மும்பை, பிப்.8 மராட்டியத்தில் இலவசமாக இயங்கி வந்த அரசு மருத்துவமனைகளில் இனி கட்ட ணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
இது குறித்து மராட்டிய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி,”மராட்டிய மாநில அரசு மருத்துவ மனைகளில் சாமானிய மக்கள் சிகிச்சை பெற கட்டணம் செலுத்த வேண்டும். மராட்டிய அரசு மருத்துவமனைகளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு ஊழியர்கள் இலவசமாக சிகிச்சை பெறலாம். மருத்துவப் பயனாளிகள் சேர்க்கைக்கு ஒரு நாளைக்கு ரூ.10 செலுத்த வேண்டும். புற மருத்துவப் பயனாளிகள் சிகிச்சைப் பிரிவில் பதிவு செய்வதற்கு ரூ.5 கட்டணம் செலுத்த வேண்டும்.
ஹீமோகுளோபின், டிஎல்சி உள்ளிட்ட இரத்தப் பரிசோதனைகள் ஒவ்வொன்றுக்கும் ரூ.15 கட்டணம் செலுத்த வேண்டும். சிறுநீரகங்கள், சிறுநீர்ப்பை போன்றவற்றை பரிசோதிக்க உதவும் இன்ட்ராவெனஸ் பைலோகிராம் எக்ஸ்ரே ஸ்கேனுக்கு ரூ.100 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிடி ஸ்கேன்களுக்குத் தலைப் பகுதியை ஸ்கேன் எடுக்க ரூ. 300 ஆகவும், முதுகுத்தண்டு, கழுத்து மற்றும் மார்பு பகுதிகளை ஸ்கேன் செய்ய ரூ. 400 ஆகவும் கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. எம்ஆர்அய் ஸ்கேன்களுக்கு ரூ. 1,600 கட்டணம் வசூலிக்கப்படும். மயக்க மருந்து கொடுத்து செய்யப்படும் அறுவை சிகிச்சைகள், அவற்றின் சிக்கலான தன்மையைப் பொறுத்து, ரூ. 60 முதல் ரூ. 160 வரையிலான கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
கர்ப்பிணிப் பெண்களுக்கு முதல் மகப்பேறு இலவசமாக இருக்கும் நிலையில், இரண்டாவது மகப்பேறுக்கு 50 ரூபாயும், மூன்றாவது மற்றும் அதற்குப் பிந்தைய மகப்பேறுகளுக்கு தலா 250 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும். அரசு செவிலியர் இல்லங்களில், தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு (அய்.சி.யு.) ஒரு நாளைக்கு 100 ரூபாயும், ஹீமோடையாலிசிஸ் சிகிச்சையின் ஒரு அமர்வுக்கு 150 ரூபாயும், குளிரூட்டப்பட்ட அறைகளுக்கு ஒரு நாளைக்கு 150 ரூபாயும், குளிரூட்டப்படாத அறைகளுக்கு 75 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஆம்புலன்ஸ் சேவைகளுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ. 5 கட்டணம் வசூலிக்கப்படும்; எட்டு மணி நேரத்திற்குப் பிறகு, ஆம்புலன்ஸ் காத்திருப்புக் கட்டணமாக மணிக்கு ரூ. 30 வசூலிக்கப்படும். மூட்டு மாற்று அறுவை சிகிச் சைக்கு ரூ. 40,000 கட்டணம் வசூலிக்கப்படும், “இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
