சென்னை, மார்ச் 1 – ‘சுயமரியாதை இயக்கம்’ உலகத்திற்கே உரியது என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
பெங்களூருவில் செய்தியாளர்களிடையே
தமிழர் தலைவர்
நேற்று (28.2.2026) பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியி பங்கேற்கச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்பேட்டியின் விவரம் வருமாறு:
செய்தியாளர்: தமிழ்நாடு தேர்தல் களம் இப்போது எப்படி இருக்கிறது?
தமிழர் தலைவர்: தமிழ்நாடு தேர்தல் களத்தைப் பொறுத்தவரையில், திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியினுடைய பலமும், அதற்கு மக்கள் ஆதரவும் ஒவ்வொரு நாளும் பெருகி வருகிறது.
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் தேடிப் பார்த்தால்கூட கிடைக்க முடியாது!
அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு – எதிர்க்கட்சி களாக இருந்தவர்கள்கூட, தமிழ்நாடு முதலமைச்சரின், ‘திராவிட மாடல்’ ஆட்சியினுடைய சிறப்பை ஒவ்வொரு நாளும் உணருகிறார்கள். அவர் எந்தத் தரப்பினரையும் விட்டு வைக்கவில்லை. எல்லாத் தரப்பினருக்கும், ‘எல்லோருக்கும் எல்லாமும்’ என்று செய்யக்கூடிய அளவில், அவரே சொன்னதுபோன்று, அவரது சக்திக்கு மீறி தொடர்ந்து பாடுபடுகிறார்.
இப்படி ஒரு முதலமைச்சரை, தமிழ்நாட்டைத் தவிர, இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் தேடிப் பார்த்தால்கூட கிடைக்க முடியாது. அவரைப் பொறுத்தவரையில், 24 மணிநேரம் போதவில்லை என்ற அளவில்தான், அவர் மக்கள் பணிகளைச் செய்து கொண்டிருக்கின்றார்.
வெற்றி பெற முடியாது என்பதை,
ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. தெளிவாக உணர்ந்திருக்கிறது!
நேரிடையாக அவரைக் களத்தில் சந்திக்க முடி யாது; வெற்றி பெற முடியாது என்பதை,
ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. தெளிவாக உணர்ந்திருக்கிறது. அதன் காரணமாகத்தான், நாளும் அவருக்குப் பெருகி வரக்கூடிய மக்கள் ஆதரவும், அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணிக்குச் செல்ல மற்றவர்கள் பின்வாங்குவதற்கும் என்ன காரணம் என்றால், மக்கள் மத்தியில், அதிலும் குறிப்பாக பெண்கள் மத்தியில், இளைஞர்கள் மத்தியில் ஒரு நல்ல பேராதரவு வருகிறது என்பதை அவர்கள் புரிந்து கொண்ட காரணத்தினால், ஒரு பக்கம் தாங்கள் எதிர்பார்த்த அளவிற்குக் கூட்டணி அமையவில்லையே என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
பி.ஜே.பி.யினுடைய ஸ்லிப்பர் செல்களாகத்தான் இருக்கிறார்கள்!
சிலரை வைத்து, வாக்குகளைப் பிரிக்க முடியுமா என்றும், ஸ்லிப்பர் செல் மாதிரி சில கட்சிகளைப் பயன்ப டுத்துகிறார்கள். புதிதாக வரக்கூடிய சில கட்சிகளும், தி.மு.க.வை அதிகமாக விமர்சனம் செய்யட்டும் என்ற அளவிலே, அவர்கள் பி.ஜே.பி.யினுடைய ஸ்லிப்பர் செல்களாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், அது ஒரு பெரிய பொருட்டல்ல.
மீண்டும் ஸ்டாலின் ஆட்சி என்பது
உறுதி செய்யப்பட்ட ஒன்றாகும்!
நிச்சயம் மக்கள் ஆதரவோடும், கூட்டணி பலத்தோ டும், தெளிவாக திராவிட மாடல் ஆட்சி 2026 இல் மீண்டும் நல்ல பெரும்பான்மையோடு ஆட்சி அமைப்பதற்கு என்றைக்கோ அது ஆயத்தமாகிவிட்டது.
கிட்டத்தட்ட கோட்டையில் மீண்டும் ஸ்டாலின் ஆட்சி என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்றாகும்.
கருத்துக் கணிப்பு போன்றவற்றிற்கு நான் முக்கியத்துவம் கொடுக்கமாட்டேன். பல நேரங்களில், கருத்துக் கணிப்புகள் எல்லாம் கருத்துத் திணிப்புகளாக இருக்கும். ஆகவே, அதற்கு முக்கியத்துவம் கொடுத்து, அதை வைத்துச் சொல்லவில்லை.
நடைமுறையில் மக்கள் ஆதரவு அன்றாடம் பெரு கக்கூடிய வாய்ப்பை, ஒவ்வொரு நாளும் பல ஊர்களில் சுற்றுப்பயணம் செய்து, மக்களைச் சந்திக்கக் கூடிய ஒருவன் என்ற முறையில் இதை நான் சொல்கிறேன்.
ஷூட்டிங்குக்கு கால்ஷீட் கொடுப்பதுபோன்று,
மக்களுக்கும் கால்ஷீட் கொடுக்கிறார்!
செய்தியாளர்: நடிகர் விஜய், த.வெ.க.விற்கும், தி.மு.க.விற்கும்தான் போட்டி என்று சொல்கிறாரே?
தமிழர் தலைவர்: அவரைப் பொறுத்தவரையில், அவர் குறித்த கேள்விக்குப் பதில் சொல்ல நான் விரும்பவில்லை. அவர் இன்னும் அரசியல் செய்ய வில்லை. ஷூட்டிங் நடத்திக் கொண்டிருக்கின்றார்.
ஷூட்டிங்குக்கு கால்ஷீட் கொடுப்பதுபோன்று, மக்களுக்கும் கால்ஷீட் கொடுக்கிறார். அவர் அறையில் அமர்ந்து கொண்டு, வசனம் பேசிக் கொண்டிருக்கின்றார்.
ஆகவே, இன்னும் அவருக்கு ஒரு தெளிவான கொள்கையோ, இலக்கோ இல்லை.
முதலமைச்சரைப் பார்த்து சில கேள்விகள் என்று, சினிமா டயலாக் போன்று கேட்பது இருக்கிறதே, அது எந்த வகையிலும் அவருக்குப் பயன்படாது.
இரண்டாவதாக, அவருடைய அமைப்பு என்பதே இன்னும் உருவாக்கப்படவில்லை.
நல்ல நடிகராக இருக்கலாம்;
ஆனால், நல்ல அரசியல்வாதியாக இன்னும் ஆகவில்லை!
ஒரு தலைவன் என்றால், அவருடைய தொண்டர்கள் கட்டுப்பாட்டுக்குள் அடங்கவேண்டும். மக்கள் அவரை மதிக்கவேண்டும் என்றால்தான், அது தலை மைத்துவத்திற்குரிய பண்பாகும். அதை அவரிடத்தில், தேடிக் கண்டுபிடிக்க வேண்டியதாகத்தான் இருக்கிறது. அவர் நல்ல நடிகராக இருக்கலாம். ஆனால், நல்ல அரசியல்வாதியாக இன்னும் ஆகவில்லை.
செய்தியாளர்: சுயமரியாதை இயக்கமும், பொதுவுடைமை இயக்கமும் ஒரே காலகட்டத்தில் தொடங்கப்பட்டது. அதே காலகட்டத்தில்தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் தொடங்கப்பட்டது. பொதுவுடைமை இயக்கத்திற்கும் – திராவிட இயக்கத்திற்கும் இல்லாத தாக்கம், தேசிய அளவில் ஆர்.எஸ்.எஸ்சுக்கு மட்டும் இருப்பது என்ன காரணம்?
தமிழர் தலைவர்: இந்த அமைப்புகள் ஒரே ஆண்டில் தொடங்கப்பட்டாலும்கூட, பொதுவுடைமைக் கட்சிக்கும், சுயமரியாதை இயக்கத்திற்கும் கிட்டத்தட்ட ஒரே இலக்குதான். ஆனால், நடைமுறையில் வருகிற போது, நடைமுறைப்படுத்துவதற்கு சில திட்டங்களில் மாற்றம் இருக்கும். ‘பிரின்சிபில்ஸ்’ என்பது அடிப்படைக் கொள்கை. ‘பாலிசி’ என்பது திட்டங்கள். இலக்கை அடைவதற்கான திட்டங்கள் வேறாக இருக்கலாம்.
கம்யூனிசம் இந்த நாட்டிற்கு விரோதமானதல்ல!
பல நேரங்களில் ஒத்தக் கருத்துள்ளவர்களாக இருந்தாலும், அணுகுமுறையில் வெவ்வேறாக ஈடுபட்ட காரணத்தினால், அதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு, வளரவேண்டிய அளவிற்கு அது வளரவில்லையானாலும், கம்யூனிசம் இந்த நாட்டிற்கு விரோதமானதல்ல.
அதுதான் தீர்வு என்பதை எல்லோரும் உணர்ந்தி ருக்கின்றோம். திராவிட இயக்கத்திற்கும், அந்தத் தத்துவம் உண்டு.
ஆனால், சுயமரியாதை இயக்கத்தைப் பொறுத்த வரையில், பெரியார் அவர்கள், நேரிடையாக மக்கள் மத்தியில் ஒரு பெரிய அளவிற்கு அன்றாடம் தொடர்பு உள்ளவராக இருந்தார்கள். மக்கள் மத்தியில் ஒரு பெரிய எழுச்சியை உண்டாக்கினார்கள்.
இவையெல்லாம் வெளிப்படையானதாகும். இரண்டு இயக்கங்களிலும் திட்டங்கள் வெளிப்படையானவை.
ஆனால், ஆர்.எஸ்.எஸ். அப்படிப்பட்டதல்ல. ஆர்.எஸ்.எஸ். அமைப்பில், உள்ளே இருக்கும் திட்டங்கள், மனதிற்குள் இருக்கும் திட்டம், அவர்களின் கொள்கைப் பூர்வமான திட்டங்கள் வேறு. வெளியே சொல்வது வேறு.
ஆர்.எஸ்.எஸ்.சின் திட்டங்கள் எல்லாம்
மறைமுகத் திட்டங்கள்தான்!
ஆகவே, மறைமுகத் திட்டம் (Hidden Agenda) என்ற புதைத்துக் கொண்டிருக்கின்ற ஒரு திட்டம். வெளிப்படையாக அவர்கள் சொல்வதற்கும், செயல்படுவதற்கும் சம்பந்தமே கிடையாது.
அப்படி வைத்துக்கொண்டு, அவ்வப்பொழுது தங்களது கருத்துகளை மாற்றிக்கொண்டு, தந்திரங்கள் மூலமாகவும், யூகங்கள் மூலமாகத்தான் அவர்கள் மதவெறியைப் பயன்படுத்தி அகில இந்திய அளவிற்கு வந்தார்கள்.
சுயமரியாதை இயக்கமும் – பொதுவுடைமை இயக்க மும் ஜாதி ஒழிப்பிற்கு, வருணாசிரம தர்ம ஒழி்ப்பிற்கு, பகுத்தறிவுக்குப் பாடுபடுகின்ற இயக்கங்களாகும்.
சுயமரியாதை இயக்கம் முழுக்க முழுக்க அரசி யலுக்கே போகாமல், தடுமாற்றம் இல்லாமல், நல்ல அளவிற்கு வந்தது.
பிறகு, திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்து, அரசியலுக்குச் சென்று, இன்றைக்குத் ‘திராவிட மாடல்’ ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அந்த ஆட்சியாக இருந்தாலும், அதை வேலை வாங்கவேண்டும் என்பதுதான் பெரியாருடைய திட்டமாகும். அதில் அவர் வெற்றியும் பெற்றிருக்கின்றார், காமராசர் அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்தி லிருந்து!
