், இதனை அனைவரும் அறியும்படியாக கல்வெட்டு வெட்டியதையும் குறிப்பிடுகின்றனர். கொடை அளித்தவர்களின் பெயர்களை காணும்போது மராட்டிய வழி வந்தவர்கள் என்பதை அறிய முடிகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *