ஒன்றிய அரசு நிலைமையை முன் கணித்துச் செயல்பட்டிருக்க வேண்டாமா?

4 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

உலகின் ஒரு மூலையில் நடக்கும்போர் – அதற்குத் தொடர்பற்ற மக்களையும் பாதிக்கிறதே!
கேஸ் சிலிண்டர் திடீர் விலையேற்றம் – ஓட்டல் உணவுகள் தட்டுப்பாடு!

உலகின் ஒரு மூலையில் நடக்கும்போர் – அதற்குத் தொடர்பற்ற மக்களையும் பாதிக்கிறதே! கேஸ் சிலிண்டர் திடீர் விலையேற்றத்தால் ஓட்டல் உணவுகள் தட்டுப்பாடு! ஒன்றிய அரசு நிலைமையை முன் கணித்துச் செயல்பட்டிருக்க வேண்டாமா? என கேள்வியெழுப்பி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

ஆற்றொழுக்காக மக்களது அன்றாட வாழ்வு சென்று கொண்டிருந்த நிலை மாறி, திடீரென்று உலக மக்கள் மீது திணிக்கப்பட்ட யுத்தம் காரணமாக, போர் நடைபெறும் நாட்டு மக்கள் அடைந்திருக்கும் பாதிப்பும்,  அவர்களது பொருட் சேதங்களும் – கட்டடங்கள் இழப்பும், உயிர்ச் சேதமும் மனித குலம் முழுமையும் வருந்தக் கூடிய துன்பமும், துயரமும் நிறைந்ததாக இருக்கிறது.

போரால், அந்நாட்டு மக்கள் மட்டும் பாதிப்பு அடையவில்லை. நேரிடையாக போருக்குச் சொல்லப்படும் காரணங்கள் எப்படியானாலும், போருக்கே சம்பந்தமில்லாமல் உள்ள உலகின்  பல நாடுகளும், மக்களும் அவர்களது அன்றாட வாழ்க்கையும், சிக்கல் நிறைந்த அவலத்தில் வெகுவாகத் தள்ளிவிடப்பட்ட அபாயம் – போர் அபாயத்தினால் ஏற்படுகிறது!

நித்தம் நித்தம் புத்தம் புதிய சோதனைகளுக்கும், வேதனைகளுக்கும் ஆளாகின்றனர்!

நம்மூரில் உள்ள வறுமையாமல் பாதிக்கப்பட்டு – அன்றாடம் தமது வாழ்வாதாரத்திற்கே திணறித் திண்டாடும் ஏழை, எளிய மக்களும், இந்தத் திடீர் போர் மூண்டதன் பாரதூர விளைவுகளால் பாதிக்கப்பட்டு நித்தம் நித்தம் புத்தம் புதிய சோதனைகளுக்கும், வேத னைகளுக்கும் ஆளாகின்றனரே! என்னே கொடுமை!!

அமெரிக்காவும், ஈரானும் போர் ‘விளையாட்டில்’ (முக்கிய பின்னணி இஸ்ரேல் என்ற நாடுதான்) தங்களுக்குள்ள ஆயுதப் படை பெருமையை உலகுக்குக் காட்டி, யார் பெரிய வல்லரசு என்று காட்ட முயலுவதற்கு, உலகின்  அப்பாவி நாடுகளும், அதன் தவிர்க்க முடியாத விளைவுகளால் ஏழை, எளிய, நடுத்தர வர்க்க மக்களுக்குச் சரியாக வயிற்றுக்குச் சோறிட முடியாத வன்னெஞ்சக் கொடுமைகளுக்கல்லவா ஆளாக வேண்டியுள்ளது.

நம் நாட்டைப் பொறுத்தவரையில், இதற்கு முழுக்காரணம் பிரதமர் மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுதான்.

புதிய எதிர்பாரா விலையேற்றங்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதித்துள்ளன!

அன்றாடம் கூலி வேலை செய்து, வரும் வரு வாயை வைத்து, ‘‘வயிறு கழுவும்’’ தொழிலாளி, அவரது வசதிக்கும், விருப்பத்திற்கும், அவரது நிதி வருவாயையும் பொறுத்து, உண்டு, வேலை செய்வ தையும் இல்லாமலாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஓட்டல்களில், சாதாரண மக்களுக்கான உணவுகள் கூட  கிடைக்காது. அவ்வப்போது மக்களின் பசியாற்றும் வடை போன்ற சிற்றுண்டிகளுக்கு விலை ஏற்றம்; காபி, தேநீர் விலை ஏற்றம் என்று போர்ச் செய்தியால், புதிய எதிர்பாரா விலையேற்றங்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதித்துள்ளன.

விறகு அடுப்பில் வெந்த இல்லத்தரசிகளின் கண்ணீரை மிச்சமாக்கவும், நுரையீரலைப் பாதுகாக்கவும்  வழி கோலிய எரிவாயு உருளை (கேஸ் சிலிண்டர்) விலை இறக்கைக் கட்டிக் கொண்டு, அவர்களது கைக்கும், காசுக்கும் எட்டாத உயரத்தில் பறக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. காசு அதிகம் கொடுத்தாலும், கேஸ் சிலிண்டர் கிடைப்பது சந்தேகமே என்ற கவலை, போர் மேகங்கள் திரண்ட போதே, உலாவரத் தொடங்கியதே, அப்போதே ஒன்றிய அரசு தொலைநோக்கோடு இந்தத் தேவையற்ற பீதியையும், பெருந்தட்டுப்பாடோ என்ற கவலையையும் தவிர்த்திருக்க வேண்டாமா?

உலக நாடுகளை ஒன்றுவிடாமல் சுற்றிச் சுற்றிவரும் நமது பிரதமர் மோடி, ‘இந்தியா, என்னாடு – அது உலகிற்கே விஸ்வகுரு’வாகிவிட்டது என்று வாய் முழக்கம் செய்தால் மட்டும், இங்குள்ள குடிமக்களுக்கு மகிழ்ச்சி ஊற்று உள்ளத்தில் கிளம்பிவிடுமா?

ஒன்றிய பா.ஜ.க. அரசு, நாட்டு மக்களின் அவதிக்கும் பொறுப்பேற்க வேண்டும்!

மாநிலங்களின் அதிகாரங்களை அரசியலமைப்புச் சட்டம் அனுமதித்ததைக்கூட, அன்றாடம் ஆக்கிரமித்து வருவதில், அக்கறை காட்டிவரும் இந்த ஒன்றிய பா.ஜ.க. அரசு, இன்று நாட்டு மக்களின் அவதிக்கும் பொறுப்பேற்க வேண்டும்!

எந்த முக்கிய பிரச்சினைகளையும் தீர்ப்பதற்குப் பதில், மாநில அரசுகளிடம் உள்ள அதிகாரத்தைப் பறித்து, ஒன்றிய அரசிடமே அதிகாரத்தினை குவித்து வைத்துப் பெருமைபடும் ஒன்றிய மோடி அரசு, நாட்டின் பிரச்சினைகளை எப்படி அணுகவேண்டும் – அரசியல் தத்துவப்படி?

உடனடித் தீர்வு – குறுகிய காலத் தீர்வு ஒருபுறம். தொலைநோக்குக் கண்ணோட்டத்துடனான தீர்வு என்ற இரண்டும் முக்கியம் அல்லவா?

அய்.நா.சபை என்ற ஒரு பொம்மை அமைப்பு உயிருடன் இருக்கிறதா? என்றே உலகத்திற்குத் தெரியவில்லை. முன்பு ரஷ்யா – உக்ரைன் போர்,

இப்போது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து – ஈரானுடன் போர்! இப்படி போர் வெடிப்பதைத் தடுத்து, மக்களைக் காப்பாற்ற வேண்டிய கடமை உள்ள அந்த அய்க்கிய நாடுகள் மன்றத்தினர் ‘விடுமுறை’க்குச் சென்றுவிட்டார்களா? வெட்கம்! மகாவெட்கம்!!

ஈரான் பகுதியில் உள்ள ‘ஹோர்முஸ் நீரிணை’ (ஜலசந்தி) வழியே எண்ணெய்க் கப்பல்கள் செல்ல அனுமதி உண்டு என்று தற்போது வெளிவந்துள்ள ஒரு செய்தி, சற்று நம்பிக்கை ஒளிக் கீற்றினைப் பாய்ச்சி, எண்ணெய் நெருக்கடி, விரைவில் தீரும் என்ற சிறிய நம்பிக்கையை விதைக்கிறது. ஆனால், நடைமுறை எப்படி இருக்குமோ?

தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகள் தேவையானதாகும்!

‘எரிவாயு உருளைக்குத் தட்டுப்பாடு ஏற்படாது’ என்று ஒன்றிய அரசு உறுதியளித்துள்ளதைச் சுட்டிக்காட்டி, மிகுந்த பொறுப்புணர்வோடு நம்முடைய முதலமைச்சர் அவர்கள், ‘‘மக்கள் பதற்றப்பட வேண்டாம்’’ என்று கூறியிருப்பது இந்தக் காலகட்டத்தில் வரவேற்கத்தக்க தாகும்.

என்றாலும், தமிழ்நாடு அரசும், முதலமைச்சரும் ஓட்டல் அதிபர்கள் மற்றும் மக்களை அவதியிலிருந்து காப்பாற்றத் தங்களது அதிகார வரம்புக்குள் எடுத்துவரும் நடவடிக்கைகள் தேவையானதாகும்; அதற்கு மற்ற வர்களும் ஒத்துழைக்கவேண்டும்!

புதியதோர் உலகு செய்வோம் – கெட்ட

போரிடும் உலகை வேரோடு சாய்ப்போம்!

கி.வீரமணி

தலைவர்,
திராவிடர் கழகம்

 

சென்னை    

12.3.2026         

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *