40 வயது நெருங்கிவிட்டதா? அல்லது 40களில் இருக்கிறீர்களா? உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது…
40 வயது நெருங்கும்போது உடலில் வளர்சிதை மாற்றங்களில் ஏற்படும் மாற்றத்தால் உடலில் பிரச்சினைகளுக்கான ஆபத்தும் அதிகமாக இருக்கும். எனவே, நீண்ட ஆயுளுக்காக குறிப்பாக நோயற்ற வாழ்வுக்காக, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த இதுவே சரியான நேரம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
அவ்வாறு 40 வயதை எட்டியவர்கள் என்னென்ன செய்ய வேண்டும்? கண்டிப்பாக உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும், நடைப்பயிற்சியுடன் உடல் வலிமைக்கான லேசான பயிற்சிகளையும் செய்வது நல்ல பலன் தரும்.
பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், புரதம், நார்ச்சத்து மற்றும் இரும்புச் சத்து நிறைந்த உணவுகள் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதேநேரத்தில் கொழுப்பு அதிகமுள்ள உணவுகளைக் குறைக்க வேண்டும். காஃபின், ஆல்கஹால், புகைப்பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.
உடல் எடையை சரியாக நிர்வகிப்பது பல்வேறு பிரச்சினைகளில் இருந்து காத்துக்கொள்ள உதவும். இதற்கு உணவுப் பழக்க வழக்கமும் உடற்பயிற்சியும் அவசியம். குறைந்தது நாள் ஒன்றுக்கு 7 முதல் 9 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் அவசியம்.
மன அழுத்தத்தையும் சரியான அளவில் நிர்வகிக்க வேண்டும். இதற்கு யோகா, தியானம் போன்றவற்றைச் செய்யலாம். ரத்த அழுத்தம், சர்க்கரை அளவை அவ்வப்போது பரிசோதனை செய்துகொள்வது அவசியம். முடிந்தால் உடலில் கொழுப்பின் அளவையும் தெரிந்துகொள்ளுங்கள்.
அதேபோல உங்கள் பெற்றோருக்கு ஏதேனும் உடல் தொந்தரவுகள் இருந்தால் அது மரபுவழி உங்களுக்கு வர வாய்ப்பிருந்தால் முன்கூட்டிய பரிசோதனை செய்து விழிப்புடன் இருங்கள்.
நீங்கள் வேலை செய்பவராக இருந்தால் உங்கள் தொழில் சார்ந்த புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளுங்கள். இது உங்கள் நினைவாற்றலை மேம்படுத்தும். நிதி மேலாண்மையைக் கற்றுக்கொள்ள வேண்டும். வரவு அதிகமாக செலவு குறைவாக இருக்க வேண்டும். இதுவரை நீங்கள் சேமிப்பு எதுவும் செய்யாதபட்சத்தில் இந்த வயதிலாவது உங்கள் சேமிப்பைத் தொடங்குங்கள். உங்களுடைய ஓய்வு காலத்தில் அது மிகவும் பயன்படும்.
இன்னும் 10-15 ஆண்டுகளுக்கு நீங்கள் உழைக்க வேண்டிய சூழ்நிலை இருப்பதால் கண்டிப்பாக உடல் ஆரோக்கியத்துடன் உங்கள் வேலைவாய்ப்பையும் அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். திறன்களை வளர்த்துக் கொண்டு உயர்பதவிக்கு முயற்சி, சொந்தமாக தொழில் தொடங்குவது என முயற்சிக்கலாம். இது உங்களை கூடுதல் நம்பிக்கையுடன் வாழ வைக்கும்.
குடும்பத்தினர், நண்பர்களுடன் நேரம் செலவழியுங்கள். இது நீங்கள் தனிமையை உணர்வதைத் தவிர்க்கும்.

