சென்னை, பிப். 23- மகாராஷ்டிராவில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட 5 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்துள்ள பாஜக அரசின் நடவடிக்கைக்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
முந்தைய காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மராத்தியர்களுக்கு 16 சதவீதமும், முஸ்லிம்களுக்கு 5 சதவீதமும் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. தற்போது பதவியில் உள்ள பாஜக அரசு, மராத்தியர்களுக்கான இடஒதுக்கீட்டைத் தக்கவைத்துக்கொண்டு, முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை மட்டும் முற்றாக ரத்து செய்துள்ளது.
இது சிறுபான்மை யினருக்கு எதிரான திட்டமிட்ட பாகுபாடு அரசியலாகும். முஸ்லிம்களுக்கான இந்த இடஒதுக்கீடு மும்பை உயர் நீதிமன்றத்தால் சட்டப்பூர்வமாக உறுதி செய்யப்பட்ட ஒன்று. அப்படியிருந்தும் அதனைச் செயல்படுத்தத் தவறிய மாநில அரசு, தற்போது அதை நீக்கியிருப்பது சட்டத்தையும் நீதித்துறையையும் கேலிக்கூத்தாக்கும் செயலாகும் என எம்.எச்.ஜவாஹிருல்லா விமர்சித்துள்ளார்.
“இடஒதுக்கீடு என்பது அரசியல் சலுகை அல்ல; அது பின்தங்கிய சமூகங்களைச் சமநிலைக்குக் கொண்டு வரும் சமூகநீதி கருவி. முஸ்லிம் சமூகத்தைக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பிலிருந்து அந்நியப்படுத்தும் இந்த நடவடிக்கை, அரசியலமைப்புச் சாசனத்தின் அடிப்படை மதிப்புகளுக்கு விடுக்கப்பட்ட நேரடிச் சவாலாகும்.” இந்த முடிவை ‘அரசியல் பழிவாங்கல்’ எனக் குறிப்பிட்டுள்ள அவர், முஸ்லிம்களுக்கான 5 சதவீத இடஒதுக்கீட்டை மகாராட்டிர அரசு உடனடியாக மீண்டும் நடை முறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
