இதோ ஓர் இலக்கியப் புதுமைத் தென்றல் (2)

4 Min Read

வாழ்வியல் சிந்தனைகள்

‘‘இராமாயணத்தில் பெண்களுக்குப் பெரும்பாலும் கணவன் எண்ணங்களை நிறைவு ‘செய்வதே தலையாயக் கடமையாக இருந்தது. எவ்விதச் சூழ்நிலையிலும் ஆண் சமூக விதிமுறைக்குள் அடங்கிப் போகின்ற கதை மாந்தர்களாகப் பெண்களின் கதை சொல்லப்பட்டிருக்கிறது. செல்வங்களின் செல்வமாக வளர்ந்து, வாழ்ந்து கொண்டிருந்தவள் சீதை. இராமனைத் திருமணம் செய்த பின்னர் அவனுக்கு நடந்த அரசாட்சி மாற்றங்களின் சூழ்ச்சிக்குள் சிக்கிக் கொண்டவள் சீதை.

வளமான அரண்மனை வாழ்க்கையை விட்டுக் காட்டிற்குத் தன் கணவன் இராமனுடன் சென்றாள். அங்குப் பல துன்பங்களை அனுபவித்தாள். இராவணன் சிறை பிடித்துச் சென்றான். மீட்டு வந்த இராமன் அவள் மீது சந்தேகப்பட்டான். தன் a தன்மையை உறுதிப்படுத்தும் சோதனைக்குத் தள்ளப்பட்டாள். இந்த நிலைக்கு முழுமையாகப் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டியது இராமனே. அதை விட்டு மணம் செய்ததைத் தவிர வேறெந்தக் காரணமும் இல்லாமல் வாழ்க்கை மொத்தம் துன்பத்தை மட்டுமே பெற்றவள் சீதை.

அவளைப் போலவே, தனக்கென எந்தவொரு விருப்பு வெறுப்புகளும் இல்லாமல், அதைப் பற்றிய மதிப்பீடற்ற மண வாழ்க்கையைப் பெற்றவள் உருத்திரை. அண்ணனோடு காட்டிற்குச் சென்றவன் தன்னுடைய மனைவியை அழைத்துச் செல்ல நினைக்கவில்லை. சீதையை அழைத்துச் சென்றதே பாவம். இவளை அழைத்துச் செல்லாததோ அதைவிடப் பாவம். 14 வருடங்கள் கணவனைப் பிரிந்து தனியாக வாழும் கொடுமையை அனுபவித்தாள் இலக்குவன் மனைவி. காட்டில் துன்பக்கடலில் தவித்தாள் சீதை. இருவருமே கணவன்களின் முடிவுகளுக்கும், அவர்களுக்கு நடக்கும் எதற்கும் பங்கேற்கக் கடமைப்பட்டவர்களாகிப் போயினர்.

இரண்டு பெண்களின் தனிப்பட்ட விருப்பங்களைக் கேட்டறியக் கூட யாரும் நினைக்கவில்லை. ஒருத்தி கணவனோடு சென்றாலும் காட்டின்கடுமையான வாழ்க்கையை அனுபவித்தாள். கணவனின் முடிவுக்கு 14 வருடங்கள் நாட்டிலிருந்தாலும் காடு தரும் துன்பத்தைத் தனிமையில் அனுபவித்தாள். எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத துன்பங்களை அனுபவிக்கும் கதைமாந்தர்களாகப் பெண்களைக் காணமுடிகின்றது. சமூகமும், குடும்பமும் நடத்தும் வழிகளில் சிக்கித் தவிக்கும் பெண்களின் உளவியல் துன்பங்களின் மீது அக்கறையற்றுப் போனது சமூகம். ஆனால் அவர்களுடைய ஆண்களின் பெருமைகளைப் பேசும் சமூகத்தில் இதுபோன்ற பெண்களின் வாழ்க்கை திக்கற்று திசையிழந்தது போலாகிறது.

இராமாயணத்தைப் போலவே, மகாபாரதத்தில் நடந்த அநீதியும் பேசப்படுதல் அவசியம். அக்கதையில், காசி மன்னனின் மகள்கள் அம்பா, அம்பிகை, அம்பாலிகை. மூவரின் சுயம்வரத்திற்காக அஸ்தினாபுரத்தைத் தவிர அனைத்து நாட்டுக்கும் அழைப்புப் போகிறது. இதைத் தாங்கிக் கொள்ள முடியாது பீஷ்மர் வந்து மூவரையும் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்கிறார். இதில் அம்பாவும் சால்வ மன்னனும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்தனர். எதுவுமே அறியாது, கேட்காது பீஷ்மர் மூவரையும் அழைத்துச் சென்றதிலேயே சுயம்வரம் என்னும் அவர்களின் மணவாழ்க்கையைத் தேர்வு செய்யும் பெண்ணின் உரிமையைப் பறித்த அநீதி அரங்கேறியது. ஒரு பெண் இயல்பாக அமைத்துக் கொள்ளக் கூடிய மணவாழ்க்கைகூட அரசியல் காரணத்திற்காக அழிக்கப்படுவது அம்பாவிற்கும் அவள் சகோதரிகளுக்கும் நடந்தது. அதிலும் தன் வாழ்வு இவனோடுதான் என்று முன்னரே முடிவு செய்த அம்பாவிற்கு நடந்தது பெரும் அநீதி

பீஷ்மரிடம் உண்மைச் சொல்லிப் புரியவைத்த பின்னர், சால்வ மன்னனிடம் செல்கிறாள் அம்பா. அவனோ பீஷ்மர் தூக்கிச் சென்றதைச் சொல்லி அவளை ஏற்றுக் கொள்ள மறுக்கிறான். மீண்டும் பீஷ்மரிடம் வந்தாள். அவர் தன் பிரம்மச்சார்ய விரதத்தைச் சொல்லி ஏற்றுக் கொள்ள மறுத்தான். இரண்டு ஆண்களும் நிராகரிக்க அவள் செய்த தவறு என்ன? ஒரு பொருளைப்போல எடுத்துப்போவதும், ஒருவன் அவளை வென்றான் என்பதும், இதுவரை யாரிடம் இருந்தாய் என்ற கேள்வியும் எனத் தரம் தாழ்த்தி மதிக்கப்படுவது எந்த வகையில் அறச்செயல்? மொத்த வாழ்க்கையையும் புரட்டிப்போட்ட பீஷ்மர், நியாயம் கேட்டுத் தன்னிடம் திரும்பி வந்தவளிடம் தனக்கு இதில் எந்தப் பொறுப்பும் இல்லை என்று சொல்லும் நியாயமற்ற ஆண் மனஅலட்சியப் போக்கு. முன்பின் சிந்திக்காது தான் என்னும் ஆண் திமிரால் அழிந்தது அவள் வாழ்வு என்பதைக்கூட ஏற்றுக் கொள்ளாத ஆண் உலகத்தை என்ன சொல்ல. காலம்காலமாக ஆண்களால் சூழப்பட்ட அரசியல் அமைப்பு பெண்களின் வாழ்க்கை மீது வைத்திருக்கும் அதிகாரத்தினால் பலியானவள் அம்பா. கேள்விக்குறியானது அவளின் வாழ்க்கை.

மகாபாரதத்தில் நடந்த இன்னொரு கொடுமை பாஞ்சாலியின் வாழ்க்கை. அர்ஜுனனை விரும்பினாள். தவறிப்போன சிறு சொல் மாற்றத்தினால், அய்ந்து சகோதரர்களால் பகிர்ந்து வாழ்க்கை நடத்தக் கூடிய பொருளாக மகாபாரதக் கதையில் எழுதப்பட்டாள் பாஞ்சாலி. இங்கும் அவளின் விருப்பம் கேட்கப்படவில்லை. அந்த வாழ்க்கை கிட்டத்தட்ட திணிக்கப்பட்ட ஒன்று. இது முதல் அநீதி. பின்னர் சூதாட்டத்தில் தன் சொத்துக்களோடு சேர்த்து பாஞ்சாலியையும் தோற்றான். தன்னைப் பொருளாக்கிச் சூதாடியதை எதிர்த்து நீதிக்காகப் போராடினாள் பாஞ்சாலி. அரசியல் வெறுப்புணர்ச்சியின் காரணத்தினால் அவளின் ஆடையை இழுத்து அவமானப்படுத்தினர். அரசியலில் எதிரிகளை அசிங்கப்படுத்தவும் பெண் ஒரு உத்தியாகிப் போனாள். இதை வேடிக்கை பார்த்ததைத் தவிர உடனடியாக யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை. யாரும் அவளுக்கு நடந்த கொடுமையை நிறுத்தவில்லை.

ஒரு தோல்வியடைந்த சமூகத்தின் அடையாளமாகிப் போய் நின்றனர் அத்தனை பேர்களும். அதன் பிறகு நடந்த எல்லாவற்றிற்கும் காரணம் பாஞ்சாலியே என்னும் குற்றத்தையும் பெற்றாள். சூர்ப்பணகை போன்றே தனக்கு அநீதி நடக்கின்ற அந்த இடத்திலேயே எதிர்ப்புக் குரல் எழுப்பியவள் பாஞ்சாலி. இங்கும் பாண்டவர்கள், துரியோதனன், கர்ணன் என்று பேசப்பட்டவர்கள் நிறைய. இவர்களோடு இணையாகவும், துணையாகவும் செயல்பட்ட பெண்களின் வாழ்வின் உண்மைகள், உரிமைகள், பெருமைகள் வெளியில் தெரியாமல் ஒளியற்றுப் போயின என்பதன் அன்றைய பெண் சமூகத்தின் அடையாளம் பாஞ்சாலி.

(‘தமிழ்க்காரி’யின் ‘சூர்ப்பணகை: பெண் – உடல் – அரசியல்’  நூலில் பக்கம் 44 – 50)

(வளரும்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *