நூலின் பெயர்: திருப்பரங்குன்றம் தீர்ப்புகளும், வரலாற்று உண்மைகளும்!
ஆசிரியர்: வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன்
முதற்பதிப்பு: மார்ச் 2026
பக்கம்: 372 விலை: ரூ.300/-
வெளியீடு: யாழினியன் பதிப்பகம்,
384, கிழக்கு எட்டாவது தெரு,
கே.கே.நகர், மதுரை – 625 020
அலைபேசி எண்: 98653 48163
மின் அஞ்சல்: [email protected]
இந்நூல் 1920 முதல் 2026ஆம் ஆண்டு வரை திருப்பரங்குன்றம் மலை தொடர்பான தீர்ப்புகள் – அரசியல் – மலை – கோயில் – சிக்கந்தர் தர்கா வரலாறு – தொல்லியல் துறை ஆதாரங்கள் என பல்வேறு தரவுகளைக் கொண்டதாகும். வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்கள் மிகத் தரமிக்க நூலினை யாரும் மறுக்க முடியா கருத்துச் செறிவோடு எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டில் மிக முக்கியமான காலகட்டத்தில், மதக் கலவரத்தை வெடிக்கச் செய்யத் துடிக்கும் மதவெறிச் சக்திகளின் பல்லாண்டு கனவைத் தோலுரிக்கும் வண்ணம் இந்நூல் வெளியாகி இருப்பது மிகுந்த பாராட்டுக்குரியது.
ஆன்மீகத்தின் பேரால் – இந்து தர்மம் எனும் போர்வைக்குள் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் பரிவாரங்கள், பா.ஜ.க. ஆட்சி மற்றும் அதன் அதிகார சட்ட மீறல்கள் தலைவிரித்தாடும் காலத்தில் உண்மையை விளக்குவதாக இந்நூல் வந்திருக்கிறது.
இந்நூலில், 9 நீதிமன்றத் தீர்ப்புகள்,
26 தலைப்புகளில் கருத்துகள்,
4 பல்துறை ஆளுமைமிக்க அறிஞர்களின் அணிந்துரைகள் இடம்பெற்றுள்ளமை நூலின் சிறப்பை மேலும் உயர்த்தியுள்ளது.

இந்நூலின் 26 தலைப்புகளில் முதல் தலைப்பான திருப்பரங்குன்றம் பிரச்சினையின் துவக்கம் எது? என்பதில் தொடங்கி இறுதித் (26ஆம்) தலைப்பான “என்ன செய்ய வேண்டும்?” என்பது வரை அலசப்பட்டுள்ள தீர்ப்புகள், தொல்லியல் உண்மைகள், சட்ட நுணுக்கங்கள் எனப் பல கோணத்தில் திருப்பரங்குன்றம் மலை குறித்த இந்நூல் திருப்பங்களை அரசியலில் உருவாக்கும், ஆர்.எஸ்.எஸ். சங்பரிவாரங்களின் சதிகளை அம்பலப்படுத்தும் என்பதில் அய்யமில்லை.
9 நீதிமன்றத் தீர்ப்புகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ள மறுக்க முடியாத செய்திகளுக்கும் – வாதங்களுக்கும் வலு சேர்க்கின்றன.
“திருப்பரங்குன்றம் மலையிலுள்ள சிக்கந்தர் தர்காவை அகற்றுவோம்” என்ற முழக்கம் இந்து முன்னணி அமைப்பால் 1990-லேயே தொடங்கப் பட்டது என்பதை உறுதி செய்வதோடு 7.11.1994இல் தீபமேடை கட்ட பூமி பூஜை போட முயன்றதையும், 8.3.1995 அன்று கார்த்திகை தீபப் பெயர்ப் பலகை வைக்க முயன்றதையும் இந்நூல் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.
25.8.1923இல் இராம அய்யர் தீர்ப்பில் மலையில் ஒரு சிகரத்தில் முருகன் கோயிலும், மறு சிகரத்தில் சிக்கந்தர் தர்காவும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதை எடுத்துக் காட்டுவதோடு ‘மலை முழுதும் இந்துக்களுக்கே சொந்தம்’ எனும் இந்துத்துவா சக்திகளின் பொய்களைச் சுக்கு நூறாக்குகிறது.
மேலும், இதற்குச் சான்று கூறும் நில அளவைக் குறிப்பேடுகள், கல்வெட்டுகள், குகைகளின் தோற்றம் – வகைகள் மற்றும் பல்சமய வழிபாட்டுத் தலங்கள் இடம் பெற்றுள்ளதற்குரிய ஆதாரங்கள் தரப்பட்டுள்ளன.
சங்க காலம் தொடங்கி இரண்டாயிரம் ஆண்டு வரலாற்றுச் செய்திகள், படையெடுப்புகள், மன்னர்கள் ஆட்சி, ஆங்கிலேயர்கள் ஆட்சி பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்ற மலையில் இஸ்லாமிய நினைவிடமும், இந்து மதக் கோயிலும் அருகருகே எந்தவித பதற்றமும் இல்லாமல் பன்னூறு ஆண்டுகள் இருந்து வருவதை 1868ஆம் ஆண்டு Madurai Country Manualஇல் J.H.நெல்சன் குறிப்பிடுகிறார் என்ற “கெசட்” ஆதாரம் இந்நூலில் இடம் பெற்றுள்ளது.
லாசார்டோ செனாயால் எழுதிய Madura: The Temple City, 1937 – பக்கம் 101இல் மதுரையில் நெடிய வரலாற்றில் இரு மதத்திற்கு இடையே எப்போதும் பூசல் இருந்ததில்லை என்பதற்கான ஆதாரத்தை எழுதியுள்ளார்.
சிக்கந்தர் காலம் 12-13ஆம் நூற்றாண்டு என்பதற்கான ஆதாரங்கள் இந்நூல் பக்கம் 67இல் விரிவாக ஆய்ந்து எழுதப்பட்டிருக்கிறது.
சிக்கந்தர் மலையா? ஸ்கந்தர் மலையா? என்ற கேள்விக்கு ஸ்கந்தம் என்பது சமஸ்கிருதம் என்றும், சுப்பிரமணியம் என்பதும் சமஸ்கிருதம் என்றும், முருகன் என்ற பெயர் மாற்றப்பட்டு சமஸ்கிருதப் பெயராக்கப்பட்டுவிட்டது என்றும், பார்ப்பனர்கள் யாருக்கும் முருகன் என்று பெயர் வைப்பதில்லை என்றும் தெளிவாக்கப்பட்டுள்ளது.
அமைதியான மதுரை நகரில் மதமோதலை உருவாக்க மதவெறிச் சக்திகள் முனைப்புக் காட்டுவதை இந்நூல் ஆதாரத்துடன் வெளிப்படுத்துகிறது.
உத்தரப்பிரதேசத்தில் இராமாயணத்தையும், ஒடிசாவில் பூரி ஜெகன்னாதரையும், மராட்டியத்தில் பிள்ளையாரையும் கையிலெடுத்து சிறுபான்மை மக்களுக்கு எதிராக வெறுப்பை விதைத்து, கலவர அரசியல் செய்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய கட்சியினர்தான் தமிழ்நாட்டிலும், தமிழ்க் கடவுள் என அறியப்படும் முருகனைக் கையிலெடுத்திருக்கிறார்கள் என்று இந்நூலில் பல்வேறு ஆதாரங்கள் கொண்டு குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதனைப் பதவி நீக்கம் செய்யக்கோரி சுமார் 120 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்தட்டு அதே நீதிபதிக்கு வழங்கியதை இந்நூலில் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
திருப்பரங்குன்ற மலை குறித்த பிரச்சினையில் தொகுக்கப்பட்ட வழக்குகள் – விசாரணைகள் – நீதிபதிகளின் தீர்ப்புகள் என விலாவாரியாகப் பல்வேறு கோணத்தில் இந்நூலில் ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்டுள்ளது.
இந்நூலில் அரசியல் சட்ட நிலையை மீறும் நீதிபதிகள், வரம்புகளை மீறி தீர்ப்பை நடைமுறைப்படுத்தத் துடிக்கும் நீதிபதி’ என்ற தலைப்புகளில் நீதிபதிகளின் தன்மை பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்களை இந்தியாவிற்குள் அழைத்தவர்கள் வைதீக மரபு மன்னர்கள் என்றும், மாலிக்காபூரை மதுரைக்கு அழைத்தது மன்னன் சுந்தரபாண்டியன் என்றும், சுந்தரபாண்டியன்தான் தன் தந்தையை (குலசேகரனை)க் கொன்று ஆட்சிக்கு வந்தான் என்றும், அக்கொலையை மாலிக்காபூர் செய்தான் என்பது சுத்தப் பொய், அப்படிப் பொய்யைப் பரப்பியவர்கள் சங்பரிவார் அமைப்புகள் என்றும் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு ஆதாரமாக திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே திருக்களர் என்னும் ஊரிலுள்ள பழைமையான பாரிஜாதவனேஸ்வரர் சிவன் கோயிலிலிருந்து சடையவர்மன் சிறீவல்லபனின் கல்வெட்டு ஒன்று கிடைத்துள்ளதைக் குறிப்பிட்டு, அதன்படி மாலிக்காபூரை மதுரைக்கு அழைத்தவர் சுந்தரபாண்டியன், அவன்தான் தனது தந்தையைக் (குலசேகரனைக்) கொன்றான் என்றும் திருக்களர் கல்வெட்டு உறுதி செய்வதாய் நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.
சைவர் கோயிலாக மாற்றப்பட்ட சமணக் கோயில்கள், புத்த விஹாரையை மாற்றிய பாண்டிய மன்னர்கள், இராமேஸ்வரம் கோயிலைக் கவர்ந்த இலங்கை மன்னன், புத்தர் சிலையைத் திருடிய திருமங்கை ஆழ்வார் எனும் வைணவப் பக்தரால் கட்டப்பட்ட சிறீரங்கம் கோயில் மதிற்சுவர், காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் இருந்த புத்தர் சிலைகள், வைணவக் கோயிலாக மாற்றப்பட்ட சைவக் கோயிலில் பவுத்தச் சிற்பங்கள் அழிக்கப்பட்ட வரலாறுகள் என பல வரலாற்றுச் செய்திகளை நூலாசிரியர் திறம்பட ஆய்வறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமியின் நூல்களிலிருந்து ஆதாரங்களைத் திரட்டி எழுதியுள்ளது பாராட்டுக்குரியது.
இஸ்லாமியர்கள் தமிழர்களின் தொப்புள்கொடி உறவுகள் என்றும், அனைத்துப் போர்கள் – நெருக்கடிகள் – விடுதலைப் போர் என எல்லா விதங்களிலும் தங்கள் பங்களிப்பைச் செய்தவர்கள் இஸ்லாமியர்கள் என்றும், கைபர்-போலன் கணவாய் வந்தேறிகள் செய்தது என்ன என்றும், சுருக்கென்று உரைக்கும்படி நறுக்கான கருத்துகளை உரிய தரவுகளோடு நூலாசிரியர் எழுதியுள்ளார்.
திருப்பரங்குன்றம் விவகாரத்திலும், நீதிபதிகள் நியமனத்திலும் தொடர்ந்து மதவெறிக்கு எதிராகவும், சமூகநீதிக்கு ஆதரவாகவும் களத்தில் நிற்கும் திராவிடர் கழகத்தின் போராட்டங்களும், தமிழர் தலைவர் ஆசிரியரின் கருத்துகளும் இந்நூலில் பின்னிணைப்புப் பகுதியில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
நிறைவாக 26ஆவது தலைப்பில், என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டு நிறைவு செய்யும்போது இப்படித் தொடங்குகிறார்.
“எந்த இனம், தன்னுடைய உரிமைக்காகப் போராட முன்வரவில்லையோ, அந்த இனம் உரிமைகளை அனுபவிக்கத் தகுதியற்றது.’
– தந்தை பெரியார்
நூலாசிரியர் முடிக்கும்போது இப்படி முடிக்கிறார்:
“திருப்பரங்குன்றத்தில் இஸ்லாமியர்களை வெறியேற்று” என்பார்கள். ‘திருப்பரங்குன்றம் புனிதமான நகரம். ஆடு,கோழி வெட்டக் கூடாது’ என்பார்கள். இதனூடாக ‘சிக்கந்தர் தர்காவை இடிப்போம்!’ என கரசேவைக்கும் அழைப்பார்கள்.
சங்பரிவாரின் இச் சதியை நாம் அனுமதிக்கப் போகிறோமா? அல்லது நல்லிணக்கம், அறிவின் துணைகொண்டு எதிர்த்து நின்று வீழ்த்தப் போகிறோமா?
தமிழ் மண்ணை, மக்களை, நம் வீட்டுப் பிள்ளைகளை, அடுத்த தலைமுறையைக் காக்க வேண்டும் என்றால், சங்பரிவார அமைப்புகளின் சதியை எதிர்க்க வேண்டும். இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களைப் பாதுகாத்து தமிழ் நிலத்தின் மரபை உலகிற்கு உணர்த்துவோம்.
இந்நூல் சங்பரிவாரின் சதியை முறியடிக்கும்; சமூக நீதியை முன்னெடுக்கும்; மதக் கலவரத்தைத் தடுக்கும் தமிழினப் பாதுகாப்பு நூல்.
இந்நூலை எழுதியுள்ள வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் நூலாசிரியர் மட்டுமின்றி, திருப்பரங்குன்றம் வழக்கில் வழக்கு மன்றத்தில் வாதாடும் வழக்குரைஞர் – பல திருப்பங்களை உருவாக்கும் – தீர்ப்புகளைக் கூறாக்கும் – நேராக்கும் ஆற்றலாளர் என்பது அவசியம் குறிப்பிடப்பட வேண்டியதாகும்.
இந்நூல் அனைவரும் வாங்கிப் படித்து பரப்பிட வேண்டிய அரிய நூலாகும்.
