ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் உடல் நலம் என்பது முக்கியம் என்று அனைவரும் உணருவர்.
இந்த ‘உடல் நலம் பாதிப்பு’ என்பது நம்மில் பலரும் உடல் உறுப்புகள் பாதிப்புக் காரணமாகவோ – நோய் காரணமாகவோ அல்லது எதிர்பாராத விபத்து, தாங்கொணாத் துயரம் – துக்கம் மிகுதி காரணமாகவோ ஏற்படலாம்.
உடலில் நோய்கள் – பல வகை, பல முறைகளில் தாக்கும்.
2021 நமது தலைமுறையில் ஏற்பட்ட கொடுமையான அனுபவம் கோவிட் – 19 என்ற தொற்று.
உலகத்தின் பெரிய பெரிய நாடுகளில்கூட பல்லாயிரக்கணக்கான உயிர்கள் மறைந்தன. அடக்கம் செய்வதற்கோ, எரியூட்டுவதற்கோ கூட மயானங்களில் இடமில்லை.
நெருங்கிய உறவுகள், உற்ற நண்பர்கள்கூட, இறுதி மரியாதைசெலுத்த இயலாதபடி, இறுதி நிகழ்ச்சிகள் (இறுதி நிகழ்ச்சியே இல்லாமல் அடக்கம்) நடந்தன. கோவிட் 19 – மனிதநேயத்திற்கே கொடுஞ் சவாலாக வந்து மனித குலத்தை சோதனை செய்தது.
ஆனால் மனிதனின் ஆற்றல் வாய்ந்த பகுத்தறிவு மூலம் இதற்கு முற்றுப் புள்ளியாக மருந்துகள், மருத்துவ சிகிச்சை முறைகள் கண்டறியப்பட்டன.
அதில் ஒரு முக்கியப் பங்கு – உடலின் நோய் எதிர்ப்பாற்றலைப் பெருக்கி, நோய்க் கிருமிகளோடு மூர்க்கத் தன்மையுடன் போராடி வெற்றிகண்டு உடல் நலம் வளர்ந்திடும் என்ற அடிப்படையில் சிகிச்சை முறைகள் அமைந்தன.
இதிலிருந்து நாம் கற்றுக்கொள்வது: நோய்க்கு மருந்து சாப்பிடுவதைவிட முக்கியம் ‘தொற்று நோய்க் கிருமிகள் உள்ளே நுழையும் முன்பே தடுப்பாற்றலை வளர்த்துக் கொள்ளுதல்’ என்ற முக்கிய பாடமாகும்.
உடல் நலத்தின் மூலக் கோப்பு எதில்? உடலின் ‘Metabolism’ என்ற உடற்கூறு அம்சங்களை நாளும் பாதுகாத்து, சரியான முறையில் நடந்துகொள்ளும் முறை முக்கியம்.
அவயங்களுக்கு இரத்த ஓட்டமும், முதன்மைக் காப்பும் அந்த ‘மெட்டபாலிசம்’ என்பதன் மூலம்தான் கிடைக்கும்.
உடல்நோய் என்பது உள்ளத்தில் ஏற்படும் மன அழுத்தம், மன இறுக்கம் (Stress) போன்றவற்றினால் மன வளப் பாதிப்பு ஏற்படுவதாகும் – அது உடல் உறுப்பு நோயை விட மிகவும் ஆபத்தானது அல்லவா?
‘A Sound Mind in a Sound Body’ என்ற ஆங்கில சொற்றொடர் இக்கருத்தை தெளிவாக எவர்க்கும் உணர்த்தும்.
‘ஆரோக்கியமான மனது’, ‘ஆரோக்கியமான உடல்’ இந்த இரண்டும் கலந்ததே முழுமையான உடல் நலம் ஆகும்.
எனவே உடலை நோய் பாதிப்புக்கு ஆளாக்கிடு வதும், நம்மை மருத்துவப் பயனாளிகளாக ( Patients) ஆக்கி விடுவதும் தொற்று நோய்த் தாக்குதலால்தான் என்பதை அனைவரும் புரிந்துகொள்ளலாம்.
மனதை (Mind) நோயற்று வைத்துக் கொண்டால் அதை விடச் சிறப்பான சிகிச்சை வேறு கிடையாது என்பதைத்தான் நான் படித்துப் பயன் பெறும் பல மருத்துவ அறிஞர்கள், மனநல மருத்துவ நிபுணர்கள் எழுதும் நூல்களிலிருந்து அறிய முடிகிறது!
நோய் வந்தவுடனே பலரும் பதற்றமடையும் மன நிலைக்குச் சென்று,
‘‘இதோடு நாம் சரி,
இனிமேல் நமக்கு ஏது வாழ்வு’’
என்ற நம்பிக்கையற்ற தன்மையின் உச்சாணிக் கொம்பில் ஏறிவிடக் கூடாது!
அத்தகைய ‘கோவிட் – 19’ காலத்தை, பிறகு அதன் தீவிரத் தன்மை கொண்ட பல்வேறு வகை கோவிட் ‘அவதாரங்களையும்’ பார்த்து மீண்டிருக்கிறோம் என்ற தன்னம்பிக்கையோடு நோயோடு போராட – ‘தன் நம்பிக்கையை நன் நம்பிக்கைத் துடுப்பாக’க் கருதி, வாழ்க்கைப் படகு கவிழாமல் கரையேறி, கைதட்டி மகிழும் மனத் துணிவுதான் நோய் போக்கும் ஒரு தலைசிறந்த மருந்து.
இந்தத் துணிவு என்பதன் விளைவு என்ன? மருத்துவர்கள் கருத்துப்படி– நோய்த் தடுப்பதற்குப் பேருதவியாக மருத்துவப் பயனாளிகளின் உள்ளத்தில்
‘‘நாம் விரைவில் நோய் தீர்ந்து வீட்டிற்குச் சென்று
முன்புபோல், வாழ்க்கையைத் தொடவோம்
என்ற தைரியம்தான் நோயை
விரைந்து குணப்படுத்துகிறது’’ என்பார்கள்.
எதிர்ப் படையை போர்களத்தில் சந்தித்துப் போராடும் உண்மையான போர் வீரன், ‘இந்தப் போரில் எப்படியும் வெற்றி பெற்றே தீருவோம்’ என்ற மன நிலையில் உள்ளாரே அதே மன உறுதியும், தன்மையும் மருத்துவப் பயனாளிக்குவர வேண்டும்.
103 வயதிலும் எப்படி மகிழ்ச்சியுடன் கடமையாற்றுவது என்பதற்கு ஒரு முதிர்ச்சி – முதுமை அடைந்த டாக்டர் எழுதிய நூலைப் படித்தேன்.
அதுபோல 104 வயதிலும் தெளிவுடன் இருந்த பெரியார் அறக்கட்டளைத் தலைவர் சுயமரியாதைச் சுடரொளி அய்யா க. சண்முகம் அவர்கள் வாழ்க்கையையும் கண்டேன்.
