சென்னை, பிப். 22– முதுபெரும் பெரியாரியல் ஆளுமை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பன்முகப் பேராளு மையை ஆராய்ந்து வெளிப் படுத்தும் வண்ணம் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்மொழித் துறை தேசியக் கருத்தரங்கம் ஒன்றை வரும் பிப்ரவரி 24ஆம் தேதி முழுநாள் நிகழ்வாக நடத்துகின்றது.
இந்தத் தேசியக் கருத்தரங்கம் சென்னைப் பல்கலைக்கழக மெரினா வளாகத்தில் உள்ள பவளவிழாக் கலையரங்கத்தில் காலை 10 மணிக்குத் தொடங்குகிறது.
தமிழுலகத்தின் முக்கியமான அறிஞர்களும், தமிழ்ச் சமூகத்தின் முதன்மையான அறிஞர்கள், தலைவர்கள் முதலியோரும் இந்தத் தேசியக் கருத்தரங்கில் பங்கேற்றுத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் பன்முகப் பரிமாணங்களை எடுத்துரைக்க உள்ளனர்.
கருத்தரங்கின் முதல் அமர்விற்குத் தமிழ்நாடு அரசின் திட்டக்குழுவின் முன்னைத் தலைவர் பேராசிரியர் மு.நாகநாதன் தலைமை தாங்குகின்றார். இந்த அமர்வில் தமிழர் தலைவர் அவர்களின் “எழுத் தாளர்” என்னும் பரிமாணத்தைக் குறித்துப் புதுதில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகச் சிறப்புநிலைத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் இரா. அறவேந்தன் அவர்களும், “சொற்பொழிவாளர்” என்னும் பரிமாணத்தைக் குறித்துத் திராவிடர் கழகத் துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே.மெ. மதிவதனி அவர்களும், “சமூகநீதிப் போராளி” என்னும் பரிமாணத்தைக் குறித்துச் சிங்காரவேலரியல் அறிஞர் புலவர் பா. வீரமணி அவர்களும் உரைகளை வழங்குகின்றனர்.
முதல் அமர்வினை அடுத்து நண்பகல் 12 மணி அளவில் “மகுட அரங்கு” என்னும் சிறப் பமர்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் “எனது இலட்சியப் பயணம்” என்னும் தலைப்பில் சிறப்புப் பேருரையினை நிகழ்த்த உள்ளார்கள். இந்த நிகழ்வுக்குத் தமிழ்மொழித் துறையின் தலைவர் பேராசிரியர் ய. மணிகண்டன் தலைமை தாங்கித் தலைமையுரை வழங்க உள்ளார்.
பிற்பகல் 2:30 மணிக்கு கருத்தரங்கின் இரண்டாம் அமர்வு நடைபெற உள்ளது. இந்த அமர்விற்குத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் ம. இராசேந்திரன் அவர்கள் தலைமை தாங்குகின்றார்.
இந்த அமர்வில் தமிழர் தலைவர் அவர்களின் “ஆசிரியர்” என்னும் பரிமாணத்தைக் குறித்துத் திராவிடர் கழகத்தின் பரப்புரைச் செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி அவர்களும், “தலைவர்” என்னும் பரிமாணத்தைக் குறித்துக் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களும், தமிழர் தலைவர் அவர்களின் “பன்முகப் பேராளுமை”யைக் குறித்துப் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்களும் உரைகளை வழங்கு கின்றனர்.
இந்தத் தேசியக் கருத்தரங்கின் தொடக்கத்தில் வரவேற்புரையைத் தமிழ்மொழித் துறையின் உதவிப் பேராசிரியர் முனைவர் வே. நிர்மலர் செல்வி ஆற்றுகின்றார்.
தமிழ்நாட்டின் அன்னைப் பல்கலைக்கழகமாகிய சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டிலேயே முதன்முறையாகப் பெரியாரியலின் பேராளுமையாகிய ஆசிரியர் கி. வீரமணி அவர்களைக் குறித்த தேசியக் கருத்தரங்கத்தினை நடத்துவது குறிப்பிடத்தக்கதாகும்.