ஆனால், மற்ற அமைப்புகளில், அரசியல் ரீதியாக என்று சில நேரங்களில் வந்ததால், அதற்கு சில பல வாய்ப்புகள் குறைவாக இருந்தது. பல்வேறு தியாகங்களை அவர்கள் செய்தாலும்கூட, அந்தத் தியாகத்திற்குரிய அளவிற்குப் பலன், இனிமேல் வேண்டுமானால் கிட்டலாமே தவிர, இதுவரை இல்லை.
மொழி வெறி – மதவெறி –
ஜாதி வெறிதான்!
ஆனால், ஆர்.எஸ்.எஸ். அப்படியல்ல. மொழி வெறி – மதவெறி – ஜாதி வெறி.
ஹிந்தித் திணிப்பு – வருணாசிரமத் திணிப்பு – பண்பாட்டுப் படையெடுப்புகளை வைத்து, அந்த அமைப்பு அகில இந்திய அளவில், ஹிந்து மதம் என்பதை முன்னிலைப்படுத்தி இருக்கிறார்கள்.
ஆனால், மதவெறிக்கு இடமில்லாமல், மனித நேயத்தைச் சொல்லவேண்டும் என்று சொல்கிறபோது, சுயமரியாதை என்பது உலகளாவிய தத்துவமாக இருந்தாலும், முதலில் தமிழ்நாட்டில் அதற்குரிய பீடத்தை உருவாக்கவேண்டும் என்று தந்தை பெரியார் நினைத்தார். ஆகவே, இதை பெரியார் நாடாகவே ஆக்கி விட்டார். அதில் அவருக்குத் தனி வெற்றி கிடைத்தது.
அவருடைய கொள்கை, ஜாதி ஒழிப்பு – தீண்டாமை ஒழிப்பு – மூடநம்பிக்கை ஒழிப்பு – பெண்ணடிமை நீக்கம் – சமூகநீதியை எல்லோருக்கும் பெற்றுத் தருதல்.
பெரியார் உலகமயமாகி இருக்கிறார்;
உலகம் பெரியார் மயமாகிக் கொண்டிருக்கிறது!
இதுபோன்ற கொள்கையில் தெளிவாக உறுதியாக இருக்கின்ற காரணத்தினால், முதலில் தமிழ் மண்ணைப் பக்குவப்படுத்தவேண்டும். அந்த என்ஜின் உலகம் முழுவதும் போகக்கூடிய அளவிற்கு இருக்கிறது.
இன்றைக்குப் பெரியார் உலகமயமாகி இருக்கிறார்; உலகம் பெரியார் மயமாகிக் கொண்டிருக்கிறது.
இது வெளிப்படையானது. ஆனால், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அப்படிப்பட்டதல்ல.
ஆர்.எஸ்.எஸ். மூன்று முறை
தடை செய்யப்பட்ட அமைப்பு!
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மூன்று முறை தடை செய்யப்பட்ட அமைப்பாகும். அவ்வப்பொழுது தங்களுடைய நிறத்தை மாற்றிக் கொள்வதுபோன்று காட்டிக் கொள்வதும். சூழ்ச்சி, தந்திரங்கள் மூலமாகவும், அரசியல் வியூகங்களாகவும், அவ்வப்பொழுது வந்து, ஆட்சியைப் பிடிப்பதற்காக ஒன்று சொல்வது; பல கட்சிகளை அணைத்து அழிப்பது போன்ற முயற்சிகளை அவர்கள் செய்ததன் விளைவாகத்தான் இன்றைக்கு ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள்.
வாஜ்பேயி அரசு, மற்றவர்களோடு கூட்டணி வைத்து, ஒன்றிய ஆட்சியில் அமர்ந்தது. அதற்குப் பிறகு, தாங்களே முன்னால் வரக்கூடிய அளவிற்கு அவருடைய காலகட்டம் இருந்தது.
முதலில் அவர்கள் ஆட்சிக்கு வரும்போது,
ஆர்.எஸ்.எஸ். கொள்கையைச் சொல்லவில்லை. மோடி அரசு பதவியேற்கும்போது, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று
சொன்னது.
மோடி அவர்களுடைய காலத்தில், மக்களுக்கு வாக்குறுதி என்று சொல்லி, ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் ‘பொத்தென்று’ விழும் என்று அவர்களே சொன்னார்கள். பிறகு அது ‘ஜூம்லா’ என்று சொன்னார்கள்.
‘நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் ஹிந்து நாடாக ஆக்குவோம், ஹிந்துராஷ்டிரமாக ஆக்குவோம்’ என்று வெளிப்படையாக ஆர்.எஸ்.எஸ். கொள்கையை அவர்கள் சொல்லவில்லை.
பிறகு, ஆர்.எஸ்.எஸ்.சே அந்தத் தந்திரத்தைப் பயன்படுத்தி, எங்கெங்கெல்லாம் இதைச் சொன்னால், மக்கள் ஏமாறுவார்களோ – அப்போது வேலையில்லாத் திண்டாட்டம் அப்போது இருந்தது. அதைப் பயன்படுத்தலாம் என்று நினைத்தார்கள்.
ஆகவே, உள்ளொன்று வைத்துப் புறமொன்று சொல்வது என்பது இரண்டு வகையான அணுகு முறையாகும்.
பி.ஜே.பி. தனித்து நின்று, எந்த மாநிலத்திலும் அவர்கள் வெற்றி பெறவில்லை!
இப்போதுகூட, பி.ஜே.பி. தனித்து நின்று, எந்த மாநிலத்திலும் அவர்கள் வெற்றி பெறவில்லை. மூன்று, ஹிந்தி மாநிலங்களைத் தவிர, அவர்கள் தனியாக நின்று வெற்றி பெறவில்லை. அங்கே அது ஒரு மாநில கட்சியாகத்தான் இருந்தது.
இப்போது அது அகில இந்திய அளவில் வளர்ந்திருக்கி றது என்றால்,– சொந்தக் காலிலே அவர்கள் நிற்பதின் மூலமாக வளரவில்லை.
அவர்கள் நினைப்பு ஒருபோதும் பலிக்காது!
மாறாக, எங்கெங்கே யார் யாரைப் பிடிக்க முடி யுமோ, அப்படி பிடித்து உள்ளே போகலாம் என்று நினைக்கிறார்கள். மகாராட்டிரா அதற்கு ஓர் உதாரண மாகும். அதுபோல, தமிழ்நாட்டையும் அப்படி ஆக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்கள் நினைப்பு ஒருபோதும் பலிக்காது!
இதுதான் சுயமரியாதை இயக்கம் – பொதுவுடைமை இயக்கம் – ஆர்.எஸ்.எஸ். ஆகிய மூன்று கட்சிகளின் நிலையாகும்!
திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில், அதனுடைய கொள்கைகளை இன்றைக்குச் செயல்ப டுத்தக் கூடிய அரசுகளாகத்தான் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.
வலுப்படுத்தி, அகலப்படுத்திய ஒரு தத்துவ ஆட்சி முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சி!
வெளிப்படையாகவே ‘திராவிட மாடல்’ ஆட்சி, அந்தக் கொள்கையைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. ‘எங்கள் பாதையைத் தீர்மானிப்பது பெரியார் திடல்தான்’’ என்று சொல்கின்ற அளவிற்கு பெரியாருடைய கொள்கையைப் பின்பற்றி ஆட்சியை பெரியாருக்குக் காணிக்கை ஆக்கிய பேரறிஞர் அண்ணா – அதை இன்னும் வலுப்படுத்தி, அகலப்படுத்திய ஒரு தத்துவ ஆட்சி முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சி.
கடுமையான உழைப்பிற்கு, மக்கள் தரக்கூடிய பரிசாக நிச்சயம் அமையும்!
எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து, மிகச் சிறப்பாக துணிவோடும், யார் தங்களுடைய கொள்கை நண்பர்கள்? யார் தங்களுடைய கொள்கை எதிரிகள்? என்பதைத் தெளிவாகத் தெரிந்து, அதிலிருந்து கொஞ்சம்கூட பின்வாங்காமல், ‘‘தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம் – நானும் தலைகுனியமாட்டேன்’’ என்று சொல்லக்கூடிய துணிச்சல் உள்ள, ஆற்றல் உள்ள முதலமைச்சர், நாளும் சாதனைகளுக்குமேல் சாதனைகளைச் செய்து, உலகளாகவிய அளவிற்குப் புகழைப் பெற்றிருக்கக்கூடிய ஒரு முதலமைச்சராக இன்றைக்கு இருக்கின்ற காரணத்தினால்தான், அவருக்குத் தேர்தல் வெற்றி என்பதும், திட்டமிட்ட ஒன்றாக, அவரது கடுமையான உழைப்பிற்கு, மக்கள் தரக்கூடிய பரிசாக நிச்சயம் அமையும்.
செய்தியாளர்: சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்ட காலகட்டத்தில், தென்மாநிலங்களைச் சேர்ந்த பல தலைவர்கள் இயக்கத்தில் இருந்தார்கள். அந்த இயக்கம் வலுவாக தமிழ்நாட்டில் வேரூன்றி இருந்தது. ஆனால், கருநாடகா, ஆந்திரா, கேரளாவில் வேரூன்றி இருக்கவில்லை?
கிளைக் கழகங்கள் இல்லாமல் இருக்கலாம்; ஆனால், அவருடைய கொள்கைகள் அங்கே வேரூன்றி இருக்கின்றன!
தமிழர் தலைவர்: அதற்கு என்ன காரணம் என்றால், தந்தை பெரியாரைப் பொறுத்தவரையில், தமிழ்நாட்டைப் போல பிரச்சாரக் களத்தை, கருநாடகம் போன்ற மாநிலங்களில் நடத்த வாய்ப்பில்லாமல் இருந்தது.
அதன் காரணமாக, தமிழ்நாட்டை முதலில் பக்குவப்படுத்த முடிந்தது. ஆனால், பெரியாருடைய கருத்தாக்கங்கள் நேரிடையாக அங்கெல்லாம் கிளைக் கழகங்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவருடைய கொள்கைகள் அங்கே வேரூன்றி இருக்கின்றன.
அதற்கு உதாரணம் சொல்லவேண்டுமானால், கருநாடக மாநிலத்தில் உள்ள மடத்தில் இருக்கின்ற சாமியார்கள்கூட பெரியாருடைய கொள்கைகளைத்தான் பேசுகிறார்கள்.
மூடநம்பிக்கையை எதிர்த்துப் பேசுவதற்குத் தெளிவும் வேண்டும்; துணிவும் வேண்டும்!
கருநாடக மாநில அரசியல் மிகவும் சுவையானதாகும். யார் வேண்டுமானாலும் வரலாம்; யார் வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், மூடநம்பிக்கையை எதிர்த்து அவர்கள் பேசுவதற்கு, முதலில் தெளிவும் வேண்டும்; துணிவும் வேண்டும்.
இந்த இரண்டும் போதிய அளவிற்கு ஆரம்பக் காலகட்டத்தில் கருநாடகத்தில் இல்லை. சுயமரியாதை இயக்கம் ஒரு பேரங்காடி போன்றதாகும். அதில், யாருக்கு எது பிடிக்குமோ, அதை மட்டும் எடுத்துக் கொள்வார்கள்.
கருநாடக மாநிலம், சமூகநீதியில் நம்பர் ஒன்.
அதேபோன்று, ஆந்திராவில் இன்னும் தெளிவாக வில்லை. கேரளாவில், அங்கே கம்யூனிசத்திற்கு அடிப்படை இருந்தாலும்கூட, இப்போதுதான் அங்கே உள்ள மக்களுக்குத் தெளிவு ஏற்படுகிறது.
நாராயண குரு இயக்கத்தில் பல்பு என்ற ஒருவர் இருந்தார், அவர் மூலமாக பெரிய வாய்ப்புகள் அங்கே வந்தன.
முதலில் தமிழ்நாடு சரியாக இருக்கவேண்டும்!
தந்தை பெரியாரைப் பொறுத்தவரையில், முதலில் தமிழ்நாடு சரியாக இருக்கவேண்டும். தமிழ்நாட்டை ஒரு தலைமை நிலையம்போன்று உருவாக்கிக் கொள்ள வேண்டும். பிறகு உலகம் முழுவதும் அது பரவும் என்கிற அடிப்படையில்தான். ஆஸ்திரேலியாவில் பெரியார் – அம்பேத்கர் வாசகர் வட்டம் இருக்கிறது; அமெரிக்காவில், பெரியார் பன்னாட்டமைப்பு இருக்கிறது. அய்ரோப்பாவில் இருக்கிறது. ஜப்பானிலும் அண்மையில் அது பரவியிருக்கிறது.
ஆகவே, உலகளாவிய அளவிற்கு அந்தக் கொள்கை தானாகப் பரவுகிறது. சுயமரியாதை இயக்கத்தின் தனித்தன்மை என்னவென்றால், அது சமூக விஞ்ஞானம்.
சில இடங்களில், விஞ்ஞானிகளே மூடநம்பிக்கை உள்ளவர்களாக இருப்பார்கள். அதுபோன்று இல்லாமல், சமூக விஞ்ஞானம் பரவுவது என்பது காலத்தின் கட்டாயமாகும்.
தமிழ்நாட்டில் அடிக்கடி செய்யப்படுகின்ற பிரச்சாரம்போல, இங்கே பிரச்சாரம் நடைபெறுவதில்லை. எப்போதுதாவதுதான் நாங்கள் இங்கே வருகிறோம்.
தமிழ்நாட்டில் செய்யப்படுகின்ற பிரச்சாரங்கள் போல, இங்கேயும் செய்யப்படுமேயானால், இங்கேயும் அந்தக் கொள்கை முழு அளவிற்குப் பரவும்.
ரவிவர்ம குமார் போன்றவர்கள்
இங்கே இருக்கிறார்கள்!
அதேநேரத்தில், இங்கே சுயமரியாதைத் திரு மணங்களை நடத்தி வைக்கக்கூடியவர்களான ரவிவர்ம குமார் போன்றவர்கள் இருக்கிறார்கள்.
சுயமரியாதை இயக்கம் என்ற பெயர் அதில் இருக்காது. ஆனால், சுயமரியாதை இயக்கக் கொள்கைகள் இங்கே வெவ்வேறு வடிவில், வெவ்வேறு பெயரில் இருக்கிறது.
ஆகவேதான், சுயமரியாதை இயக்கத் தத்துவங்களும், தாத்பரியங்களும் இங்கே பரவியிருக்கின்றன.
தடம்மாறாமல் இருக்கக்கூடிய இயக்கம் என்றால், அது திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும்தான்!
செய்தியாளர்: வலுவான அமைப்பு இங்கே இல்லையா?
தமிழர் தலைவர்: கருநாடக திராவிடர் கழகம் என்ற அமைப்பு இங்கே இருக்கிறது. அது பெங்களூருவிலும், தங்கவயலிலும் சிறப்பாக இருக்கிறது. அடுத்த பகுதிகளுக்கும் போக வேண்டும்.
அதேபோன்று, மகாராட்டிராவில், ஜோதிபாபூலே, சாகுமகராஜ், சாவித்திரி பாபூலே போன்றவர்கள் மிக வலுவாக இருந்தார்கள்.
அந்தக் கருத்தாக்கம், அம்பேத்கர் வந்த பிறகு, வலிமையாக இருக்கக்கூடிய அளவிற்கு வந்தார்கள். ஆனாலும், அதிலும் பல பிரிவுகள் ஏற்பட்டன.
அரசியலுக்குச் சென்று, தடம்மாறாமல் இருக்கக்கூடிய இயக்கம் என்றால், அது திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும்தான்.
மற்ற அமைப்புகளை எடுத்துக்கொண்டால், அரசியலுக்குப் போகிறோம் என்று சொல்லி, ஜோதி பாபூலே இயக்கத்தில் ஒரு பகுதி வந்தது.
பகுஜன் சமாஜ் அமைப்பைத் தொடங்கியவர் யார் தெரியுமா?
கன்ஷிராம் அவர்கள். அந்த அமைப்பில் மாயாவதி இருந்தார். பெரியார் – அம்பேத்கரை அவர் ஒன்றாக நிறுத்தினார் கன்ஷிராம் அவர்கள். பகுஜன் சமாஜ் என்று அந்த அமைப்பிற்குப் பெயர் வைத்தார்.
பகுஜன் சமாஜ் அமைப்பை சர்வஜன் சமாஜ் மாற்றியதால் வலுவிழந்தது!
பகுஜன் என்றால், ஒடுக்கப்பட்ட மக்கள். நாம் வெகு மக்கள் என்று சொல்கிறோம் அல்லவா, அதைத்தான் பகுஜன் சமாஜ் என்று பெயர் வைத்தார்.
உண்மையாக யார் பாதிக்கப்பட்டார்களோ அவர்களுக்குத்தான் உரிமை என்று சொன்னார்கள். ஆனால், மாயாவதி அவர்கள், பார்ப்பனர்களையும் அந்த அமைப்பில் சேர்த்து, ‘சர்வஜன் சமாஜ்’ என்று நிலைப்பாட்டை மாற்றினார். பார்ப்பனர்களை ஆலோ சகர்களாக அமர்த்தினார். அதனால், அந்த இயக்கமே இன்றைக்கு வலுவிழந்து போய்விட்டது.
கன்ஷிராம் அவர்கள், ‘பெரியார் மேளா’வை நடத்தி னார், அதற்கு எங்களையெல்லாம் அழைத்திருந்தார்.
எங்கெங்கே ஆரியம், ஆரியக் கலாச்சாரம் நுழைகிறதோ, அங்கெல்லாம்
பெரியார் தேவைப்படுகிறார்!
ஆனால், அதற்குப் பிறகு மாயாவதி, அதை எல்லாவற்றையும் கைவிட்டுவிட்டார். காரணம் என்னவென்றால், ஆரியம் அங்கே உள்ளே புகுந்தது. அங்கே இன்னமும் அதிகம் பெரியார் தேவை!
எனவே, எங்கெங்கே ஆரியம் உள்ளே நுழைகிறதோ, ஆரியக் கலாச்சாரம் உள்ளே நுழைகிறதோ, அங்கெல்லாம் பெரியார் தேவைப்படுகிறார்.
காலத்தைக் கருதி, இது உலகளாவிய தத்துவமாக வரும்.
மண்டல் கமிஷன் வந்தபோது, தந்தை பெரியாருடைய சமூகநீதியை எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவிற்கு வந்தார்கள்.
பெரியாரைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்றால், நிறைய பேர், மூடநம்பிக்கையிலும், பக்தியிலும் இருக்கின்ற காரணத்தினால், மிக எளிதாக கடவுள் நம்பிக்கை என்று சொல்லி, அந்த மக்களைத் திசை திருப்பி விடுகிறார்கள்.
சுயமரியாதை இயக்கம் என்பது அறிவியல்!
ஆனால், சமூகநீதி என்று வரும்போது, பெரி யாரால்தான் இட ஒதுக்கீடு வந்தது; அதனால்தான் படிப்பு வந்தது. படிப்பு வந்ததினால்தான் பதவி வந்தது என்று நினைக்கக்கூடிய அளவிற்கு மிகத் தெளிவாக இருக்கிறார்கள். இந்த இயக்கம் என்பது அறிவியல்.
சில இடங்களில் அறிவியல் மனப்பான்மை வராது. பல இடங்களில், அறிவியல் தானாகப் பரவும்.
– இவ்வாறு செய்தியாளர்களுக்குத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேட்டியளித்தார்.
