மும்பை, அக்.8 ‘மகாராட்டிர பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக பாஜக, தேசியவாத காங்கிரஸில் இருந்து பல தலைவா்கள் எங்கள் கட்சியில் சேரலாம்’ என்று தேசியவாத காங்கிரஸ் (பவார்) தலைவா் சரத்பவார் தெரிவித்தார்.
மகாராட்டிரத்தில் வரும் நவம்பா் மாதம் பேரவைத் தோ்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது. இந்நிலையில், மாநில மேனாள் அமைச்சரும் பாஜக பிரமுகருமான ஹா்ஷ்வா்தன் பாட்டீல் தேசியவாத காங்கிரஸ் (பவார்) கட்சியில் நேற்று (7.102.2024) இணைந்தார்.
இதையொட்டி, இண்டாபூா் நகரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சரத் பவார், ‘வேளாண் சீா்திருத்தங்கள் மற்றும் கிராமப்புற மேம்பாட்டில் ஹா்ஷ்வா்தனின் அா்ப்பணிப்புக்கு எனது பாராட்டுகள். சமூகப் பணியில் அவா், அவரது தந்தை பாராமதி எம்.பி. சங்கரராவ் பாட்டீல் ஆகியோரின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.
நாங்கள் வெவ்வேறு கட்சிகளில் பய ணித்தாலும் மகாராட்டிர விவசாயி களின் நலன் சார்ந்த விவகாரங்களில் அனை வரும் ஒன்றிணைந்து பணியாற்றினோம்.
மாநிலத்தின் புதிய வேளாண் சீா்திருத்த முன்னெடுப்புகளுக்கு தலை மையாக ஹா்ஷ்வா்தன் பாட்டீல் எப்போதும் முன்னிறுத்தப்பட்டுள்ளார். இந்த முடிவு மகாராட்டிரம் முழுவதும் உள்ள கரும்பு விவசாயிகளுக்கும் நாட் டின் வேளாண் துறைக்கும் மிகவும் முக்கியமானதாகும். வரும் பேரவைத் தோ்தலில் பாட்டீலை வெற்றிப் பெற செய்ய வேண்டும்.
மேனாள் மாநில மேலவைத் தலைவா் ராம்ராஜே நாயக் நிம்பால்கரும் நமது கட்சியில் சேர விரும்புகிறார். இதையொட்டி, வரும் 14-ஆம் தேதி அவரது சொந்த ஊரான பல்தானுக்கு வருகை தருமாறு தொலைபேசியில் எனக்கு அழைப்பு விடுத்துள்ளார். பேரவைத் தோ்தலுக்கு முன்பு பாஜக, தேசியவாத காங்கிரஸில் இருந்து மேலும் பல தலைவா்கள் நமது கட்சியில் சேரலாம்’ என்றார்.
தேசியவாத காங்கிரஸில் பிளவு ஏற்படுத்தி, ஆளும் பாஜக-சிவசேனை கூட்டணியில் இணைந்து மகாராட்டிர துணை முதலமைச்சரானார் அஜீத் பவார். பெரும்பாலான மக்கள் பிரதிநிதிகள், நிர்வாகிகள் அவருடன் இருந்ததால், கட்சியின் அதிகாரபூா்வ பெயா் மற்றும் சின்னம் அவரது அணிக்கு ஒதுக்கப்பட்டது. எனினும், மக்களவைத் தோ்தலில் போட்டியிட்ட 4 தொகுதிகளில் மூன்றில் அவரது அணி தோல்வியைத் தழுவி, பெரும் பின்னடைவைச் சந்தித்தது.