ஏற்கெனவே மகாராட்டிரம், அரியானா, கருநாடகம் ஆகிய மாநிலங்களில் ஊடுருவி, அம்மாநிலக் கட்சிகளை உருக்குலைத்தது பி.ஜே.பி.!
இப்பொழுது பீகாரிலும் அதே கபளீகரம்!
இதற்குப் பிறகாவது அ.தி.மு.க. விழித்துக் கொள்ளுமா?
தமிழர் தலைவர்
ஆசிரியரின் எச்சரிக்கை அறிக்கை
இப்பொழுது பீகாரிலும் அதே கபளீகரம்!
இதற்குப் பிறகாவது அ.தி.மு.க. விழித்துக் கொள்ளுமா?
தமிழர் தலைவர்
ஆசிரியரின் எச்சரிக்கை அறிக்கை
ஏற்கெனவே மகாராட்டிரம், அரியானா, கருநாடகம், வடகிழக்கு மாகாணங்களில் நயவஞ்சகமாக பி.ஜே.பி. ஊடுருவி, கூட்டணி வைத்த கட்சிகளை உருத் தெரியாமல் அழித்து, இப்பொழுது பீகாரிலும் தன் வேலையைக் காட்டிவிட்டது! இதற்குப் பிறகும் அ.தி.மு.க. விழித்துக் கொள்ளாவிட்டால், ‘கரடியைக் கம்பளி மூட்டை’ என்று கட்டிப் பிடித்த கதைதான் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை அறிக்கை வருமாறு::
- ஏற்கெனவே மகாராட்டிரம், அரியானா, கருநாடகம் ஆகிய மாநிலங்களில் ஊடுருவி, அம்மாநிலக் கட்சிகளை உருக்குலைத்தது பி.ஜே.பி.! இப்பொழுது பீகாரிலும் அதே கபளீகரம்! இதற்குப் பிறகாவது அ.தி.மு.க. விழித்துக் கொள்ளுமா? தமிழர் தலைவர் ஆசிரியரின் எச்சரிக்கை அறிக்கை
- பி.ஜே.பி.யின் நயவஞ்சக அணுகுமுறை!
- மகாராட்டிரத்தில் என்ன நடந்தது?
- அரியானாவில் பி.ஜே.பி.யின் திருவிளையாடல்!
- கருநாடகத்தில் நடந்த கதை!
- வடகிழக்கு மாநிலங்களில் பி.ஜே.பி. ஒட்டகம் என்ன செய்தது?
- அடுத்த காட்சி -இப்பொழுது பீகாரில் அரங்கேற்றம்!
- ‘திருதராஷ்டிர ஆலிங்கனம்’ என்பது மதவாத பி.ஜே.பி.,க்குக் கைவந்த கலை!
பாரதிய ஜனதா கட்சி என்பது கூடாரத்தில் நுழைந்த ஒட்டகம் போன்றது. ஒரு மாநிலத்தில் தனக்குப் பெரும் பான்மை இல்லாதபோது, அந்த மாநிலத்தில் உள்ள முக்கியமான கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ளும்!
பி.ஜே.பி.யின் நயவஞ்சக அணுகுமுறை!
அந்த முக்கியமான கூட்டணிக் கட்சிக்காரரையே முதலமைச்சர் என்று ஒப்புக் கொள்ளும்; அதற்கு அடுத்த கட்டமாகக் கூட்டணியை உடைத்து, அந்தக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களைத் தன் கட்சிக்குள் இழுத்துக் கொள்ளும். அதன் பிறகு, அந்தக் கூட்டணிக் கட்சியையே ஒழித்துக் கட்டி அல்லது பலகீனப்படுத்தி, பி.ஜே.பி.யே அம்மாநிலத்தில் முதன்மையான கட்சி என்ற நிலையை ஏற்படுத்திக் கொண்டுவிடும். எடுத்துக் காட்டாக மகாராட்டிராவை எடுத்துக் கொள்ளலாம்.
மகாராட்டிரத்தில் என்ன நடந்தது?
2019 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பி.ஜே.பி.யும், (தேவேந்திர பட்னாவிஸ்) சிவசேனாவும் (உத்தவ் தாக்கரே) ஆகிய இரு கட்சிகளும் கூட்டணி வைத்துப் போட்டியிட்டன. பி.ஜே.பி. 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன.
யார் முதலமைச்சர்? என்பதில் அவர்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டதால், குடியரசுத் தலைவர் ஆட்சி செயல்பாட்டுக்கு வந்தது.
திடீரென்று ஒரு திருப்பம் – அது என்னவென்றால், தேசியவாத காங்கிரஸ் (NCP), சரத்பவாரின் தம்பி மகன் அஜித்பவார், அந்தக் கட்சியிலிருந்து விலகி, பி.ஜே.பி.க்கு ஆதரவு அளித்தார் என்பதுதான் அந்தச் செய்தி!
ஒரு விடியற்காலையில் தேவேந்திர பட்னாவிஸ் (பி.ஜே.பி.) முதலமைச்சராகவும், அஜித்பவார் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டனர்!
(பி.ஜே.பி. நினைத்தால் ஆளுநர் விடியற்காலையில் 4 மணிக்குக்கூட பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்).
ஆனாலும், இந்தக் கூட்டணி ஆட்சி 80 மணி நேரம்தான் தாக்குப் பிடித்தது. பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், பதவி விலக நேர்ந்தது!
அதனைத் தொடர்ந்து, திரைப்படத்தில் நடப்பது போல ஒரு புதிய திருப்பம்! மகாராட்டிர மாநிலத்தில் முன்னணிக் கட்சியான சிவசேனா என்ன செய்தது? காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகியவற்றுடன் கூட்டுச் சேர்ந்தது. (மகாவியாஸ் அகாடி) உத்தவ்தாக்கரே (சிவசேனா) முதலமைச்சரானார்.
சிவசேனா இரண்டாக உடைந்தது. ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அந்தப் பிளவு ஏற்பட்டது – பின்னணியில் இருந்தது பி.ஜே.பி. உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி ஆட்சி 2 ஆண்டுகள் 214 நாள்கள் வரை நீடித்தது.
அடுத்து 2024 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில், பி.ஜே.பி. தலைமையிலான ‘மகாவியாஸ்’ கூட்டணி வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 288 இடங்களில், இந்தக் கூட்டணிக்கு 235 இடங்கள் கிடைத்தன. (பி.ஜே.பி. 132, ஏக்நாத் ஷிண்டே யின் தலைமையிலான சிவசேனாவுக்கு 57, அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசுக்கு 41).
பி.ஜே.பி.யைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் (பார்ப்பனர்) முதலமைச்சராகவும், சிவசேனாவைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே, அஜித்பவார் ஆகிய இருவரும் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றனர். மகாராட்டிராவில் காலடி பதித்த பி.ஜே.பி., சிவசேனாவையும், தேசியவாத காங்கிரசையும் உடைத்து, ஆட்சியைக் கைப்பற்றியது என்பது கவனிக்கத்தக்கதாகும்.
அரியானாவில் பி.ஜே.பி.யின் திருவிளையாடல்!
அரியானாவில் என்ன நடந்தது?
90 உறுப்பினர்களைக் கொண்ட அரியானா சட்டப் பேரவைக்கு, 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பி.ஜே.பி.,க்குக் கிடைத்த இடங்கள் 40; காங்கிரசுக்கு 31 இடங்கள்; ஜன்நாயக் ஜனதா கட்சி (JIP) 10 இடங்கள். யாருக்கும் பெரும்பான்மை இல்லை.
இந்த நிலையில், ஜே.அய்.பி. கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து பி.ஜே.பி. ஆட்சியை அமைத்தது. முதல மைச்சராக பி.ஜே.பி.யும், துணை முதலமைச்சராக ஜே.அய்.பி.யும் பொறுப்பேற்றன.
ஆனாலும், 2024 சட்டப்பேரவைத் தேர்தலுக்குமுன், இந்தக் கூட்டணி உடைந்தது (12.3.2024). முக்கியமாக மக்களவைத் தேர்தலில் ஜே.அய்.பி.க்கு இடங்கள் அளிப்பதில் ஏற்பட்ட சர்ச்சையால் இந்தக் கூட்டணி முறிந்தது.
2024, ஆகஸ்டு 16 அன்று நடைபெற்ற சட்டப்பேர வைத் தேர்தலில் பி.ஜே.பி. 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.
இதில் கவனிக்கத்தக்கது என்னவென்றால், 2019 சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி. ஆட்சியில் அமர ஆத ரவு கொடுத்த ஜே.அய்.பி. கட்சிக்கு இந்தத் தேர்தலில் கிடைத்த இடங்கள் வெறும் பூஜ்யமே!
ஒட்டகம் கூடாரத்தில் நுழைந்த கதை என்பது இதுதான்!
கருநாடகத்தில் நடந்த கதை!
2006 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், கரு நாடக மாநிலத்தில் என்ன நடந்தது?
அம்மாநிலத்தில் குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதாதளத்துடன் கூட்டணி வைத்து பி.ஜே.பி. உள்ளே நுழைந்தது. 20 மாதங்கள் குமாரசாமி முதலமைச்சர், 20 மாதங்கள் எடியூரப்பா முதலமைச்சர் என்ற ஒப்பந்தப்படி, குமாரசாமி முதலமைச்சரானார். 20 மாதங்கள் முடிந்த பிறகு, இரு கட்சிகளுக்குள்ளும் பிரச்சினை வெடித்து, கூட்டணி முறிந்தது!
பிறகு என்ன நடந்தது?
‘‘ஆபரேஷன் தாமரை’’மூலம் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களைப் பதவி ஆசை காட்டி, பி.ஜே.பி.,க்குள் இழுத்து, எடியூரப்பா தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது.
வடகிழக்கு மாநிலங்களில்
பி.ஜே.பி. ஒட்டகம் என்ன செய்தது?
பி.ஜே.பி. ஒட்டகம் என்ன செய்தது?
அசாம் மற்றும் மணிப்பூர் போன்ற மாநிலங்களில் ஆரம்பத்தில் மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி வைத்த பி.ஜே.பி., மெல்ல மெல்ல அந்தக் கட்சிகளின் முக்கியத் தலைவர்களை – அவர்களின் ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்து மிரட்டி, அசாமில், ஹிமந்தா பிஸ்வா சர்மா போன்றவர்களை இழுத்து ஆட்சியைத் தன்வசப்படுத்தியது.
பாஜக பல மாநிலங்களில் கூட்டணி கட்சித் தலைவர்களுக்குப் பதவி கொடுத்து, பிறகு அந்தத் தலைவர்களின் செல்வாக்கைச் சரித்து அல்லது அவர்களைத் தன் கட்சியில் இழுப்பது அல்லது அரசியலில் இருந்தே விரட்டுவது என்ற யுக்தியைக் கையாண்டு வருகிறது.
மகாராட்டிராவில் சிவசேனா கட்சியை உடைத்துவந்த ஏக்நாத் ஷிண்டே, மேற்குவங்கத்தில் மம்தாவை எதிர்த்துக் கட்சியைவிட்டு வெளியே வந்த சுமந்து அதிகாரி போன்றோரை, அவர்களால் பலன் அடைந்த பிறகு, அவர்களைத் துடைத்துப் போடும் காகிதம் போல பாஜக தூக்கி வீசி எறிந்தது! ஒரு காலத்தில் மாநிலத்தில் முக்கிய அரசியல் முகமாக மாநிலக் கட்சியின் முதன்மை முகமாக இருந்த அவர்கள், பா.ஜ.க.வோடு கூட்டுச் சேர்ந்ததால் அரசியல் எதிர்காலம் இல்லாமல் கரைந்து போய்விட்டார்கள்.
அடுத்த காட்சி -இப்பொழுது பீகாரில் அரங்கேற்றம்!
பீகாரில் உள்ளே நுழைய – அம்மாநிலத்தில் அறி முகமான நிதிஷ்குமாரைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்து, அந்தத் திசையில் காயை நகர்த்தியது பி.ஜே.பி.
நிதிஷ்குமார் கடந்த 20 ஆண்டுகளாக பீகாரில் முதலமைச்சராக இருந்தவர்.
2025 நவம்பர் 20 ஆம் தேதி முதலமைச்சர் பதவி யேற்ற ஜனதா தள் (United) தலைவர் நிதிஷ்குமார், நான்கே மாதங்கள்கூட ஆகாத நிலையில், இப்போது முதலமைச்சர் பதவியிலிருந்து விலகவேண்டிய அவசியம் என்ன?
நிதிஷ்குமார் நீண்ட காலமாக தேசிய அரசிய லில் பணியாற்றவேண்டும் என்று விருப்பம் வைத்தி ருந்தாராம்! அதனால், மாநிலங்களவைக்கு அனுப்புவது சரியான தருணம் இதுவே! அவர் மாநில அரசியலில் இல்லாவிட்டாலும், தேசிய அளவில் ஆலோசனை வழங்கும் மூத்த தலைவராக இருக்கப் போகிறாராம்! – பி.ஜே.பி. வட்டாரம் கூறுகிறது. நரியை நனையாமல் குளிப்பாட்டுவது என்பார்களே, அது இதுதான்!
ஏற்கெனவே நிதிஷ்குமார் ரயில்வே துறை அமைச்ச ராக இருந்தவர்தானே!
தேசிய அரசியலில் ஏற்கெனவே இருந்தார் என்பதற்கு இது ஒன்று போதாதா? ஏதோ இப்பொழுதுதான் தேசிய அரசியலில் நிதிஷ்குமார் நுழையப் போவதாக பி.ஜே.பி. கதை கட்டுகிறது என்பதெல்லாம் வழக்கமான பி.ஜே.பி. நடத்தும் நயவஞ்சக நாடக அரசியல்தான்!
நிதிஷ்குமாரை பீகார் அரசியலிலிருந்து நகர்த்தி விட்டு, பி.ஜே.பி. ஆட்சியைப் பீகாரில் பகிரங்கமாகப் பிரகடனப்படுத்தும் ஏற்பாடுதான் இது! வழக்கம்போல நிதிஷ்குமார் மகனுக்குத் துணை முதலமைச்சர் பதவி!
மகாராட்டிரம், அரியானா, கருநாடகா, வடகிழக்கு மாநிலங்களில் பி.ஜே.பி. கையாண்ட சித்து விளை யாட்டின் – ஊடுருவி ஒழிக்கும், கபளீகரம் செய்யும் வஞ்சகக் கலையின் தொடர்ச்சிதான் பீகார் மாநில அரசியலில் இப்பொழுது நடத்தியுள்ள நயவஞ்சகம்!
நேற்று (5.3.2026)கூட அசாம் காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர்கள் மூன்று பேர், பி.ஜே.பி.,க்குள் இழுக்கப்பட்டுள்ளனர்.
‘திருதராஷ்டிர ஆலிங்கனம்’ என்பது
மதவாத பி.ஜே.பி.,க்குக் கைவந்த கலை!
மதவாத பி.ஜே.பி.,க்குக் கைவந்த கலை!
பி.ஜே.பி.யின் இந்த அரசியல் கபட வேடத்தைத் தொடக்கக் காலம் முதலே தோலுரித்து வந்துள்ளது திராவிடர் கழகம் – பொதுவாக பெரியார் மண்ணான இந்தத் திராவிட மண் இதனைச் சரியாகவே புரிந்து வைத்தும் உள்ளது. அதனால்தான், பி.ஜே.பி.யின் ஆட்ட பாட்டங்கள் இங்கே பலிக்கவில்லை!
தமிழ்நாட்டில் கால் பதிக்க அ.தி.மு.க.வைப் பயன்படுத்தும் திட்டத்தில் இறங்கியிருக்கிறது என்பதை இப்பொழுதும்கூட எச்சரிக்கின்றோம்!
எதற்கெடுத்தாலும் டில்லிக்கு ஓடும் ஒரு நிலையை அ.தி.மு.க.வுக்கு ஏற்படுத்திவிட்டது பி.ஜே.பி.! ‘திருதராஷ்டிர ஆலிங்கனம்’ என்பது எல்லாம் மதவாத பி.ஜே.பி.க்குக் கைவந்த கலை!
‘கம்பளி மூட்டை’ என்று கரடியைக் கட்டிப் பிடித்தால் ‘உயிருக்கே உலை’ என்று முன்பும் எச்சரித்தோம், இப்போதும் எச்சரிக்கின்றோம்!
அக்கட்சித் தொண்டர்களே, ‘கட்டிப்பிடித்தவர்களை’ இப்போதாவது உணருங்கள்!
அந்தோ பரிதாப அ.தி.மு.க.!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
6.3.2026
