பொருளாளர் வீ.குமரேசன்!

7 Min Read

சென்ற ஜூன் மாதம் 25 முதல் 28 வரை, குற்றாலத்தில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.‌ அங்கு வகுப்பு எடுப்பதற்காக வருகை தந்த திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் அவர்களை, விடுதலை ஞாயிறு மலருக்காகச் சந்தித்தோம்.

அய்யா வணக்கம்! உங்களைக் குறித்து அறிமுகம் செய்து கொள்ளுங்கள்?

என் பெயர் வீ.குமரேசன். பெற்றோர் கழுவாயி-வீராச்சாமி. இருவருமே ஆசிரியராகப் பணிபுரிந்தவர்கள். மதுரை, பேரையூரில் ஒரே பள்ளியில் பணி செய்த போது விரும்பித் திருமணம் செய்து கொண்டவர்கள். அந்த வகையில் இது ஒரு ஜாதி மறுப்புத் திருமணம் ஆகும். அப்பா காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். எனினும் பார்ப்பனரல்லாதார் உணர்வு கொண்டவர். திருவாரூருக்குப் பணி மாற்றம் கிடைத்தபோது, அங்கு திராவிடர் கழகத் தோழர்களின் அறிமுகம் கிடைத்துள்ளது. இயக்கத்தவர்கள் நிறைய உதவியும் செய்துள்ளனர். பிந்தைய காலங்களில் “நான் பெரியார் கட்சி” என அப்பா கூறுவார். அதற்கேற்ப தீபாவளி போன்றவற்றைக் கொண்டாட மாட்டார். ஆனால் எங்களுக்குப் புது உடை எடுத்துக் கொடுப்பார்.

உங்களின் கல்வித் தகுதி, பணி குறித்துக் கூறுங்கள்?

மதுரை, உத்தங்குடியில் உள்ள வேளாண் கல்லூரியில் இளங்கலை வேளாண்மைப் படித்தேன். துறை சார்ந்த வேலை, கேரளாவில் கிடைத்தது. அங்கு ஆறு மாதங்கள் பணி செய்தேன். மறைந்த நாஞ்சில் கி.மனோகரன் அவர்களின் மாமா தான் எனக்கு உயர் அதிகாரியாக இருந்தார். பின்னர் தமிழ்நாட்டில் வேலை கிடைத்து, இங்கு வந்துவிட்டேன். வேளாண்மைக் கல்வியைத் தொழிற்கல்வி என்றே சொல்வார்கள்.

மாணவர்கள் அனைவரும் கண்டிப்பாக விடுதியில் தங்கிப் படிக்க வேண்டும். விவசாய நிலத்திற்கு அழைத்துச் சென்று பயிரிடுதல், உரம் தெளித்தல், அறுவடை செய்தல் என அனைத்தையுமே செய்ய வேண்டும். புது ரக விதைகளைப் பரிசோதனை செய்வது, நிலத்தை ஆய்வு செய்வது உள்ளிட்ட பல பணிகள் இருக்கும். நான் ஆர்வமுடன் அவற்றைச் செய்வேன். வேளாண் துறைப் படிப்பு முடித்து, எம்.பி.ஏ., மற்றும் இளங்கலை சட்டமும் (B.L.,) பயின்றேன். தவிர பெரியாரியல் பட்டயப் படிப்பைப் (Diploma in Periyar Thoughts) புலவர் இராமநாதன் மூலம் கற்றேன்.

பெரியாரியக் கருத்துகள் எப்போது உங்களுக்குள் உருவானது?

எனது தந்தையார் காலத்தில் சிறிது அறிமுகம் இருந்தாலும், கல்லூரி நாள்களில் தான் அதை உள்வாங்கத் தொடங்கினேன். கல்லூரி விடுதியில் பெரியார் சிந்தனையுடன் ஒரு மாணவர் இருந்தார். அவர் எஸ்.டி.விவேகி அவர்களை அழைத்து வந்து, கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். “மனிதனா? விலங்கா? இதில் எது சிறந்தது?” எனும் தலைப்பில் அவர் பேசினார். பின்னர் அதுவே உரையாடலாக மாறியது. அந்த நிகழ்வே என்னுள் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தது.

பின்னாளில் எங்கள் கல்லூரியில் பெரியாரியக்கத் தோழர்கள் அறிமுக மாகினர். அதில் சிலர் “மாடர்ன் ரேஷனலிஸ்ட்” வைத்திருந்தார்கள். நானும் படிக்கும் வாய்ப்பைப் பெற்றேன். அப்போது அதன் விலை 50 காசுகள். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும்போதுதான் தந்தை பெரியார் மறைந்தார்கள்.

பின்னர் 1987இல் ‘Uniting Force is Periyar’ என்கிற தலைப்பில் எனது முதல் கட்டுரை அந்த இதழில் வெளியானது. உத்தரப்பிரதேசத்தைச் சார்ந்த எச்.என்.பகுகுணா என்பவரைப் பிரதமர் ஆக்க வேண்டும் என ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் முயற்சி செய்தார்கள். இந்தச் செய்தியை மய்யமாக வைத்தும் அந்தக் கட்டுரையில் நான் எழுதியிருந்தேன். அப்போது ‘தி மாடர்ன் ரேஷனலிஸ்ட்’ பொறுப்பாசிரியராக கு.வெ.கி.ஆசான் இருந்தார்கள்.

நீங்கள் வங்கியில் தானே பணி செய்தீர்கள், வேளாண்துறை எனக் குறிப்பிடுகிறீர்கள்?

1977இல் தொடங்கி 1983 வரை ஆலங்காயம், வாணியம் பாடி, காட்பாடி, வேலூர், மதுரை என ஏழு ஆண்டுகள் வேளாண்மைத் துறையில் வேலை செய்தேன். பிறகு தேர்வு எழுதி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மதுரைக் கிளையில் பணிக்குச் சேர்ந்தேன். வங்கியிலும் வேளாண் பிரிவில் தான் பணி கிடைத்தது. வங்கியில் பல நிலைகளில் பணியாற்றியதோடு, அகில இந்திய அதிகாரிகள் சங்கத் துணைத் தலைவராகவும் செயல்பட்டேன்.

எனக்கு ஓர் அக்கா இருக்கிறார். அவர் யாதவா மகளிர் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தங்கை ஒருவரும் இருக்கிறார். அவர் பதிவுத்துறை ஆணையராக இருந்து ஓய்வு பெற்றவர். நான் வங்கி ஊழியர். எங்கள் பெற்றோர் இருவரும் ஆசிரியர்கள். ஆக அந்தக் காலத்திலே கல்விக் குடும்பமாக இருந்து வந்துள்ளோம்.

திராவிடர் கழக அறிமுகம் எப்போது ஏற்பட்டது?

என்னளவில் நான் பகுத்தறிவாளராக இருந்த நேரம் அது. மதுரையில் 1983 ஆம் ஆண்டு, திராவிடர் கழகம் சார்பில் ஈழ விடுதலை மாநாடு நடைபெற்றது. அதில் நான் கலந்து கொண்டேன். ஆனால் இயக்கத்தில் யாரும் அறிமுகம் இல்லை. அதன் பிறகு நம் இயக்கத்தின் சார்பில் சோழவந்தான் பகுதியில், பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. அதுசமயம் நான் பேருந்தில் சென்றபோது, மதுரையைச் சார்ந்த இயக்கத் தொண்டர் மீ.அழகிரிசாமி அவர்களின் தொடர்பு கிடைத்தது.

அதன் பிறகே இயக்க அறிமுகம் ஏற்பட்டது. கழகக் கூட்டங்களுக்குச் செல்ல தொடங்கினேன். அப்போது மாவட்டத் தலைவராக தேவசகாயமும், செயலாளராக தமிழரசனும் (எழுத்தாளர் ஓவியாவின் தந்தை) இருந்தார்கள். மதுரை, செனாய் நகரில் அமைந்திருந்த மணியம்மையார் அரங்கத்திற்கு ஆசிரியர் வந்திருந்தார்கள். இட ஒதுக்கீட்டின் அளவை எம்ஜிஆர் அவர்கள் 31 இல் இருந்து 50 விழுக்காடாக உயர்த்தியதை எதிர்த்துப் பார்ப்பனர்கள் சென்னை அண்ணா சாலையில் ‘உண்ணாவிரதம்’ இருந்தார்கள்.

அதுதொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஒருங்கிணைத்து, ஆலோசனை நடத்தினார்கள். “எங்கள் உரிமையை எதிர்க்காதே” என அறிக்கை வெளியிட்டதோடு, இட ஒதுக்கீட்டை ஆதரித்து ‘உண்ணும் விரத’த்தையும் அறிவித்தார். அதுதொடர்பான துண்டறிக்கைகளை நானும் விநியோகித்தேன். ஆசிரியரை அன்றைய தினம் தான் முதன்முதலில் நேரில் சந்தித்தேன். எனினும் ஆசிரியரின் பேச்சு மற்றும் எழுத்துகள் அதற்கு முன்பே எனக்கு அறிமுகமாகி இருந்தன.

ஆசிரியர் அறிமுகத்திற்குப் பிறகு இயக்கத் தொடர்புகள் எவ்வாறு இருந்தன?

1983இல் நான் வங்கிப் பணியில் சேர்வதற்கு முன்பு, சென்னை எழும்பூரில் எனக்குப் பயிற்சி அளித்தார்கள். அப்போது மாலை நேரத்தில் பெரியார் திடல் பக்கம் வருவேன். அந்தக் காலக் கட்டத்தில் தான், “சங்கராச்சாரி யார்?” என்கிற தலைப்பில் தொடர் சொற்பொழிவு நடைபெற்றது. மூன்றாவது பேச்சு முதல் நான் நேரடியாகக் கேட்கத் தொடங்கினேன். முதல் இரண்டு சொற்பொழிவைக் “கேசட்” மூலம் கேட்டேன். இதைக் கேட்பதற்காகவே “டேப் ரிக்காடர்” வாங்கினேன்.

இப்படியான சூழலில் மதுரை மீ.அழகிரிசாமி ஏற்பாட்டில் மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத் தலைவராக நியமக்கப்பட்டேன். அந்தப் பணியை 10 ஆண்டுகள் செய்தேன். எனது திருமணம் 1980 ஆம் ஆண்டு வத்தலக்குண்டில் நடைபெற்றது. இணையர் பெயர் உஷாதேவி. ஆசிரியராகப் பணியைத் தொடங்கி, மன்னர் திருமலை (நாயக்கர்)  கல்லூரியில் பேராசிரியராக  உயர்ந்தவர்.‌ 2004 ஆம் ஆண்டு மறைந்தார். ஆசிரியர் அவர்கள் கோவில்பட்டியில் நடைபெற்ற மாநாட்டை முடித்துத் திரும்பும் போது, எங்கள் இல்லம் வந்து ஆறுதல் கூறினார்கள்.

இணையர் மறைவிற்குப் பிறகு உங்கள் வாழ்க்கைச் சூழல் எப்படி இருந்தது?

சிறிய வயதிலேயே இணையர் மறைந்துவிட்டார். அது எனக்குள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. மறுமணம் செய்து கொள்ளுங்கள் என நண்பர்கள், உறவினர்கள் கூறினார்கள். அதை நான் ஏற்கவில்லை. பணி மாறுதல் பெற்று, எனது இரண்டு மகன்களையும் அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்துவிட்டேன். இங்கு வந்ததும் தினமும் பெரியார் திடல் செல்லத் தொடங்கினேன். ஒரு கட்டத்தில் தன்விருப்ப ஓய்வு பெற்று, இயக்கத்திற்கே வந்துவிடலாம் என எண்ணினேன். ஆசிரியர் அதை ஏற்கவில்லை.

பின்னர் 2015 இல் பணி ஓய்வு பெற்றதும், வெளியுறவுத்துறை செயலாளர் என்கிற பொறுப்பை ஆசிரியர் வழங்கினார். அதற்கு முன்பாகப் பகுத்தறிவாளர் கழக மாநிலப் பொதுச் செயலாளர் என்கிற பொறுப்பிலிருந்து பணியாற்றினேன். பொறுப்புகள் ஒருபுறம் இருந்தாலும், பிள்ளைகளுக்குத் தேவையானதை செய்து கொடுத்துவிட்டு, நேராகப் பெரியார் திடல் வந்துவிடுவேன். மதிய உணவையும் எடுத்து வருவேன். அந்தச் சமயத்தில் “தி மாடர்ன் ரேஷனலிஸ்ட்” பொறுப்பாசிரியராக இருந்த கு.வெ.கி.ஆசான் மறைந்த விட, அந்தப் பொறுப்பையும் ஆசிரியர் எனக்கு வழங்கினார்கள்.

‘விடுதலை’ நாளிதழில், தந்தை பெரியார் பிறந்த நாளை ஒட்டி பிறந்தநாள் மலர் வருவதைப் போல, ‘தி மாடர்ன் ரேஷனலிஸ்ட்’ இதழில் ஆசிரியர் பிறந்தநாளை ஒட்டி, (டிசம்பர்-2) பிறந்தநாள் மலர் வெளியிட வேண்டும் என்பது எனது விருப்பம். ஆனால் ஆசிரியர் இதை ஏற்கவில்லை. எனினும் ஒவ்வோர் ஆண்டும் ஒரு தலைப்பிட்டு அதுதொடர்பான செய்திகளை மலராக (Annual Number) வெளியிட்டு வருகிறோம். இது 2011 இல் தொடங்கி இப்போது வரை நீடித்து வருகிறது.

இணையரின் இழப்பு, பணி ஓய்வு ஆகியவற்றைச் சமூகப் பணிகளின் மூலம் நிவர்த்தி செய்து வருகிறீர்களா?

ஆமாம்! நாம் முடங்கிவிடாமல் இருக்க, தொடர்ந்து செயல்படுவது அவசியம். எங்கள் முதல் மகன் கார்க்கி திருமணம் மதுரையிலும், இரண்டாவது மகன் திலீபன் திருமணம் பெரியார் திடலிலும், ஆசிரியர் தலைமையில் நடைபெற்றன. இருவரும் சிறப்பாக இருக்கிறார்கள்.

ஆசிரியருடன் வெளி மாநில நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் வாய்ப்பை அதிகம் பெற்றுள்ளேன். வெளியுறவுத்துறைச் செயலாளராக இருந்தபோது, பகுத்தறிவாளர் கழகம் சார்பில் உலக நாத்திகர் மாநாடு  2011ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்றது. 2017ஆம் ஆண்டு பன்னாட்டு மாநாடு ஜெர்மனியில் நடைபெற்றது. பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளராகப் 10 ஆண்டுகளும், திராவிடர் கழக வெளியுறவுத்துறைச் செயலாளராக 2 ஆண்டுகளும் பணியாற்றிய நிலையில், 2017ஆம் ஆண்டு திராவிடர் கழகப் பொருளாளராக ஆசிரியர் நியமித்தார்கள்.

2019இல் திருச்சியில் நடந்த உலக நாத்திகர் மாநாடு, 2019இல் அமெரிக்கா, 2022இல் கனடா, 2025இல் ஆஸ்திரேலியாவில் நடந்த பன்னாட்டு மாநாடுகளில் ஒருங்கிணைப்புப் பணிகளை ஆற்றியுள்ளேன். இந்த ஆண்டு 2026 அக்டோபர் மாதம் ஜப்பானிலும் நடைபெற இருக்கிறது. ஒன்றிய அளவில் “இந்தியப் பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு” (FIRA) தோழர்களுடனும் நல்ல நட்பில் இருந்து வருகிறோம்.

ஆசிரியரின் வழிகாட்டுதல்கள், ஆலோசனைகளின் அடிப்படையில் அனைத்தும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. பெரியாரியச் சிந்தனைகளை வாழ்வியல் நெறியாக ஏற்றதால், நானும் மனநிறைவோடு இருக்கிறேன்”, எனத் திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *