இந்நாள் – அந்நாள்

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தந்தை பெரியார் நீதிக்கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் (29.12.1938)

1938 ஆம் ஆண்டு இதே நாளில் (டிசம்பர் 29) தான் தந்தை பெரியார் நீதிக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதுவும் எந்த நிலையில்?

தந்தை பெரியார் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் காரணமாக சிறையில் இருந்த காலகட்டத்தில் தென்னிந்திய நலவுரிமைச் சங்கமான நீதிக்கட்சியின் கூட்டத்தில் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1938 டிசம்பர் 29, 30, 31 ஆகிய நாள்களில் சென்னையில் நீதிக்கட்சியின் 14 ஆவது மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் சுமார் 50,000 பேர் கலந்து கொண்டனர்.

தந்தை பெரியார் அவர்களின் உருவச் சிலையைத் தேரில் வைத்து சிறையில் உறைவதுபோல ஒப்பனை செய்து. ஊர்வலமாக மாநாட்டுப் பந்தலுக்குக் கொண்டு வரப்பட்டது. தந்தை பெரியார் அவர்களின் உருவம் நாற்காலியில் வைக்கப்பட்டு இருந்தது.

இந்த ஊர்வலம் சரியாக 11-30 மணிக்கு வரதராஜபுரத்திலிருந்து 200 தொண்டர்களால் இழுத்துச்செல்லப்பட்டது. பல்லாயிரக் கணக்கானோர் புடைசூழ தோழர் சுந்தரராவ் நாயுடு அவர்கள் தலைமையில் ஊர்வலம் புறப்பட்டு எழும்பூர், புதுப்பேட்டை சிந்தாதிரிப்பேட்டை, அண்ணாசாலை  வழியாக ஊர்வலமாக பெரியார் நகரை அடைந்தது.

மற்றொரு ஊர்வலம் பெத்துநாயக்கன் பேட்டையிலிருந்து குமாரராஜா எம்.ஏ. முத்தைய செட்டியார் அவர்கள் தலைமையில் புறப்பட்டு ஊர் வலமாக ஆயிரக்கணக்கான மக்கள் பின்தொடர தங்கசாலை தெரு சென்ட்ரல் நிலைய சாலை வழியாக பெரியார் நகரை பகல் 3 மணிக்கு வந்து சேர்ந்தது.

தமிழ்,கேரளம் முதலிய நாடுகளிலிருந்து மாநாட்டிற்கு வருகை தந்த தலைவர்களையும், பிரதிநிதிகளையும், வரவேற்று ரால்பகதூர் துரைசாமி முதலியார் தமது வரவேற்புப் பிரசங்கத்தை வாசித்தார்.

மாநாட்டுத் தலைவர் பெரியார் வெ. ராமசாமி அவர்கள் தலைமைப் பிரசங்கத்தை சர்.ஏ.டி பன்னீர்செல்வம் படித்தார். பந்தலில் ஒலிப் பெருக்கி  வைக்கப்பட்டிருக்கிறது. பந்தலுக்கு வெளியில் ஏராளமான மக்கள் நின்றுகொண்டு உரைகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

தந்தை பெரியார் அவர்களைப் பொறுத்தவரை எல்லாப் பொறுப்புகளும் (பதவிகள் அல்ல) அவரைத் தேடி சென்றுள்ளனவே தவிர. அவர் அவற்றை நோக்கிக் காலடி எடுத்து வைத்தவர் அல்லர். அவர் ஏற்ற பொறுப்புகள் அவரால் பெருமை பெற்றுக் குலுங்கின என்பதுதான் வரலாறு.

மாநாட்டின் தலைவராக தந்தை பெரியார் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், தந்தை பெரியாரோ பெல்லாரி சிறைக் கொட்டடியில் இருக்கிறார். 50 ஆயிரம் மக்கள் மாநாட்டில் கூடியிருந்தனர் மாநாட்டுக்குத் தலைமை தாங்கவேண்டிய தந்தை பெரியார் சிறையில் இருக்கிறாரே என்ற உணர்ச்சி எரிமலையாகத் தகித்துக் கொண்டிருந்தது தமிழர்கள் மத்தியில் மாநாட்டுக்குத் தலைவராக சர் ஏடி பன்னீர்செல்வம் அவர்கள் அறிவிக்கப்பட்டார்.

தலைமையேற்ற ஏ.டி. பன்னீர்செல்வம் மாநாட்டுத் தலைவருக்குப் போடப்பட்ட மாலையை நாற்காலியில் வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் அவர்களின் உருவத்திற்கு அணிவித்தார். தம் தோளுக்குப் போட்ட மாலையைத் தந்தை பெரியாரின் தாளுக்கு அணிவிக்கிறேன் என்று கூற பேச முடியாமல் நா தழு தழுத்தார். தந்தை பெரியார் எழுதியிருந்த மாநாட்டுத் தலைமை உரையை ஏ.டி. பன்னீர்செல்வம் படித்தார்.

மாநாட்டில் கூடியிருந்த 50 ஆயிரம் மக்களும் ஒரு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.

“எங்கள் மாபெரும் தலைவரே! உங்கள் உடல் சிறைப்படுத்தப் பட்டிருந்தாலும், உங்கள் வீரத் திருவுருவத்தின் முன் நாங்கள் அனைவரும் எழுந்து நின்று ஒன்றுபட்டிருக்கிறோம். உங்கள் தலைமையில் நாங்கள் அனைவரும் சொல்வழி நின்று. கடைசி வரை நோக்கம் நிறைவேற ஓயாது உழைத்து வெற்றி பெறுவோம் என்று உறுதி கூறுகிறோம்.'” தமிழில் மட்டுமல்ல. தெலுங்கிலும் இவ்வாறு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இதுபோன்ற சிறப்புகள் எல்லாம் உலக வரலாற்றில் தந்தை பெரியாரை நோக்கி பாய்ந்து வந்ததுபோல வேறு யாருக்காவது வந்ததுண்டா?

ஆம் உலகில் ‘பெரியார்’ ஒருவரே!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *