சென்னை, பிப். 16- 2026-2027 நிதியாண்டுக்கான தமிழ்நாடு இடைக்கால நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 17 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித் துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டப் பேரவைத் தேர்தல் விரைவில் நிகழவுள்ளதையடுத்து தற்போதைய திமுக ஆட்சியின் இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.இது தொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறு கூட்ட அரங்கில் அவைத்தலைவர் மு.அப்பாவு நேற்று (15.2.2026) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 26(1)-இன் கீழ் தமிழ்நாடு சட்டப் பேரவையின் அடுத்த கூட்டத்தை 17.2.2026ஆம் தேதி காலை 9.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் கூட்டியுள்ளேன்.
இதில் 2026-2027ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை காலை 9.30 மணிக்கு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேரவைக்கு அளிப்பார். மேலும் வருகிற 20ஆம் தேதி அன்று தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 193(1)-இன் கீழ் 2026-2027ஆம் ஆண்டுக்கான முன்பண மானிய கோரிக்கைகளும், பேரவை விதி 189(1)-இன் கீழ் 2025-2026ஆம் ஆண்டிற்கான கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகள் (இறுதி) பேரவைக்கு அளிக்கப்படும். இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் எத்தனை நாள்கள் நடைபெறும் என்பதைச் சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கும் நாளுக்கு முந்தைய நாள் அதாவது 16.2.2026ஆம் தேதி அலுவல் ஆய்வுக் குழு தலைமையில் கூட்டப்பட்டு முடிவு செய்யப்படும்.சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வது தொடர்பான பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை சட்டப்பேரவை கூடிய நாள் முதல் என்ன பேசினார்கள் என்பது தொடர்பான விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனை உலகெங்கிலும் இருந்து பார்த்துத் தெரிந்துகொள்ளும் வகையில் டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
தற்போது சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் சிறப்புத் தீர்மானங்கள் மானிய கோரிக்கைகள் அனைத்தும் நேரலை செய்யப்பட்டு வருகிறது. கூட்டத்தொடர் முழுவதையும் நேரலை செய்ய வேண்டும் என்பதே முதலமைச்சரின் எண்ணமாக இருக்கிறது. கூட்டத்தொடரில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தையும் நேரடியாக ஒளிபரப்பு செய்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
