சென்னை, மார்ச் 17 தமிழ்நாட்டில் 22,000 தெருமுனை பிரச்சார கூட்டங்கள் நடத்த கொடுக்கப்பட்ட 11 கோடி ரூபாயை, தமிழ்நாடு பா.ஜ.,வினர் முழுமையாக பயன்படுத்த வில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வரும் ஏப்ரல் 23இல் நடக்கவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற, பா.ஜ., பல்வேறு வியூகங்களை வகுத் துள்ளது.
சக்தி கேந்திரம்
கடந்த 12 ஆண்டு கால மோடி ஆட்சியின் சாதனைகள், குறிப்பாக தமிழ்நாட்டில் செயல் படுத்தப்பட்ட மோடி அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க பா.ஜ., முடிவு செய்தது.
மூன்று அல்லது நான்கு ஓட்டுச்சாவடிகளை, ‘சக்தி கேந்திரம்’ என பா.ஜ., வரையறுத்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 22,000 சக்தி கேந்திரங்களிலும், ‘நாளை நமதே; தமிழ்நாடும் நமதே’ என்ற முழக்கத்துடன் தெருமுனை பிரச்சாரக் கூட்டங்களை நடத்த பா.ஜ., தலைமை உத்தரவிட்டது.
இதற்கான ஏற்பாடுகள் செய்ய, ஒரு தெருமுனை பிரச்சாரக் கூட்டத்திற்கு 5,000 ரூபாய் வீதம், 22,000 கூட்டங்கள் நடத்த, 11 கோடி ரூபாயை பா.ஜ., மேலிடம் வழங்கியது. ஆனால் திட்டமிட்டபடி 22,000 சக்திக் கேந்திரங்களிலும் தெருமுனைக் கூட்டங்கள் நடக்கவில்லை என்றும், ஏற்பாடு செய்த இடங்களிலும் சரியாக நடத்தவில்லை என்றும், நிர்வாகிகள் ஆதாரங்களுடன் மேலிடத்திற்கு புகார் அளித்துள்ளனர்.
விசாரணை ‘டீம்’
மேலிடம் கொடுத்த 11 கோடி ரூபாயை முழுமையாக பா.ஜ., நிர்வாகிகள் செலவழிக்க வில்லை என்று கூறப்படுகிறது.
இதை விசாரித்த பா.ஜ., மேலிடம், தெருமுனை பிரசார கூட்ட செலவுகளுக்கான 5,000 ரூபாயை, சக்தி கேந்திர பொறுப்பாளரின் வங்கிக் கணக்கிலேயே செலுத்துமாறு உத்தர விட்டுள்ளது. ஆனால், பெரும்பாலான கூட்டங் களை முடித்து விட்டதாக, மேலிடத்திற்கு தமிழ்நாடு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால், தமிழ்நாடு பா.ஜ., நிர்வாகிகள் மீது, தேசியத் தலைவர் நிதின் நபின் அதிருப்தி அடைந்துள்ளதாக அக்கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். இதையடுத்து, டில்லி பா.ஜ., தலைமையில் இருந்து விசாரணைக்காக, தமிழ்நாட்டுக்கு ஒரு டீம் அனுப்பி வைக்கப் படும் என பா.ஜ.,வினர் தெரிவித்தன.
