‘‘தளபதி அழகிரி” என்ற சுயமரியாதை – தொண்டறக் கடல் (5)

5 Min Read

‘நகர தூதன்’ வார இதழில் வெளியிடப்பட்ட தமிழர் பெரும் படையின் பயணப் பாதை

ந்தி எதிர்ப்புப் படையின் தளபதி அஞ்சா நெஞ்சன் பட்டுக் கோட்டை அழகிரிசாமி.

1938இல் இந்தித்திணிப்பை எதிர்த்து தந்தை பெரியார் போர் முரசு கொட்டினார். இந்தி எதிர்ப்புப் போரின் வீர வரலாறு மிக விரிவானது ஆகும். அறிஞர் அண்ணாவின் முதல் சிறைவாசம், 29.09.1938-இல்; 4 மாத சிறைத் தண்டனை பெற்றது இந்தி எதிர்ப்புப் போரில்தான். தமிழ் வீரன் தாளமுத்து மாண்டது. 14.01.1939; தமிழ் வீரன் நடராசன் மாண்டது 12.3.1939. அந்த அறப்போரில் அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமியின் அரிய பங்கு என்ன? இதோ அதன் விவரங்கள் …

திருச்சியிலிருந்து சென்னைக்குத்
தமிழர் பெரும் படையின் பயணம்

இந்தி எதிர்ப்பு உணர்ச்சியை ஊட்டி, இந்தி எதிர்ப்பு இயக்கத்தை மக்களிடையே பரப்பும் நோக்கத்துடன் 1938-ஆம் ஆண்டில், தமிழர் பெரும்படை ஒன்று, திருச்சி உறையூரிலிருந்து புறப்பட்டுச் சென்னைக் கடற்கரையை அடைய ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்தி எதிர்ப்புப் போர் குறித்து தமிழில் முதன் முதலில் அப்போது வெளிவந்த நூல் ‘தமிழன் தொடுத்த போர்’.

சென்னை 1, பவழக்காரத் தெரு பகுத்தறிவுப் பாசறையிலிருந்து பாசறை வெளியீடு 3 ஆக ஒரு ரூபாய் 12 அணா விலையில், சென்னை பிரீபிரிண்டர் ஸில் அச்சிடப்பட்டு, 224 பக்கங்களில் வெளிவந்த நூல் ‘தமிழன் தொடுத்த போர்’; அதனை எழுதி வெளியிட்டவர் மா. இளஞ்செழியன் B.A. (Hons) இந்தப் போரில் திருச்சியிலிருந்து அஞ்சா நெஞ்சன் அழகிரி சாமி தலைமையில் புறப்பட்ட படையைப் பற்றி  அவரது வரிகள் (பக்கம் 116 முதல் 124) அப்படியே இதோ…

தமிழர் நெஞ்சம் களிப்புக் கடலாயிற்று அப்படை கண்டு. ஆரியர் உள்ளம் வெதும்பினர், இப்படியும் உண்டா என்று.

மணவை ரெ. திருமலைச்சாமி

படையின் நோக்கத்தையும் திட்டத்தையும் தெளிவாக விளக்கி, செந்தமிழைக் காப்பதற்கு இத்தகைய சேனையொன்று தேவை என்று படை அமைச்சர் மணவை ரெ. திருமலைசாமி 1938 ஜுன் இறுதியில் ‘விடுதலை’ இதழில் அறிக்கை ஒன்று விடுத்தார். கிட்டத்தட்ட 500 வீரர்கள் படைக்கு மனுச் செய்தனர். நல்ல உடல் கட்டும் கட்டுப்பாட்டிற்கு அடங்கி நடக்கும் பண்புமுடைய நூறு இளம் காளைகள் மட்டுமே பொறுக்கி எடுக்கப்பட்டனர்.

ஒவ்வொரு நிமிஷமும் உத்தரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்த இளங்காளைகள் ‘புறப்படு’ என்ற ஆணை வந்ததும் ஓடோடி வந்து படையில் கலந்து கொண்டனர்.

படைச் சேனாதிபதி அழகிரிசாமி

நெருப்புப் பொறி பறக்கப் பேசி, கேட்போர் அத்தனை பேர் நெஞ்சையும் துடிதுடிக்கச் செய்து சுயமரியாதை சண்டமாருதத்தை நாட்டில் எழுப்பி வந்த தோழர் கே.வி. அழகிரிசாமிதான் படைச் சேனாதிபதி. படைத்தளபதி என்றால் படைத் தளபதியேதான் அவர். அந்த நெட்டையான உருவம் போர்க் கோலம் பூண்டு படையை இராணுவ முறையில் அணிவகுத்துச் செலுத்திய காட்சி, அடே அப்பா, எதிரிகளை எல்லாம் திக்குமுக்காடச் செய்துவிட்டது.

படைத்தலைவர் தோழர்
அய். குமாரசாமிப்பிள்ளை

படைத்தலைவர் தோழர் அய். குமாரசாமிப்பிள்ளை பெருஞ் சோற்றுத் தலைவி, மூவலூர் மூதாட்டி இராமிமிர்தத்தம்மையார் ஆகியோர் படையில் அணிவகுத்தனர்.

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்

[இந்த இந்தி எதிர்ப்புப் பேரணியில் நடந்து சென்ற ஒரே பெண் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் என்பது குறிப்பிடத்தக்கது. “நரைத்த முடியும், தளர்ந்த நடையும் கொண்ட அவர்கள் – அறுபதை எட்டிப் பார்க்கும் வயதினைப் பெற்றிருந்த அம் மூதாட்டியார் – தமிழார்வம் கொண்டு ஆறு வாரங்களுக்கு மேலாக நடந்து வந்தார்” (தையற்கலை, 1959)]

தமிழர் பெரும்படை போகுது பார்

1938 ஆகஸ்டு 1-இல் தமிழர் பெரும்படை முரசு கொட்டிய வண்ணம் உறையூர் என்னும் படை வீட்டிலிருந்து புறப்பட்டு முக்கியமான திருச்சி வீதிகளின் வழியாக ‘டவுன் ஹால்” மைதானம் வந்தது. திருச்சித் தமிழர் அங்கு வழியனுப்பும் பெருங்கூட்டம் கூட்டியிருந்தனர். பெரியார் அதன் தலைவர். கான் பகதூர் கலிபுல்லா, திருச்சித் தளபதி வேதாசலம் இருவரும் படையை வாழ்த்திப் பேசினர். படைச் சேனாதிபதி அழகிரிசாமி நன்றி கூறினார். படை புறப்பட்டது.

படை இன்னின்ன ஊரில் இன்னின்ன தேதியில் இன்ன இன்ன நேரத்தில் இத்தனை மணி நேரம் தங்கும் என்ற நிகழ்ச்சி நிரலும் படை செல்லும் பாதையும் படை அமைச்சரால் முன்னமே ‘விடுதலை’யில் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தப்படியே படை சென்றது; வழிநெடுகத் தமிழர் வரவேற்புத் தந்தனர். ஊர்தோறும் பொதுக் கூட்டங்கள் கூட்டப்பட்டன. எல்லா இடங்களிலும் தமிழர் படையினர் இந்தித் திட்டம் கெட்டொழியத் தக்கதே என்பதை விளக்கிப் பேசினர். ஆகஸ்டு 1-இல் உறையூரினின்றும் புறப்பட்ட படை திருச்சி மாவட்டத்தைக் கடந்து, தென்னார்க்காடு மாவட்டத்திற் புகுந்து, செங்கற்பட்டு மாவட்டத்தைத் தாண்டி, செப்டம்பர் 11-இல் சென்னை மாவட்டத்திற்கு வந்து சேர்ந்தது.

சென்னை வரவேற்கிறது

அன்று மாலை சென்னை திருவல்லிக்கேணி கடற்கரையில் தமிழ்நாடு அதுவரையில் கண்டிராத அத்தனை பெரிய கூட்டம்! 1,50,000 தமிழர் திரண்டு குழுமி இருந்தனர். எத்தனையோ ஊர்வலங்கள் புற்றிலிருந்து ஈசல் புறப்படுவது போல எங்கெங்கிருந்தோ புறப்பட்டு கடற்கரைக்கு வந்தபடி இருந்தன. சென்னை மாகாணத்தின் பல பகுதிகளிலிருந்தும் ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். ஆயிரக்கணக்கான பெண்கள் ஒருபால் அமர்ந்திருந்தனர். சதிகார நெஞ்சங்கள் துடிதுடிக்கச் சடசடவென தமிழ்க் கொடிகள் விண்ணில் அசைந்தசைந்து ஆடின, ‘தமிழ் வாழ்க! தமிழ் வாழ்க! என்று மக்கள் ஒலித்தபடி இருந்தனர். மாலை 5 மணிக்குக் கூடிய கூட்டம் இரவு 1 மணிக்கும் கலைய மனமின்றிக் கலைந்தது. திருச்சிப் படைக்குச் சென்னைத் தமிழர் தந்த வரவேற்பு உள்ளபடி கண்கொள்ளாக் காட்சி.

மறைமலையடிகளார் கூட்டத் தலைவர் – சொல்லவா வேண்டும் அவர் பேச்சை!

பெரியார் அன்று ஆற்றிய உரைதான் நாளை ஏற்படப் போகும் தமிழ்நாட்டுக் (திராவிட நாட்டுக்) குடியரசின் தோற்றுவாய். அன்றுதான் தமிழ்நாடு (திராவிட நாடு) தனிநாடு என்பதைப் பெரியார் முதன் முறையாக எடுத்துக் காட்டினார். அன்றுதான் அடைந்தே தீருவோம் தமிழ்நாட்டை (திராவிட நாட்டை) என்று திராவிடர் தலைவர் ஈ.வெ.ரா. உறுதி கூறினார். அன்றுதான் பாகிஸ்தான் பிரச்சினை எழுவதற்கு முன் எழுந்த திராவிட நாட்டுப் பிரிவினை முரசை முழக்கினார் பெரியார். அந்த 11.09.1938-அய் மறந்து இனி ஒரு நாளும் தமிழன் வாழ முடியாது. உண்மையில் ஜஸ்டிஸ் கட்சி திராவிடர் கழகமானது அந்த 11.09.1938-இல்தான்; சேலத்துப் பாசறையில் 1944-இல் அல்ல. தமிழர் நெஞ்சத்தில் ஜஸ்டிஸ்கட்சி திராவிடர் கழகமாக மாறிவிட்டது. 11.09.1938-இல். 1944-இல் சேலம் அந்த மாற்றத்தைச் சட்டப்படி செல்லுபடியானதாக்கிற்று. அவ்வளவுதான்.

பெரியார் பேசியானதும், படைச் சேனாதிபதி அழகிரிசாமி, பேராசிரியர் பாரதியார், ரெவரண்ட் அருள் தங்கையா, மூவலூர் இராமாமிர்தத்தம்மையார், பண்டிதை நாராயணியம்மையார், வ.பா. தாமரைக்கண்ணியம்மையார், முந்நகர் அழகியார், வேலூர் ஷர்புதீன், திருப்பூர் மொய்தீன், காஞ்சி கலியாண சுந்தரன் இத்தனை பேரும் பேசினர்.

படை அமைச்சர் தன் அறிக்கையைச் சமர்ப்பித்தார். அது இது:

கடல் போலத் திரண்டோடி வந்திருக்கும் அன்பர்களே. தமிழர் படையின் சார்பாக இராணுவ மந்திரி என்கின்ற தோரணையில் உங்களுக்கு எமது வணக்கம் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

படையெடுப்பின் நோக்கம்

தமிழர் பெரும் படையின் வரலாற்றை நீங்கள் தெரிந்திருப்பீர்கள். காங்கிரஸ் கட்சித் திரையில் நின்று இந்தியப் பொதுமொழி தேவை என்கின்ற சொல்லால், நம் தமிழ் மீது வடமொழியொன்று படை எடுத்து வருவதைத் தடுப்பான் வேண்டியும், தாய்மொழிக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களைக் களைவான் கருதியுமே இப்படை திரட்டப்பட்டது என்பதை முன்னரே தெரிவித்திருக்கிறேன்.

(தொடரும்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *