கமேனி, 120 பள்ளிக் குழந்தைகள் படுகொலைக்கு தொடர்பாக அமெரிக்க, அய்ரோப்பிய நீதிமன்றங்களில் ஈரான் வழக்கு
தெஹ்ரான், நவ. 23- அமெரிக்கத் தாக்குதல்களில், ஈரானிய தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி படுகொலை மற்றும் மினாப் பள்ளிக்கூடத்தின் மீதான தாக்குதல் தொடர்பாக அமெரிக்க மற்றும் அய்ரோப்பிய நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்துள்ளதாக, ஈரான் அறிவித்துள்ளது.
- கமேனி, 120 பள்ளிக் குழந்தைகள் படுகொலைக்கு தொடர்பாக அமெரிக்க, அய்ரோப்பிய நீதிமன்றங்களில் ஈரான் வழக்கு
- “இந்தியாவின் பன்முகத்தன்மையை பார்த்து வியக்கிறேன்“ – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்
- அருணாச்சலப் பிரதேச பகுதியில் பதற்றத்தை குறைக்க இந்திய – சீன தளபதிகள் பேச்சுவார்த்தை
- அனைத்து நாகரிகங்களையும் மதித்து அங்கீகரிக்க வேண்டும்: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டறிக்கை
ஈரான் மீது கடந்த பிப். 28 ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து நடத்திய தாக்குதல்களில் தலைமை மதகுரு கமேனி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கொல்லப்பட்டனர். மேலும், மினாப் நகரத்திலுள்ள பள்ளிக்கூடத்தின் மீதும் அமெரிக்கப் படைகள் நடத்தியத் தாக்குதலில் 120 பள்ளிக் குழந்தைகள் உள்பட 178 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், போர்க்குற்றங்கள் எனக் குற்றஞ் சாட்டப்படும் இந்தச் சம்பவங்களுக்கு குறித்து அய்ரோப்பிய மற்றும் அமெரிக்க நீதிமன்றங்களில் ஈரானிய அரசு வழக்குத் தொடர்ந்துள்ளதாக, ஈரானின் சட்டவிவகாரத் துறை துணைத் தலைவர் மஜீத் அன்சாரி கூறியுள்ளார்.
இந்த வழக்குகள் அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரங்களைக் கொண்டு முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இவற்றில் சில வழக்குகள் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டுவிட்டன, மற்றவை பதிவு செய்யும் செயல்பாட்டில் இருக்கின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஈரானின் அணுசக்தித் திட்டங்களுக்கு எதிராகக் கடந்த பிப். 28 ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் ஈரானின் முக்கிய நகரங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தின. இதையடுத்து, இருதரப்புக்கும் இடையே வெடித்த இந்தப் போரில், பன்னாட்டு எரிபொருள் வழங்கும் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையைக் கைப்பற்றவே அமெரிக்க படைகள் மும்முரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
“இந்தியாவின் பன்முகத்தன்மையை பார்த்து வியக்கிறேன்“ – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்
ரஷ்யா, நவ. 23- இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பார்த்து வியக்கிறேன் என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: உலக நாகரிகங்களில் இந்திய நாகரிகமே மிகவும் பழமையானது. இந்தியாவின் வரலாறை படிக்கும்போது மிகுந்த வியப்பு அளிக்கிறது. அண்மையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தபோது இந்திய மக்களில் எத்தனை பேர் பிரதான மொழியை பேசுகின்றனர் என்று கேள்வி எழுப்பினேன்.
அப்போது அவர், மூன்றில் ஒரு பகுதி மக்கள் மட்டுமே; இதர இரு பங்கு மக்கள் அவரவர் தாய்மொழியைப் பேசுகின்றனர் என்றார். சுமார் 150 கோடி இந்தியர்களில் 60 கோடி பேர் மட்டுமே பிரதான மொழியை பேசுகின்றனர். இது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பார்த்து வியக்கிறேன்.
ரஷ்யாவில் பழங்கால கிறிஸ்தவம், புத்த மதம், யூத மதம், முஸ்லிம் மதங்களைச் சேர்ந்த மக்கள் ஒற்றுமையாக வசிக்கின்றனர். தற்போது சுயநலம் கொண்ட தலைவர்கள் உக்ரைனை ஆள்கின்றனர். ரஷ்யாவும் உக்ரைனும் ஒன்றாக நிற்க வேண்டும். உக்ரைன் ராணுவ வீரர்கள் சரண் அடைய அவசியமில்லை. ரஷ்யாவின் பக்கம் நிற்க வேண்டும். இவ்வாறு அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
அருணாச்சலப் பிரதேச பகுதியில் பதற்றத்தை குறைக்க இந்திய – சீன தளபதிகள் பேச்சுவார்த்தை
புதுடில்லி, நவ. 23- அருணாச்சல் எல்லையில் பதற்றத்தைத் தணிப்பது தொடர்பாக இந்திய-சீன ராணுவத் தளபதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அருணாச்சல பிரதேசத்தை தனது நாட்டின் ஒரு பகுதி எனக்கூறி சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. ஆனால், இந்தியா, இதை திட்டவட்டமாக நிராகரித்து, அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத ஒரு பகுதி என்று கூறி வருகிறது. இந்த சூழலில் அருணாச்சலப் பிரதேச எல்லையில் பல இடங்களில் இந்திய-சீன படைகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதாக இந்தோ – திபெத் எல்லை காவல் படை தலைமை இயக்குநர் சத்ருஜித் கபூர் கடந்த மாத இறுதியில் தெரிவித்தார்.
இது இருநாடுகளுக்கு இடையே பதற்றமான சூழலை உருவாக்கியது. இந்நிலையில், இருநாடுகளின் உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எல்லையில் மோதல் போக்குகளை தவிர்ப்பது, கடுமையான குளிர்கால மாதங்களுக்கு முன்னதாக பதற்றத்தைத் தணிப்பது குறித்து விரிவாக ஆலோசனை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
அனைத்து நாகரிகங்களையும் மதித்து அங்கீகரிக்க வேண்டும்: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டறிக்கை
புதுடில்லி நவ. 23- உலகின் ஒவ்வொரு நாகரிகத்துக்கும் சமமான மதிப்பும், அங்கீகாரமும் அளிக்க வேண்டும் என்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) நாகரிகங்களுக்கு இடையிலான கலந்துரையாடல் மன்ற கூட்டறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
எஸ்சிஓ அமைப்பில் இந்தியா, பாகிஸ்தான், ரஷியா, சீனா உள்பட பல்வேறு நாடுகள் இடம்பெற்றுள்ளன. கடந்த நவ.20-ஆம் தேதி புது டில்லியில், அந்த அமைப்பின் நாகரிகங்களுக்கு இடையிலான கலந்துரையாடல் மன்ற நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.
ஒன்றிய கலாசாரம் மற்றும் வெளியுறவு அமைச்சகம் சார்பில் 3 நாள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பாகிஸ்தான் அமைச்சர் முசாதிக் மாலிக் உள்பட உறுப்பு நாடுகளைச் சேர்ந்த முக்கயி பெருமக்கள் பலர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த நிலையில், அந்த மன்றம் வெளியிட்ட கூட்டறிக்கையில், ‘உலகின் ஒவ்வொரு நாகரிகத்துக்கும் சமமான மதிப்பும், அங்கீகாரமும் அளிக்க வேண்டும். சட்டவிரோதமாக கலாச்சார பொருள்கள் கடத்தப்படுவதையும், இயற்கைப் பேரிடர்களால் பாரம்பரியச் சின்னங்கள் பாதிக்கப்படுவதையும் தடுக்க வேண்டும்.
கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்த வேண்டும். யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய அங்கீகாரத்தைப் பெறுவதற்காக, நாடுகள் இணைந்து தங்கள் பாரம்பரியச் சின்னங்களைப் பரிந்துரைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
எஸ்சிஓ உறுப்பு நாடுகள் இடையே நடைபெற்ற விவாதங்கள், பரிந்துரைகளின் அடிப்படையில், இந்தக் கூட்டறிக்கை தயாரிக்கப்பட்டதாக மத்திய கலாச்சார துறைச் செயலர் விவேக் அகர்வால் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பாகிஸ்தான் அமைச்சர் பங்கேற்றபோதிலும், இந்தியா-பாகிஸ்தான் இடையே முறைப்படி இருதரப்புப் பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை என்றும் விவேக் அகர்வால் கூறினார்.
